தமிழரசுக் கட்சியும் அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளை ஏற்க வேண்டும்; சம்பிக்க ரணவக்க

“பிரிவினைவாதிகளுக்கு உலகில் எங்குமே இடமில்லை” எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, “ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைப் போல, தமிழரசுக் கட்சியினரும் அரசாங்கத்தோடு இணைந்து, அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என !வலியுறுத்தியுள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக நேர்காணலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதில் தொடர்ந்துரையாற்றிய அவர், “நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான இலக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை வீழ்த்துவதே எனவும் நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

“ஐக்கிய தேசிய கட்சி என்ற கட்சி, தற்போது இல்லை. அந்தக் கட்சியிலிருந்த அனைவரும், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியில் பல தலைவர்கள் இருக்கிறார்கள்” எனவும் தெரிவித்தார்.

தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டைவிட்டுச் செல்ல வேண்டும்; இலங்கை என்பது, சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு என்ற நிலைப்பாடு தங்களுக்கு இல்லை எனவும் தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் வாழ்வதற்கான ஜனநாயக உரிமைகளைத் தாம் மதிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.