அம்பாறையில் கருணா போட்டியிட காரணமென்ன;தமிழ் மக்களே விழிப்பாயிருங்கள்- மல்வத்தை சசி கமலன்

இது என்னுடைய மாவட்டம் என்பதால், வரும் தேர்தலில் முழு கள நிலவரத்தையும் அத்துப்படியாக அறிந்தவன் என்பதால் உங்களுக்குத் தெளிவூட்டல் ஒன்றை செய்ய விரும்புகிறேன்.

மற்றைய மாவட்டங்கள் போலல்லாது, அம்பாறை மாவட்டத்தின் தேர்தல் நிலைமை தமிழர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருக்கிறது. இதனை அம்பாறை மாவட்ட தமிழ் மக்களே தயவுசெய்து மறக்க வேண்டாம்.

அம்பாறை மாவட்டத்தில் 95 ஆயிரம் பதிவுசெய்யப்பட்ட தமிழர்களின் வாக்குகள் உள்ளது. இதில் வெறும் 15,000 வாக்குகளைச் சிதைக்கும் வேலை திட்டம் போட்டுக் கருணாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதற்குக் காரணம், வருகின்ற விகிதாசார தேர்தல் அடிப்படையில், 90,000 வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுமாயின் இரண்டு ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.

இதனால் சிங்களப் பிரதிநிதி ஒருவர் ஆசனத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் அதற்கு தமிழர்களின் வாக்குகளை பிரிப்பதற்குச் சரியான ஆளாக தென்னிலங்கை அரசியல்வாதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் இந்தக் கருணா.

கருணாவின் சொந்த ஊரான கிரான் உள்ளடங்கும் கல்குடா தேர்தல் தொகுதியை விட்டு விட்டு, எந்தவித தொடர்பும் அற்ற திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கருணா போட்டியிடும் காரணமும், சூழ்ச்சியும் உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

உங்களில் சிலருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்தி இருக்கலாம். ஆனால் அந்த அதிருப்தியால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களே ஒரு ஆசனத்தை இழந்து விடாதீர்கள்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி நாம் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்போமாக இருந்தால் 90 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைக் கைப்பற்ற முடியும் என்ற உண்மையை குழந்தைப் பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல அம்பாறை மாவட்ட மக்களுக்குச் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

“சசி கமலன்”, மல்வத்தை,கணபதிபுரம்.