ஈழத்தமிழர் உரிமைகள் மீட்டெடுப்புக்கு ஆனி 5 தரும் வராலாற்று உந்துதல்கள்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

பாராளுமன்றக் கொடுங்கோன்மை,அரசபயங்கரவாதம் தொடங்கிய நாள் – மாவீரராகத் தியாகி பொன் சிவகுமாரன் உயிர் ஈகம் செய்ததால் ஈழமாணவர் எழுச்சி நாளுமாகியது!

முன்னுரை

ஈழத்தமிழர் உரிமைகள் மீட்பு என்னும் நீண்ட பயணத்தில் ஆனி 5ம் திகதி என்பது இருபெரும் வரலாற்று உந்துதல்களைத் தரும் நாளாகத் திகழ்கிறது. ஒன்று 05.06.1956 இல் இலங்கையின் (Ceylon) பாராளுமன்றத்தின் அன்றையப் பிரதமராக இருந்த சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா அவர்களின் தலைமையில் இருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டு ஈழத்தமிழர்களின் மொழியுரிமை,தொழில் உரிமை என்பன பெரும்பான்மைப் பாராளுமன்றத்தின் கொடுங்கோன்மையினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டதினால் ஈழத்தமிழர் உரிமைகள் மீட்பு என்பது சனநாயகப் போராட்டங்களின் வழி பெறப்பட வேண்டும் என்கிற வரலாற்று உந்துதலைப் பெற்றது.

அடுத்தது 05.06.1974இல் தமிழ்த்தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் உயிர் ஈகம், ஈழத்தமிழர் உரிமைகள் மீட்டெடுப்புப் போராட்டத்தை உயிர் ஈகம் வழியாக எழுச்சி பெறும் போராட்ட வடிவமாகவும் வளர்ச்சியடையச் செய்தது. மாணவனாகத் தனது ஈழத்தமிழர் உரிமைப்போராட்டத்தைத் தொடங்கிய வரலாற்றுக்கு மதிப்பளிக்கும் முகமாக அவரின் உயிர் ஈகம் இடம்பெற்ற ஆனி 5ஐ ஒவ்வொரு ஆண்டும் ஈழத்தமிழர் மாணவர் எழுச்சி நாளாக ஈழத்தமிழர்கள் போற்றும் பண்பாடு உருவாகியது. இந்த வரலாற்று நினைவுகளைச் சுருக்கமாக நினைவேந்துவது இச்சிறு ஆய்வின் நோக்காகும்.

ஈழத்தமிழர்கள் தங்கள் இளம் தலைமுறையினர்க்கு ஆனி 5ம் திகதியைத் தங்களை அடிமைப்படுத்திய நாளாகவும் இனஅழிப்பைத் தொடங்கிய சிங்களப்பாராளுமன்ற கொடுங்கோன்மையினதும்,சிங்களப்படைபல ஆட்சியினதும் தொடக்க நாளாகவும் தமிழ் இளையவர்கள் தங்கள் இன்னுயிராலேனும் நீதியைச் சமத்துவத்தை தங்கள் மண்ணினதும் மக்களினதும் மீட்பைத் தங்கள் வரலாற்றுத் தாயகத்தில் பெறவேண்டுமென வீறு கொண்டெழுந்த நாளாகவும் எடுத்துரைக்கும் போக்கைப் பழக்கமாக்கி வழக்கமாக்க வேண்டும் என்பதை இச்சிறு ஆய்வு தன் பயனாகக் கருதுகிறது.

பாராளுமன்றக் கொடுங்கோன்மையின்
தொடக்க நாளாக 05.06.1956

1948 ம் ஆண்டு பிரித்தானியா தமிழர்களின் இறைமையின் தொன்மையையும் தொடர்ச்சியையும் கவனத்தில் எடுக்காது சிங்கள பௌத்த பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சிக்குள் ஈழத்தமிழர்களின் இறைமையையும் பங்கெடுக்கச் செய்ததின் விளைவாக சிங்கள பௌத்த பின்காலனித்துவ அரசியல் அடிமைத்தனத்தை ஈழத்தமிழர்கள் அனுபவிக்கத் தொடங்கினர்.

இதன் முதல் கட்டமாக

01. நூறாண்டுகளுக்கு மேலாக இலங்கையில் வாழ்ந்து இயற்கைநிலைக் குடியுரிமையுடன் ( ( Citizen by Naturalisation ),இருந்த மலையகத் தமிழர்களின் அரசுநோக்கிய அரச தகுதியை (Defacto Status) இழக்கவைப்பதையும்.

