இராணுவ சர்வாதிகாரம் ஏற்கனவே வடக்கு கிழக்கில் நடைமுறையில் உள்ளது-விக்னேஸ்வரன்

நாடெங்கும் இராணுவ சர்வாதிகாரம் வரப் போகின்றதென்று பெரும்பான்மையினர் அச்சம் கொண்டுள்ள நேரத்தில் வடக்குக் கிழக்கில் அது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்பதே உண்மை. பலருக்கு இது விளங்கவில்லை என இன்று (18.07.2010) கிளிநொச்சியில் உரையாற்றிய தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர் திரு. க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்;

நாளுக்கு நாள் எம் மத்தியில் படையினர் தொகை அதிகரித்து வருகின்றது. எமது ஜனாதிபதி ஒரு முன்னைய இராணுவவீரர். எனவே வருங் காலம் எப்படி அமையும் என்பதில் பலத்த கரிசனை பலர் மத்தியில் இப்பொழுது எழுந்துள்ளது. இம்முறை நடத்தவிருக்கும் தேர்தல் சரியாக,முறையாக,ஜன நாயக முறைப்படி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் கொரோனாவைச் சாட்டி இராணுவ பிரசன்னம் தற்போது அளவுக்கதிகமாக வட மாகாணத்தில் ஏற்பட வழி அமைத்திருப்பதேயாகும்.

கனடாவில் இருந்து வருகை தந்த John Tory என்ற நகரபிதா என்னுடன் முள்ளிவாய்க்கால் நோக்கிப் பயணம் செய்து வந்த போது முல்லைத்தீவில் காணுமிடமெல்லாம் இராணுவ முகாம்கள் அமைந்துள்ளதைப் பார்த்து இங்கு யுத்தம் முடிவடையவில்லையா என்று கேட்டார். அப்போது போரின் பின் 9 வருடங்கள் கழிந்த நிலையில் ஏன் இவ்வளவு படைமுகாம்கள் என்ற கேள்வியை அவர் முன்வைத்தார். அந்த நிலை மாறவில்லை. மாறாக இன்னமும் விரிவடைந்து வருவதை நாம் இன்று பார்க்கின்றோம்.

இன அழிப்பு என்பது தமிழ் மக்களைக் கொல்வது மட்டும் அல்ல. கலாசார இனவழிப்பு,கல்விசார் இன அழிப்பு,பொருளாதார இன அழிப்பு,கட்டமைப்புக்களின் இன அழிப்பென்று பல இன அழிப்புக்கள் உண்டு.

இவ்வாறான பல வித இன அழிப்பு நடவடிக்கைகள் வடகிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை அறிஞர்கள் பலர் வெளிக்காட்டியுள்ளார்கள்.
எம்மைக் கண்காணிக்கும் படையினரில் 99 சதவிகிதமானவர்கள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எம்முடன் பழகும் பொலிசாரில் 95 சதவிகிதமானவர்கள் அதே பெரும்பான்மையினர்.

இதன் அர்த்தமென்ன? பெரும்பான்மையினருக்கு எம்மிடையே எதையும் நிகழ்த்த, எதையும் செய்ய, எதைச் செய்தாலும் அதற்கான பொறுப்புக் கூறலில் இருந்து அவர்களை விடுபடச் செய்ய.சட்டப்படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே நாடெங்கும் இராணுவ சர்வாதிகாரம் வரப் போகின்றதென்று பெரும்பான்மையினர் அச்சம் கொண்டுள்ள நேரத்தில் வடக்குக் கிழக்கில் அது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்பதே உண்மை. பலருக்கு இது விளங்கவில்லை.

இராணுவ சர்வாதிகாரம் வடக்குக் கிழக்கில் ஏற்படுத்தப் படப்போவது மற்றைய மாகாணங்களில் ஏற்படுத்தப் போகும் அதே காரணங்களுக்கு அன்று.

எமது கட்சி இவை யாவற்றையும் உணர்ந்தே அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. எமக்கு மக்களின் அனுசரணையும் ஆதரவும் கிடைத்தால் எமக்கு அதிகாரம் தானாகவே கிடைக்கும்.

அந்த அதிகாரம் எம்மை எம் மக்களின் ஈடேற்றத்திற்கு உழைக்க உதவும். அந்த அதிகாரம் எம்மை பிறநாட்டு அலுவலர்களுடன் எம் மக்கள் சார்பில் கலந்துறவாட வழிவகுக்கும். அந்த அதிகாரம் எமக்கு எதிராகச் செயற்படும் சக்திகளுக்கு எதிராகத் துணிந்து நிற்க உதவிபுரியும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.