ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி பொது மக்கள் மிகப் பெரிய போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இந்தப் போராட்டத்தை அடக்குவதற்காக பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஆலையைத் திறக்கக் கோரி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதேவேளை இந்த ஆலையிலிருந்து வெளிவரும் புகை காரணமாக பொது மக்கள் நோய்த் தாக்கத்திற்கு உட்படுகின்றார்கள் என்றும், இதனால் ஆலையைத் திறக்கக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றில் மக்கள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு 2019 ஜுன் 27 விசாரணைக்கு வந்த போது, 39 நாட்கள் விசாரணையின் பின் 2020 ஜனவரி 08ஆம் திகதி தீர்ப்பு குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின்னர் அந்த வழக்கு இன்று காணொளி மூலம் மேற்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் இறுதியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று நீதிபதிகள் கூறியதுடன், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

இந்த வழக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் தூத்துக்குடியின் முக்கிய இடங்களில் பொலிசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக சுமார் 1,500 பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கின் தீர்ப்பை அறிந்த பொது மக்கள் பட்டாசு கொழுத்தி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.