02. இலங்கைப் பாராளுமன்றத்தில் 33% வீதமாக இருந்த தமிழர்களின் உறுப்புரிமைப் பலத்தை 20% மாகக் குறைத்துச் சிங்கள பௌத்த சட்டவாக்க ஆற்றலை மூன்றில் இரண்டாக அதிகரிக்க வைப்பதையும்,

03. தங்கி வாழும் சமுதாயமாக ஒரு சமுதாயத்தை மாற்றுவதன் மூலம் அச்சமுதாயத்தின் சனநாயகப் பங்களிப்பையும் போராடும் உரிமையையும் மாற்றுவதுமான, இரண்டு மாங்காயை அல்ல மூன்று மாங்காயை ஒரே கல்லில் விழுத்தும் செயற்பாடாக, மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து,அவர்களின் வாக்குரிமையை மறுத்து,அவர்களுக்குப் பாராளுமன்றத்தில் இருந்த உறுப்புப்பலத்தைச் சிங்களப்பெரும்பான்மைக்கான உறுப்புப் பலமாக இந்த பாராளுமன்ற சட்டவாக்கத்தைக் கொண்டுவந்த அன்றையச் சிங்களத் தலைமையான ஜே. ஆர். ஜயவர்த்தனா நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்த சட்டவாக்கம் என்ற பெயர்த்திரையிட்டு மாற்றிக் கொண்டார்.

இந்த தமிழின அழிப்பு அரசியற் செயற்திட்டத்தை மலையகத் தமிழர்களுக்கு அரசு நோக்கிய அரசு நிலை உள்ளதெனச் சொன்ன முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவர்ஹலால் நேரு அவர்களின் கண்ணெதிரிலும், இலங்கைத் தீவில் சிறுபான்மையாக உள்ள இனங்களுக்கோ மதங்களுக்கோ எதிரான சட்டங்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால் தன்னிடம் மேன்முறையீடு செய்யலாம் என சோல்பரி அரசியலமைப்பின் 29(2) இன் மூலம் உறுதியளித்த பிரித்தானிய மகாராணியும் இலங்கைத்தீவின் அரசத்தலைவியாக அச்சமயம் விளங்கியவருமான மாட்சிமைதாங்கிய 2வது எலிசபேத் மகாராணி அவர்களின் கண்ணுக்கு முன்பாகவும் செயற்படுத்தினார்.

இவர்களின் தலையீடாத்தன்மையினால் தான் எதையும் செய்யலாம் என்ற உறுதி பெற்ற இலங்கைப்பாராளுமன்றத்தின் சிங்களத் தலைமைகள் அடுத்து இலங்கைத் தீவினை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களின் இறைமையையும் தன்னாட்சியையும் தமதாக்கும் நோக்கில் சிங்களம் மட்டும் சட்டத்தை ஐக்கிய தேசியக்கட்சியின் ஜே ஆர் ஐயவர்த்தனா 1952இல் முன் தொடங்க, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் அன்றைய பிரதமருமான சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா 05.06.1956இல் ‘சிங்களம் மட்டும் சட்டம்;’ எனத் தான் தேர்தல் காலத்தில் தான் ஆட்சிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் செய்வேன் எனச் சூளுரைத்து வாக்களித்த சிங்கள பௌத்த மேலாதிக்கத் திணிப்பை இலங்கைத்தீவின் சட்டமாகத் தங்களின் பாராளுமன்றப் பெரும்பான்மை கொண்டு பாராளுமன்றப் பெரும்பான்மைக் கொடுங்கோன்மை ஆட்சியைத் தோற்றுவித்ததின் மூலம் நிறுவிக்கொண்டார்.Cartoon Sinhala Only ஈழத்தமிழர் உரிமைகள் மீட்டெடுப்புக்கு ஆனி 5 தரும் வராலாற்று உந்துதல்கள்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

இதன் வழி தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளான மொழியுரிமை, தொழில் உரிமை, சுதந்திரமாக ஒன்று சேர்வதற்கான உரிமை என்பன மறுக்கப்பட்டு ஈழத்தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாவது குடிகளாக அடிமைவாழ்வுக்குத் தள்ளப்பட்டனர். இதனை எதிர்த்து சனநாயக வழிகளில் தங்கள் மொழியுரிமையைப் பாதுகாக்கப் போராடிய பொழுது அவர்களை இனவெறியர்கள் மொழிவெறியர்கள் எனச் சிங்கள பௌத்த பேரினவாதம் அரசாங்கம் என்ற முறையில் திரிபுசெய்து உலகுக்குத் தவறான தகவல்களைப் பரிமாறிக்கொண்டது.

சிங்களப் படைபல ஆட்சியின் தொடக்க நாளாக 05.06.1956

ஈழத்தமிழர்களின் அன்றைய தலைமைக்கட்சியாக இருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரான தந்தை சா.ஜே. வே. செல்வநாயகம் அவர்கள் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து இலங்கைத் தமிழர்களின் (ஈழமக்கள்,மலையகத் தமிழர்,தமிழ்பேசும் இஸ்லாமியச் சகோதரர்கள்) மொழியுரிமை காக்கப்பட வேண்டுமென அடிப்படை மனித உரிமையினை வலியுறுத்தி கால்பேஸ் திடலில் இலங்கைப் பாராளுமன்றத்திற்கு எதிரில் அறவழிப்போராட்டமாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை 05.06.1956இல் நடாத்தினர்.

