முஸ்லீம் பெண்கள் தொடர்பான கூட்டத்திற்கு பெண்கள் அழைக்கப் படாமைக்கு கண்டனம்

முஸ்லீம் விவாக விவாகரத்து சட்ட மறுசீரமைப்பு தொடர்பான முன்வைக்கப்பட்டுள்ள மறுசீரமைப்பு அறிக்கை தொடர்பில் மீண்டும் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் கலந்துரையாடுவதனை எதிர்க்கும் முஸ்லீம் பெண்கள் அமைப்புகள் பெண்கள் சார்பாக எவ்வகையான முடிவுகள் இங்கு எடுக்கப்படும் என்று தெரியாது என்றும் இந்த கூட்டத்திட்கு பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் அழைக்கப்படாமை குறித்து கண்டனம் விடுத்துள்ளன.

முஸ்லீம் விவாக விவாகரத்து சட்ட மறுசீரமைப்பு தொடர்பான அறிக்கையை நீதி அமைச்சர் குறைந்த பட்ச அடிப்படையாக கருத்தில் கொண்டு அதட்கான பாராளுமன்ற அங்கீகாரத்தினை மிக விரைவாக செயட்படுத்த வேண்டும் என்று முஸ்லீம் பெண்கள் அமைப்புகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்குமான விவாக வயதெல்லை 18 ஆக காணப்படுவது போன்று முஸ்லீம் பெண்களுக்கும் விவாக வயதெல்லை 18 ஆக அமைய வேண்டும். பெண்கள் காதி நீதிபதியாக வர வேண்டும். திருமணப்பதிவு கட்டாயமாக்கப்படல் வேண்டும் ஆகிய கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்துள்ளனர்.

1951 ஆம் இயற்றப்பட்ட 13 ஆம் இலக்க முஸ்லீம் விவாக விவாகரத்து சட்டத்தில் இதுவரை எவ்வித மறுசீரமைப்பும் இடம் பெறவில்லை. இந்த சட்டத்தில் காணப்படுகின்ற பெண்களுக்கு எதிரான பாரபட்சமான விடயங்கள் தொடர்பில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் அமைப்புகள் போராடி வருகின்றன.