நாம் அனுப்பிய பிரிதிநிதிகள் இதுவரை சாதித்தது என்ன?

தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை. இதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் ஆணையூடாக பெற்றுக்கொள்கின்ற மக்களவை அதிகாரத்தை பொது நலனுக்காகப் பயன்படுத்தும் சமூக அக்கறை கொண்ட சேவை மனப்பாங்காளர்களை நாம் சபையேறச் செய்யவேண்டும் என ”குரலற்றவர்களின் குரல்” (The Voice of the Voiceless) என்ற அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பளர் மு.கோமகன் என்பவரால் ஒப்பமிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையை இங்கு தருகிறோம்:

கொரோனா என்கின்ற வைரசின் கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஒன்று இடம்பெறப்போகின்றது. இதற்கு சகல அரசியல் கட்சிகளும் தம்மைத் தயார்படுத்தும் பொருட்டு மக்களாகிய எம்மை நோக்கி அணிதிரள்கின்றனர். கட்சி ரீதியாக மட்டுமன்றி வேட்பாளர்கள் தமது விருப்பு வாக்குகளுக்காகவும் தத்தமது வெறுப்புணர்வுகளை ஒத்திவைத்துவிட்டு,தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட தமிழர் நலன்கள் தொடர்பிலும் பரவலாகப் பேசி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் நடைபெறப்போகின்ற தேர்தலில் வெற்றிபெற்று எவர் ஆட்சி அமைத்தாலும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் இருந்து விலகிச்செல்ல முடியாது. இவ்வாறு ஏற்படுத்தப்படுகின்ற தீர்வானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதாகவும் நாட்டு மக்களின் அங்கிகாரத்தை பெறுவதாகவும் அமைய வேண்டும்.

தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகள் எந்த விதத்திலும் விட்டுக்கொடுப்புக்கோ சமரசத்திற்கோ உட்படுத்த முடியாதவை. இதனை வென்றெடுப்பதற்காகவே பல்வேறு இழப்புக்களை எதிர்கொண்டு போராடி வருகின்ற ஒரு சமூகமாக தமிழினம் அடையாளப்பட்டு நிற்கின்றது. தமிழ்த் தேசியம் பேசுகின்ற மொத்தக் கட்சிகளும் என்றுமில்லாதவாறு இன்று விடல் தேங்காய்களாக சிதறி உதிரிகளாக எங்கள் முற்றங்களில் வந்து நிற்கின்றார்கள். இந்த வகையில் இந்தப் பொதுத் தேர்தல் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது.

தமிழ்த் தலைமைகள் இன்று தேர்தல் அரசியலில் காட்டும் ஆர்வத்தை,அவசரத்தை தமிழ் மக்களின் நலன் சார்ந்து, தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்துச் செயலாற்றுவதில் அக்கறையற்றிருப்பது வேதனையளிக்கின்றது.

நமது மக்கள் எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் அன்றாட பிரச்சினைகளில் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணி விடுவிப்பு என்பன அவசியமாகவும் அவசரமாகவும் தீர்க்கப்படவேண்டிய முக்கிய விடயங்களாக காணப்படுகின்றன.

இதில் சிறைக்கூடங்களில் அன்றாடம் செத்துக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரமானது மனிதாபிமான அடிப்படையில் ஆற்றவேண்டிய முதன்மைக் கருமமாகும் என்பதை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 11 முதல் 25 வருடங்களாக தென்னிலங்கை சிறைச்சாலைகளில் சூழ்நிலைக் கைதிகளாக தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுள்

கொழும்பு புதிய மகஸீன் சிறைச்சாலையில் – 40 பேரும்,
அனுராதபுரம் சிறைச்சாலையில் – 26 பேரும்,
வெலிக்கடை ஆண்கள் சிறைச்சாலையில் – 03 பேரும்,
மகர சிறைச்சாலையில் – 02 பேரும்,
நீர்கொழும்பு சிறைச்சாலையில் – 02 பேரும்,
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் – 01 வரும்,
கண்டி தும்பறை சிறைச்சாலையில் – 01 வரும்,
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் – 01 வரும்,
களுத்துறை சிறைச்சாலையில் – 01 வரும்,
பொலநறுவை சிறைச்சாலையில் – 01 வரும்,
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் – 01 வரும்,

என 79 கைதிகள் உள்ளனர்.

இவர்களில், விளக்கமறியல் கைதிகளாக – 35 பேரும்,
மேன்முறையீட்டு கைதிகளாக – 16 பேரும்,
தண்டனைக் கைதிகளாக – 26 பேரும்,
ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்ட கைதிகளாக – 02 பேரும்,
என நான்கு வகையினர் அடங்குகின்றனர்.

அதிகாரம் பெறுகின்ற அரசாங்கங்களும் சரி, அரசியல்வாதிகளும் சரி, அரசியல் கைதிகளை “நாம் படிப்படியாக விடுத்துள்ளோம்” என்ற கூற்றை பாலபாடமாகக் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது.

சிறைத் தடுப்பில் இருந்து இதுவரை வெளியேறிய அரசியல் கைதிகள் அனைவரும் தனிப்பட்ட ரீதியில் சட்டத்தரணிகளை அமர்த்தி வழக்காடி விடுதலை பெற்ற ஒருசிலரைத் தவிர ஏனையவர்கள் எப்படியாவது விரைவில் விடுதலைபெற்று குடும்பங்களுடன் இணைய வேண்டும் என்பதற்காக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை வலிந்து ஏற்றுக்கொண்டு அதற்கான தண்டனைகளை அனுபவித்தே விடுதலை அடைந்துள்ளார்கள்.

மேலும்,இங்கு எவர் ஒருவரும் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்,தமது அரசியல் காய்நகர்த்தலுக்காக ஒருவரை விடுவித்துள்ளார். இது ஒரு அப்பட்டமான அரசியல் நாடகம்)

குறிப்பாக,இன்று தமிழ்த் தலைமைகளில் பெரும்பாலானனோர் சட்டத்தரணிகள். ஆனால், இவர்கள் தமது சட்ட அறிவைப் பயன்படுத்தி கைதிகள் விடுவிப்பிற்கு அல்லது இந்தக் கைதிகள் விவாகாரம் அரசியல் பிரச்சினையாகப் பரிணாமம் பெறுவதற்கு உரிய சாத்தியமான செயற்பாடுகள் எதிலும் இவர்கள் பங்குகொள்ளாமல் இருக்கின்றார்கள் என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.

தமிழ்த் தலைமைகள் ஆளும் சிங்களத் தரப்பு அதிகார வர்க்கத்திற்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளுக்கு மட்டும் தமது சட்ட அறிவைப் பயன்படுத்தி தீர்வுகள் கிடைக்கவும் பதவிகளைத் தக்கவைக்கவும் இவற்றுக்காக உழைக்கும் ஆர்வத்தை, முயற்சியை,தமிழ்க் கைதிகள் விவகாரம்,காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், நிலம் மீட்பு விவகாரம் உள்ளிட்ட எதிலும் அக்கறைப்படுவதில்லை, ஆர்வம் காட்டுவதில்லை.

இந்த தமிழ்த் தலைமைகளுக்கு தமிழ் மக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும். இந்த அவலமும் துன்பமும் இன்னும் எத்தனை காலத்திற்கு நீடிக்குமோ! ஆம், நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது.

எப்போதும்போல தேர்தல் என்று வருகின்ற வேளைகளில் அல்லது கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் அரசியல் கைதிகள் விவகாரத்தை கையில் எடுப்பதும் அதன் பின்னர் கைவிடுவதும் அரசியல்வாதிகளுக்கு பழகிப்போய்விட்டது.

இந்த வகையில் திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட கைதிகள் உடல், உள ரீதியில் பாதிக்கப்பட்டு சிறைக் கூடங்களுக்குள் பரிதாபகரமாக மடிந்துபோனவர்கள் பலருள்ளனர். இதுபோக மீதமுள்ளவர்கள் நடைப்பிணங்களாக நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை இழந்த இவர்களால் இனிமேலும் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டு தற்கொலைக்கு ஒப்பான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஆகவே,அரசியல் கைதிகளின் சிறைச்காலத்தை தண்டனைக் காலமாகக் கருதி, அரசியல் அமைப்பின்படி ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் தீர்மானம் எடுத்து கைதிகளின் விடுதலைக்கு சிறந்த பொறிமுறையை விரைவாக முன்னெடுக்கவேண்டும்.

குறைந்த பட்சம் தமிழ்க் கைதிகள் விடயத்திலேனும் உரிய தீர்வை காண முடியாவிட்டால் வேறெந்தப் பிரச்சினைகளையும் அரசாங்கம் தீர்த்து வைக்குமா? என சிந்திக்க வேண்டும்.

தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை. இதனை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் ஆணையூடாக பெற்றுக்கொள்கின்ற மக்களவை அதிகாரத்தை பொது நலனுக்காகப் பயன்படுத்தும் சமூக அக்கறை கொண்ட சேவை மனப்பாங்காளர்களை நாம் சபையேறச் செய்யவேண்டும்.

இதுவரை நாம் அனுப்பிய பிரிதிநிதிகள் சாதித்தது என்ன… என்ன…? நாம் வெறுமனே வாக்காளர்களாக இருந்திருக்கின்றோமே ஒழிய சமூக பொறுப்புவாய்ந்த பிரஜைகளாக இல்லை.

இந்த உண்மை தமிழ்த் தலைவர்களுக்கும் சிங்களத் தலைமைகளுக்கும் நன்கு புரிந்திருக்கின்றது. இதனால்தான் இவர்களால் தொடர்ந்தும் நாம் ஏமாற்றப்படுகின்றோம். இது தொடர வேண்டுமா…..?

தற்போது சிந்தித்து செயலாற்றவேண்டிய தருணம் இது. எவராலும் தொடர்ந்தும் ஏமாற்றப்படாமல் நாம் விழித்துக்கொள்வோம்.

………………………
மு.கோமகன்
ஒருங்கிணைப்பாளர்

[email protected]

TP : 0776979535

Date : 28.07.2020