பூர்வீக மக்களே பூமியின் சுவாசப்பையை பாதுகாக்கின்றனர்-தமிழில் ஜெயந்திரன்

அண்மைக்காலமாக அமசோன் மழைக்காடுகளில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு காட்டுத்தீ, எண்ணிக்கையிலும் தீவிரத்தன்மையிலும் அதிகரித்துவருகிறது. தற்போது பிரேசில் அதிபராக இருக்கின்ற தீவிர  வலதுசாரிப்போக்குடைய பொல் சொனாறோவின் சுற்றுச்சூழலுக்கு எதிரான பரப்புரைகளும் அபிவிருத்தியை மையமாகக்கொண்ட அவரது கொள்கைகளுமே இந்த காட்டுத்தீ அதிகரிப்புக்குக் மூலகாரணமாக அமைவதாக ஆர்வலர்களால் நோக்கப்படுகிறது.

பிரேசில் அதிபரின் இந்த ஆபத்தான கொள்கைகளுக்கு எதிராக கடுமையாகப் போராடுவதற்காக கடந்த ஜனவரி மாதம் 14 இலிருந்து 18 வரை நாற்பத்தைந்து சுதேச சமூகங்களின் பிரதிநிதிகள் சிங்கு கழிமுகத்தில் அமைந்துள்ள ‘பியாரசூ’ என்ற கிராமத்தில் ஒன்றுகூடினார்கள்.

நாம் வாழும் இந்தப் பூகோளத்தின் இதயமாகவும் சுவாசப்பையாகவும் கருதப்படும் அமசோன் பிரதேசத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் ஓர் திருப்புமுனையாக விளங்கும் இச்சந்திப்பு பிரேசில் நாட்டில் அதிகமாக அறியப்பட்ட சுதேச மக்களின் தலைவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ராவோனியால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

பூகோளரீதியிலான காலநிலை மாற்றம், ஏற்கனவே மிக அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் காடழிப்புடன் சேர்ந்து அமசோன் மழைக்காடுகளை வரண்ட பாலைவனமாக மாற்றக்கூடிய மிகவும் ஆபத்தான கட்டத்தை நோக்கி விரைவாக நகர்ந்துகொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துகொண்டிருக்கிறார்கள்.

சாஓ பாவொலோ பல்கலைக்கழகத்தின் புகழ்பூத்த ஆய்வாளரான கார்லோஸ் நோப்ரேயைப் பொறுத்தவரையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேகத்தில் மழைக்காடுகள் அழிக்கப்படுமானால், இன்னும் 10-15 வருடங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டு இந்தப் பூகோளம் முற்றுமுழுதாகவே பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய ஒரு நிலை உருவாகும்.

இந்தப் பூகோளத்தில் வாழும் அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் அமசோன் மழைக்காடுகள் இன்றியமையாதவை. இப்பிரதேசம் ஒட்சிசனை உருவாக்குவதுடன் மிகப்பிரமாண்டமான அளவில் காபனீரொட்சைட் வாயுவை (வருடாவருடம் 2.2 மில்லியன் தொன்கள்) உள்வாங்குகின்றது. மேலும் உலகிலே இருக்கின்ற காடுகளே சமுத்திரங்களிலிருந்து தரையை நோக்கி வீசுகின்ற காற்றுக்கு காரணமாக அமைவதோடு அதனைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளன.indigenous பூர்வீக மக்களே பூமியின் சுவாசப்பையை பாதுகாக்கின்றனர்-தமிழில் ஜெயந்திரன்

இவ்வகையில் உலகின் 20 வீதமான நன்னீர் சுழற்சிக்கு அமசோன் காடுகளே காரணமாகின்றன. இந்த அமசோன் பிரதேசம் அளவில் குறைந்துகொண்டு போனால் கலிபோர்னியா மாநிலத்தின் சியேரா நெவாடா பகுதியில் கிடைக்கும் மழைவீழ்ச்சி ஐம்பது வீதத்தால் குறைந்துவிடும் என்று பிரின்ஸ்ரன் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு கூறுகிறது. அமசோன் அழிவது நாம் வாழும் உலகம் அழிவதற்குச் சமனானது.

ஜனவரி மாதம் நடைபெற்ற தங்கள் சந்திப்பைத் தொடர்ந்து, ‘பியாரசூ விஞ்ஞாபனம்’ என்ற ஆவணத்தை வெளியிட்டு இந்த சுதேச தலைவர்கள் தமக்கும் அமசோன் காடுகளுக்கும் முழு உலகுக்கும் மிகவிரைவில் ஏற்படக்கூடிய ஆபத்தை பிரேசில் நாட்டு மக்களுக்கும் பன்னாட்டு சமூகத்துக்கும் கோடிட்டுக்காட்டியுள்ளார்கள். பொல்சொனாறோ அரசாங்கத்தின் செயற்பாடுகள் இனப்படுகொலைக்கும் சுற்றுச்சூழல் படுகொலைக்கும் சமனானது என்பதை ‘பியாரசூ விஞ்ஞாபனம்’ சுட்டிக்காட்டுகிறது.

சுதேச மக்களான தமக்கும் இயற்கைக்கும் இடையேயான பிரிக்கமுடியாத, மிக நெருங்கிய உறவை நினைவூட்டும் இத்தலைவர்கள், காடுகள் அழகானவை என்பதற்காக மட்டுமல்ல காடுகளில் வாழும் உயிரினங்கள் அனைத்துமே தம்மிலே ஒரு பகுதி என்றும் அவை தமது இரத்தத்தின் இரத்தம் என்பதையும் வெளிப்படுத்தியிருப்பதுடன் காடுகளை அழிப்பது சுதேசிகளான தம்மையே அழிப்பதற்கு ஈடாகும் என்னும் உண்மையையும் உணர்த்தியிருக்கிறார்கள்.

