லிபியா அருகில் கடலில் படகு விபத்து 45பேர் உயிரிழப்பு

லிபியா அருகே நடுக்கடலில் படகு விபத்திற்குள்ளானதில் 45பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக் குறித்து இடம்பெயர்விற்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்) மன்றும் ஐ.நா. அகதிகள் நிறுவனம்(யு.என்.எச்.சி.ஆர்) வெளியிட்ட அறிக்கையில், கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிப் பயணித்த போது ஸ்வாரா கடற்கரையில் அவர்கள் பயணித்த படகின் இயந்திரம் வெடித்ததில் ஐந்து குழந்தைகள் உட்பட 45பேர் உயிரிழந்துள்ளனர். 37பேர் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் படகில் பயணித்தவர்கள் செனகல், மாலி, சாட் மற்றும் கானாவைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. காப்பாற்றப்பட்ட 37பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பாதுகாப்பான ஓர் இடத்தை தெரிவு செய்ய மாநிலங்களைக் கேட்டுள்ளதாக ஐ.நா. முகவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான குடியேறிகள் மோசமான மற்றும் பாதுகாப்பற்ற றப்பர் படகுகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற புலம்பெயர்ந்தோரின் இறப்பு எண்ணிக்கை 2014முதல் 20,000 எனக் கணிக்கப்பட்டுள்ளது. 7,000 இற்கும் அதிகமானோர் லிபியாவின் கடலோர காவல்படையினரால் லிபியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு குறைந்தது 302 புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் உயிரிந்ததாக ஐ.ஓ.எம். இன் காணாமல் போன, புலம்பெயர்ந்தோர் திட்டம் மற்றும் யு.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது.