கைம்பெண்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும்(நேர்காணல்) -சுபாசினி சிவதர்சன்

உலக கைம்பெண்கள் நாளையொட்டி வவுனியா பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி அலுவலர் சுபாசினி சிவதர்சன் அவர்களுடனான நேர்காணல்

கேள்வி – சர்வதேச ரீதியில் விதவைகளுக்கு என்று ஒரு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக உங்கள் கருத்து?

பல தினங்கள் ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதவைகள் தினத்தை கொண்டாடும் தினமாக அல்லாது, விதவைகளுக்கு ஒரு சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று,  அதை ஒரு விழிப்புணர்வு தினமாக கொண்டாடலாம் என நான் நினைக்கிறேன்.

கேள்வி -நீங்கள் வேலை செய்யும் மாவட்டங்கள், இடங்கள், பிரதேசங்களில் எத்தனை பேர் கணவனை இழந்தவர்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்டவர்கள் இருக்கின்றனர் என்பதை குறிப்பிட முடியுமா?

நான் வேலை செய்வது வவுனியா பிரதேச செயலகம். இது வவுனியா மாவட்டத்தில் உள்ள 4 பிரதேச செயலகத்தில் ஒன்று தான் இந்த பிரதேச செயலகம்.இந்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட தரவின்படி பார்த்தால், 3,895 குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக இருக்கின்றார்கள்.இதில் கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் அடங்குவர். யுத்தத்தில் கணவனை இழந்தவர்கள் 385 பேர் வவுனியா பிரதேச சபையின் கீழ் இருக்கின்றனர்.

கேள்வி – பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சுயமாக வாழ்வதற்கு சமூகத்தில் உள்ள இடர்கள் என்ன உள்ளது?

விதவைகள் என்ற பதத்தை விட, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்று கூறுவது அவர்களுக்கு ஒரு கௌரவத்தைக் கொடுக்கும் என நினைக்கிறேன். விதவைகள் என்னும் சொல் அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். நான் ஒரு பெண்ணை சந்தித்த போது, தாங்கள் இருக்கும் இடத்தில் விதவைகள் அதிகமாக இருப்பதால், அந்த தெருவை  விதவைகள் தெரு என்றே அழைப்பார்கள் என்று கூறினார். அவர்கள் பகுதியில் ஒரு ஆண் ஒரு தேவைக்கு வரும் போது மற்றவர்களால் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதாக கூறப்படுகின்றது. நான் வேலை செய்யும் பிரிவில் இப்படியான சம்பவங்களை நான் எதிர்கொண்டுள்ளேன்.suba 1 கைம்பெண்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும்(நேர்காணல்) -சுபாசினி சிவதர்சன்

கேள்வி -அவர்கள் வேலை செய்யும் இடங்களிலும், வெளியிலும் எவ்வகையான பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்?

பொதுவான பாதிப்பு என்று பார்க்குமிடத்து பாலியல் சுரண்டல் பொதுவாக எல்லா இடத்திலும் உள்ளது. இது சாதாரண கூலி வேலை செய்யும் இடங்களிலும் சரி, திணைக்களங்களிலும் சரி, நேரடியாகவோ, மறைமுகமாகவோ இருப்பதாக நான் சந்தித்த பெண்களிடமிருந்து அறிந்து கொண்டேன்.

கேள்வி-பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தாங்களும் சமூகத்தில் ஒரு உயர் நிலையை அடைவதற்கு இலங்கையில் அதுவும் எங்கள் வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எவ்வாறான திட்டங்களை முன்மொழிந்தால், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும், தங்கள் குடும்பங்களையும் தங்களின் பிள்ளைகளின் கல்விச் செலவுகள், கல்வி முன்னேற்றங்களை கொண்டு செல்ல உதவியாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

மகளிர் அமைச்சு, பல நிறுவனங்கள் என்பன பல திட்டங்களை கொண்டு வருகின்றார்கள்.அவர்களுக்கு மறு வாழ்வு என்பது சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திட்டமாக இருக்க வேண்டும். இன்னொருவருடன் சேர்ந்து வாழுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். அதை நாங்கள் சரியாக வழிநடத்தா விட்டால் அதுவே சமூக சீர்கேடாக மாறிவிடும். எனவே மறுவாழ்வு என்ற முறைக்கு திருமணம் என்ற ஒரு முறையை நாங்கள் அங்கீகரிக்க வேண்டும்.

வயதானவர்கள் விதவைகளாக உள்ள இடங்களில் அவர்களின் சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும் என்பது தொடர்பாக, சட்டம் ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவற்றை விதவைகள் என்று பார்க்காது, பெண்களின் உரிமைகள் என்னும் விதத்தில் கொண்டு வந்தால், பெண்ணிற்கு தேவையான சமூக பாதுகாப்பு, சுகாதாரம், பிள்ளைகளின் கல்வி தொழில் ஆகியவற்றின் உரிமைகளை பெற்றுக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். பெண்கள் உரிமைகள் என்பதன் ஊடாக அவர்களின் அங்கீகாரங்களை நடைமுறைப்படுத்தலாம்.

கேள்வி -வவுனியா மாவட்டத்தில் போருக்கு பிற்பட்ட காலத்திலும், தற்போதைய கொரோனா காலத்திலும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவுகள் ஏதாவது உங்களிடம் உள்ளதா? அவர்கள் எந்தவிதமான மன உளைச்சல்களில் உள்ளனர்?

வவுனியா பிரதேசம் ஒன்றில் நாங்கள் சந்திப்பு ஒன்றை நடத்தும் போது, நீங்கள் கூட்டுக் குடும்பமாக இருக்கும் போது என்ன நடந்தது என்று விசாரித்தோம். எவரும் சரியான பதிலை கூறவில்லை. ஆனால் அவர்களிடையே கஞ்சா பாவனை இருந்தது. கஞ்சா பாவித்தவர்கள் தற்போது பாவிக்க முடியாத சூழ்நிலையில் இருக்குமிடத்து, குடும்ப வன்முறைகள் அதிகமாக உள்ளன. குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகளில் வன்முறைகள் உள்ளன.

கேள்வி- எதிர்காலத்தில் பெண்கள் வன்முறைகள் அல்லது பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை இல்லாதொழிப்பதற்கு இலங்கை அரசாங்கமோ அல்லது புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்களோ  எவ்வாறான விழிப்புணர்வுத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறீர்கள்?

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மனோதிடத்தில் உறுதியாக இருக்க வேண்டும் அப்படியிருக்கும் பட்சத்தில் தான் நாங்கள் வெளியிலிருந்து வரும் எந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தலாம். முதலில் அவர்களின் மனநிலையை உறுதிப்படுத்துவதற்கு உளவியல் ஆலோசனைகளோ, குழுக்களாக பிரிந்து அவர்களிடத்தில் பேசி அவர்களின் மனதில் ஒரு திடமான நம்பிக்கையை ஏற்படுத்துவது அவசியம்.

கேள்வி -பெண்கள் வன்முறைகள், அடக்குமுறைகளை தடுப்பதற்கு உங்கள் பிரிவால், அல்லது அரசாங்கத்தால் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஏதாவது இருக்கின்றதா?

அவர்கள் அரச திணைக்களங்களில் வந்து தங்கள் முறைப்பாட்டை சொல்ல முடியாத சூழ்நிலையிலும் 1938 எண்ணின் ஊடாகவும், பொலிஸ் திணைக்களத்திலும் முறைப்பாடுகள் செய்யும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பின்னர் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அறிவித்திருந்தார்கள். மற்றும் தொலைபேசி ஊடாகவும் அந்த ஏற்பாடுகளை செய்யக்கூடியதாக இருந்தது.

பெண்கள் அமைப்புகளை ஏற்படுத்தி அவர்கள் ஊடாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டவாறு தான் இருக்கின்றோம். மகளிர் விவகார அமைச்சு எங்களுக்கு ஆதரவாக உள்ளது. அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்களும் அவசரகால நிலைக்கு உதவி செய்கின்றன.

கேள்வி-கூடுதலாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு சட்ட நடவடிக்கைத் தேவைகள் கூடுதலாக இருக்கும்.சட்டத்தை எப்படி அணுகுவது என்று தெரியாதிருக்கும். அவர்களுக்கு உங்கள் பிரிவில் சட்ட ஆலோசனை ஒழுங்குகள்  ஏதாவது இருக்கின்றதா?

பிரதேச செயலகத்தில் சிறுவர், பெண்கள் பிரிவு என்று உள்ளது. அதேபோல பொலிஸ் பிரிவிலும் இந்தப் பிரிவு தனித்திருக்கின்றது. அவர்கள் அங்கு வந்து தனிப்பட்ட முறையில் இரகசியமாக பேசுவதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். அதில் அவர்கள் வந்து முறைப்பாடு செய்யுமிடத்து, அவர்களின் விருப்பங்களுடன் நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.