மீளவும் தன்னாட்சி கோரிக்கையும் தமிழின அழிப்புக்கான நீதியும் தேர்தல் கோசங்களாகின்றன

இலங்கையின் பொதுத் தேர்தல் களத்தில் போட்டியிடும் மூன்று முக்கிய தமிழர் கட்சிகளுமே மீளவும் தன்னாட்சிக் கோரிக்கையையும், தமிழின அழிப்புக்கான நீதியையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக் கூறலையும் ஏதோ ஒரு வகையில் முன்வைத்துள்ளன.

ஆயினும் இதே கட்சிகள் கடந்த பதினொரு ஆண்டுகளாக தாங்கள் இன்று மீளவும் முதன்மைப்படுத்தும் இந்த முக்கோரிக்கைகளுக்குமான சனநாயக வழியிலான போராட்டங்கள் எவற்றையும் முதன்மைப்படுத்தித் தாங்கள் முன்னெடுக்கவில்லை.

இதனால் தாங்கள் தேர்ந்தெடுத்த, தங்களின் பிரதிநிதிகளின் துணையின்றியே பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள் தாமாகவே முன்னெடுத்த சனநாயக வழியிலான மக்கள் போராட்டங்களை அரசியல் கோரிக்கையாக முன்னெடுப்பதிலும் மக்களின் இந்தக் கோரிக்கைகளுக்கு உதவுமாறு அனைத்துலக நாடுகளை, அனைத்துலக அமைப்புக்களைக் கோருவதிலும் இந்தத் தமிழ் அரசியல்வாதிகள் போதிய கவனமோ, அக்கறையோ கூடச் செலுத்தாததினாலேயே சிறீலங்கா அரசாங்கத்தால் இனப்பிரச்சினையே அங்கு இல்லை, பெரும்பான்மையினர் விரும்பாத எந்த அரசியல் அதிகாரப் பரவலாக்கலையும் செய்ய மாட்டோம் என உலகுக்குப் பகிரங்கமாக அறிவிக்க முடிந்தது.

இன்று தங்கள் தேர்தல் கொள்கைத் திரட்டில் மக்களிடமே இறைமை உள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்றத் தேர்தல் 2020 தேர்தல் அறிக்கையில் மீளவும் அறிவித்துள்ளனர்.

கூடவே 2002இல் நோர்வேயின் அனுசரணையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையின் “ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைகளின் பிரகாரம் சமஸ்டிக் கட்டமைப்பின் அடிப்படையில் அமைந்த தீர்வொன்றை ஆராய்தல்” என்னும் அரசியல் தீர்வுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையை மீளவும் வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால் இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான திரு சம்பந்தன் அவர்கள் தாம், தந்தை செல்வா கேட்டது சமஸ்டி அல்ல என உலகுக்கு 2009இற்குப் பின்னர் அறிவித்து, சிங்கள பௌத்த பேரினவாதத்தைப் பலப்படுத்தியவர். தமிழர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்து தனது பதவிக் காலத்தில் வாய் திறவாதது மட்டுமல்ல, தங்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்தக் காலத்திலும் கொள்கைத் தொடர்பு கூட இல்லையென மறுத்து, சிங்கக் கொடியைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்து, சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு பெருமகிழ்ச்சி ஊட்டியவர். இப்படியான பல செயற்பாடுகளின் மூலம் தமிழர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் தனித்துவத்தை இவர் வெளிப்படுத்தாததின் விளைவாகவே சிறீலங்காவால் இனப்பிரச்சினையே இல்லை எனக் கூற முடிந்தது.

அது மட்டுமல்ல இன்றைய கோத்தபாயா அரசாங்கம் மேலும் ஒரு படி பௌத்த சிங்கள பேரினவாதத்தை உயர்த்தி இலங்கையில் இனங்களே இல்லை; வந்தேறு மக்கள் தொகுதியினரே உள்ளனர் என்னும் மிகவும் அபாயகரமான புதிய இனவெறிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதிகளில் அதிக எண்ணிக்கையைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையாலாகத்தன அரசியலே காரணமாகியது.

ஆனால் இன்று தேர்தல் அறிக்கையில் “சர்வதேச நியமங்களின் படியும், சர்வேதேச சாசனங்களின் பிரகாரமும் தமிழர்களாகிய நாங்கள் சிறப்பு மிக்க மக்கள் குழாமாவோம்” எனத் தமிழர்களின் வெளியக சுயநிர்ணய உரிமை குறித்துக் குறிப்பிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இனியாவது ஈழத்தமிழர்களின் வெளியக சுயநிர்ணய உரிமைதான் அவர்களைப் பாதுகாக்கும் என்ற இன்றைய நடைமுறை அரசியல் எதார்த்தத்தை உலகுக்குத் தெளிவுபடுத்துவார்களா? என்பது சந்தேகமே.

அவ்வாறே “இலங்கை நாடு ஏற்றுக் கொண்டு, கைச்சாத்திட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் குடியியல் உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சாசனத்திலும், பொருளாதார, சமூக, மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான சாசனத்திலும் அடங்கி இருக்கும் விதிகளின் பிரகாரம், தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான மக்கள் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்”

என இன்று அறிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனை கடந்த பத்தாண்டுகளில் உலகுக்கு தங்கள் சார்பாக எந்த அளவுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்? தமிழின அழிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்க்கான நீதி குறித்து வெளியுலகிற்கு எந்த அளவுக்கு எடுத்துக் கூறியுள்ளார்கள்? இவற்றின் அடிப்படையிலே தேர்தல் அறிக்கையை ஆராய்ந்தே தமிழ் மக்கள் தேர்தல் அறிக்கை குறித்து தங்கள் தீர்ப்பை வாக்களிப்பு மூலம் வெளிப்படுத்த வேண்டியவர்களாக உள்ளார்கள்.