2019 ஜனவரியில் ஆட்சிக்கு வந்த பொல்சொனாறோ, அமசோனுக்கும் அப்பிரதேசத்தில் வாழும் பூர்வீகக் குடிகளுக்கும் எதிரான ஒரு கொள்கைப் போரை நடத்திவருகிறார். ‘பொருளியல் விருத்தி’ என்ற போர்வையில் பிரேசிலின் பூர்வீகக் குடிமக்களை அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்து விரட்டுவதில் தனக்கு இருக்கும் ஈடுபாட்டை அடிக்கடி அவர் அறிக்கையிட்டிருக்கிறார்.

விவசாய வியாபாரம், சுரங்கத்தொழில், மரக்குற்றி வியாபாரிகள் போன்றவர்கள் ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து வளங்களை சுரண்டுவதற்கான வாய்ப்பை பொல்சொனாறோ ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். அதுமட்டுமன்றி தீயணைப்பு என்ற போர்வையில் பூர்வீக குடிகளைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தையும் மேற்குறிப்பிட்ட பிரதேசத்துக்கு பொல்சொனாறோ அனுப்பியிருப்பது அவதானிக்ப்படவேண்டிய ஒரு விடயமாகும்.

அமசோன் பிரதேசத்தில் வாழும் பூர்வீகக் குடிமக்களின் இருப்புக்கு அண்மையில் முற்றிலும் புதிய ஒரு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் கோவிட்-19 என்ற தொற்று நோயே இந்த ஆபத்தாகும். இப்பிரதேசத்தில் வாழும் பூர்வீக குடிமக்களின் குழுமங்களில் இந்த நோய்த்தொற்று ஆபத்து அண்மைக்காலமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பொல்சொனாறோவின் ஆதரவுடன் அமசோன் பிரதேசத்தினுள் நுழைகின்ற மதரீதியான குழுக்களினால் இந்த ஆபத்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

அதுமட்டுமன்றி, மிகவும் பயங்கரமான, அடுத்த உலகளாவிய தொற்றுநோய் அமசோன் பிரதேசத்திலிருந்து தோன்றக்கூடிய பாரியதொரு ஆபத்து இருக்கின்றதென்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். விவசாயச் செயற்பாடுகள், சுரங்கத்தொழில்கள் போன்றவற்றுடன் காடுகளை இணைக்கும் பிரதேசங்களே புதிய நோய்களின் தோற்றுவாய்களாக விளங்குகின்றன என்று தொற்று நோய் பரம்பலை ஆய்வுசெய்வோர் அறிந்திருக்கிறார்கள்.PRI 81222732 பூர்வீக மக்களே பூமியின் சுவாசப்பையை பாதுகாக்கின்றனர்-தமிழில் ஜெயந்திரன்

அபிவிருத்தி என்ற போர்வையில் அமசோனை அழிப்பதற்கு பொல்சொனாறோ முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் உடனடியான தடுக்கப்படாவிட்டால், அதிகரிக்கும் காடழிப்பும் காட்டுத்தீயும் உயிரினங்களின் இயற்கையான வாழ்விடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் விலங்குகளின் நடத்தையிலும் மாற்றத்தை தோற்றுவித்து தாவரங்களை உண்ணும் விலங்குகள் அருகிலிருக்கும் மனித சமூகங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதை சாத்தியமாக்கலாம். இதன் காரணமாக விலங்குகளிலிருந்து மனிதனுக்கு தொற்றக்கூடிய பற்றீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் என்பவற்றின காவிகளாக இவை மாறலாம்.

உண்மையில், இந்தப் பூகோளத்தில் உயிர்வாழ்வனவற்றுக்கு ஆதாரமாக விளங்குபவற்றை அறவே அழித்து பொருளியல் விருத்தியை மட்டும் முன்னுரிமைப்படுத்துகின்ற, உயிர்கள் மட்டில் எவ்வித அக்கறையையும் கொண்டிராத முதலாளித்துவ அணுகுமுறையிலிருந்து வெளியே வர கோவிட்-19 இன் உலகளாவிய பரம்பல் ஓர் அரிய வாய்ப்பை எமக்கு அளித்திருக்கிறது.

நாம் வாழும் இவ்வுலகை அறிந்து, இவ்வுலகில் ஏனைய உயிர்களுடன் இணைந்து வாழும் ஓர் நிலைக்கு நாம் இறங்கி வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ‘விழுந்து கொண்டிருக்கும் வானம்’ என்ற நூலில் யனோமாமி குடியைச் சேர்ந்த டாவி கொப்பனாவா குறிப்பிடுவது போன்று “எமக்கு இருப்பது ஒரேயொரு வானம் தான். அதனை நாம் நன்கு பராமரிக்க வேண்டும். அந்த வானம் நோய்வாய்ப்பட்டால், அனைத்துமே ஒரு முடிவுக்கு வரும்” என்ற கூற்று, இயற்கையையும் உயிர்களையும் பேணிப்பாதுகாக்கும் வாழ்க்கைமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை எமக்கு வலியுறுத்திநிற்கிறது.

 

நன்றி: அல்ஜசீரா