இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் 

இந்தோனேசியா, சுமாத்திரா தீவில் உள்ள சினாபங் மவுண்ட் எரிமலை இன்று (10) வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 5 கிலோ மீற்றர் தொலைவிற்குட்பட்ட மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர் என இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஊடகங்களின் செய்திக் குறிப்புகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தோனேசியாவிலுள்ள மவுண்ட் சினாபங் எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது. சுமார் 5,000 அடி உயரத்தில் புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 5 கிலோ மீற்றர் வரையுள்ள மக்கள் வெளியேற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக எரிமலை வெடிப்பு காரணமாக இப்பகுதியிலிருந்து 30,000இற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.

இந்தோனேசியா தீவில் சுமார் 200 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பூகம்பங்கள், சுனாமிகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்படுவது வழக்கம். இதற்கான காரணம் இந்தோனேசியாவின் இருபுறமும் பசுபிக் நெருப்பு வளையம் இருப்பதாகக் கூறப்படுகின்றது.