சீன எல்லையில் பீஷ்மா பீரங்கிகளை நிறுத்தும் இந்தியா

இந்திய – சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சக்தி வாய்ந்த டி – 90 பீரங்கிகளை நிறுத்தியுள்ளது.

கடந்த மாதம் 15ஆம் திகதி ஊடுருவ முயன்ற சீன இராணுவத்தினருக்கும், இந்திய இராணுவத்தினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்தியத் தரப்பில் 20 படையினரும், சீன தரப்பில் 35 படையினரும் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து இரு நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்து லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. ஆனால் கல்வான் பகுதியில் சீனா தனது படைகளைக் குவித்து வரும் காடசிகள் செயற்கைக் கோள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது.

அத்துடன் சீனா தனது உரிமை கோரும் பகுதியைக் கடந்து 423 மீற்றர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இரு நாடுகளும் சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதும் இரு நாடுகளும் படைகளைக் குவித்த வண்ணமே உள்ளன.

இந்நிலையில் இந்தியா தனது சக்தி வாய்ந்த டி – 90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவில் குவித்து வருவதாகவும், இந்த பீரங்கி துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் எனவும் இதில் ஒரு நிமிடத்தில் 60 குண்டுகளை ஏவ முடியும் என்றும் கூறப்படுகின்றது.

இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்தப் பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. 48 தொன் எடை கொண்ட இந்தப் பீரங்கி ஆயிரம் குதிரை விசை வலுவுடையது.