சட்டியிலே இருந்து நெருப்பிற்குள்ளே குதிப்பேன் என மக்கள் நடந்து கொள்ளக் கூடாது

தீர்வு என்பது இன்னமும் வரவில்லையே என அங்கலாய்ப்பது எங்களுக்கு விளங்குகின்றது. அதற்காக சட்டியிலே இருந்து நெருப்பிற்குள்ளே குதிப்பேன் என்ற வகையில் மக்கள் நடந்துகொள்ளக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையிலும் இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்ததின் அடிப்படையிலும் இந்த நாட்டில் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்புக்கு இடமுண்டு.அதனை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன்,தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி என்.கே.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாங்கள் எங்களுடைய மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம். இது எமது மக்களுக்குத் தெரிந்த விடயமாகும். நாங்கள் நியாயமாக நேர்மையாக எங்களுடைய மக்களின் அரசியல் தீர்விற்காக உழைப்பவர்கள் என்பது எமது மக்களுக்குத் தெரிந்த விடயமாகும்.

தீர்வு என்பது இன்னமும் வரவில்லையே என அங்கலாய்ப்பது எங்களுக்கு விளங்குகின்றது. அதற்காக சட்டியிலே இருந்து நெருப்பிற்குள்ளே குதிப்பேன் என்ற வகையில் மக்கள் நடந்துகொள்ளக்கூடாது.

இந்தத் தருணத்திலே நாங்கள் நிதானமாக சிந்தித்து சரியான விதத்தில் செயற்படவேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சென்றதடவை 3ஆசனங்களைப் பெற்றோம். அதற்கு முதற்தடைவ 3ஆசனங்களைப் பெற்றோம். இந்தத் தடைவ அதைவிட கூடுதலான ஆசனங்களைப் பெறுவோம். அதுதான் இந்தத் தடவை தமிழ் மக்கள் ஒன்றாக நிற்கின்றார்கள் என்ற செய்தியாக ஒரு எழுச்சியை காண்பிக்கின்ற செய்தியாக மக்களிடத்திலிருந்து வரவேண்டும்.

குறைந்தது நான்கு ஆசனங்களையாவது மட்டக்களப்பு மாவட்டத்திலே பெற்று கடந்த தடவை இருந்த எழுச்சியைவிட நாங்கள் கூடுதலாக ஒன்றாக வடக்கும் கிழக்கும் சேர்ந்த ஒரே தமிழ் மக்களுடைய அணியாக ஒரே அரசியல் நிலைப்பாட்டிலே நிற்கின்றோம் என்ற செய்தியை விஷேடமாக இந்த அரசாங்கத்திற்கும் உலகத்திற்கும் நாங்கள் சொல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டார்