இந்த அகிம்சைப் போராட்டத்தை தனது படைகளின் மேற்பார்வையில் சிங்களக் காடையர்களைக் கொண்டு அதில் பங்கேற்றவர்களை அடித்து நொறுக்கிக் காயப் படுத்தியதன் மூலமாகவும் அந்நேரத்தில் கொழும்பில் அப்பகுதியில் தெருக்களில் காணப்பட்ட தமிழர்களை அடித்து நொறுக்கித் தமிழர்களை இனங்காணக் கூடிய அச்சத்துக்குள்ளாக்கும் அரசியல் தந்திரோபாயத்தைத் தொடங்கியதன் வழியாகவும் இலங்கைத் தீவில் வன்முறை அரசியலையும்,இனத்துவ வெறுப்பு அரசியலையும் சிங்களத் தலைமைகள் தொடங்கின.

அதே நேரத்தில் கொழும்பில் தமிழர்களை அடித்துக் காயப்படுத்தியும் அவர்களின் கடைகளைத் தொழிலகங்களைச் சொத்துக்களை நொறுக்கி நாசப்படுத்தியும் தொடங்கிய இந்த தமிழினம் மேலான இனஅழிப்புக்கலவரத்தை ஊக்கப்படுத்தி ஆக்கப்படுத்திய பௌத்த பிக்குகள் கல்லோயா குடியேற்றத் திட்டத்தில் தமிழ்ப் பயணிகள் மேலும், தமிழ்த் தொழிலாளர்கள் மேலும் விரிவுபடுத்தி 150 தமிழர்களின் இன்னுயிர் இழப்புக்களை ஏற்படுத்தி இலங்கைத் தீவின் முதல் தமிழின அழிப்புச் செயற்பாட்டை அரசபடைகளின் ஆதரவுடனும் சிங்கள பௌத்த காடையர்களுடன் இணைந்த நேரடிச் செயற்பாட்டில் இறங்கிய அரசபடைகளுடனும் செய்து,இலங்கை எங்கள் சிங்கள நாடு, எங்கள் பௌத்த மதநாடு, எங்கள் சிங்கள ஆட்சிக்குமட்டும் உரிய நாடு என்ற இலங்கைத் தீவின் இன்று வரையான சிங்கள அரசியற் கொள்கைத் திட்டத்தை பகிரங்கமான முழக்கமிட்டு அறிவித்தனர்.

அந்த வகையில் 05.06.1956 இலங்கைத் தீவில் அரசபயங்கரவாதம் நிராயுத பாணிகளான இலங்கைத் தமிழர்கள் மேல் தொடங்கப்பட்ட முதல்நாளாகவும் வரலாற்றுப் பதிவுபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக 1958ம் ஆண்டு தமிழின அழிப்பு பெருமளவில் இடம்பெற்று அன்று முதல் 25 ஆண்டுகள் தமிழின அழிப்பு பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் மகிழ் பொருளாக சிங்களவர்களிடை முன்னெடுக்கப்பட்டு பல்வேறு தமிழின அழிப்புகள் இடையறாது தொடர்ந்தது.unnamed 2 ஈழத்தமிழர் உரிமைகள் மீட்டெடுப்புக்கு ஆனி 5 தரும் வராலாற்று உந்துதல்கள்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

அதன் வெள்ளிவிழாவாக 1983ம் ஆண்டு ஆடி தமிழின அழிப்பாக பெருவளர்ச்சி பெற்று தொடர்ந்து அதன் பொன்விழாவாக 2009 முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரழிப்பு மூலம் சிங்கள பௌத்த பேரினவாதம் தனது இது சிங்கள நாடு பௌத்த மதநாடு சிங்களவரின் ஆட்சிக்கு உரிய நாடு என்றதை உலகப்பரப்பில் உலகநாடுகளுக்கோ உலக அமைப்புக்களுக்கோ எந்தவித அச்சமுமின்றி நிறுவி இன்றுவரை உலகின் தொல்குடிகளான ஈழத்தமிழர்களை அவர்களின் சொந்த மண்ணில் ஆக்கிரமிப்புச் செய்து இனங்காணக் கூடிய அச்சத்தை அவர்கள் வாழ்வாக்கி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவர்களை அகதிகளாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது

.இந்த சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து உலகப் புகழ்பெற்ற கல்வியாளரான தனிநாயகம் அடிகள் காலிமுகச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றமைக்காகவே அவரை இலங்கைப் புலனாய்வுத்துறையினர் கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கிய சூழலில் அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி மலேசியாப் பல்கலைக்கழகத்தில் தொழில் பெற்றுச் சென்று இனங்காணக் கூடிய அச்சத்தாலான ஈழத்தமிழர்கள் புலம்பெயர் அகதி வாழ்வைத் தொடக்கிவைத்தார். இந்த வகையில் அன்று முதல் இன்று வரை 64 ஆண்டுகாகத் ஈழத்தமிழர்களின் அகதி வாழ்வு தொடர்கதையாகத் தொடர்ந்து கொண்டே உள்ளது.thaninayakam1 ஈழத்தமிழர் உரிமைகள் மீட்டெடுப்புக்கு ஆனி 5 தரும் வராலாற்று உந்துதல்கள்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

இந்தச் சிங்களம் மட்டும் சட்டத்தால் ஏற்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத எழுச்சியே இலங்கையின் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்ந்த தமிழர்களை அடித்து நொறுக்கி ‘யாப்பனேயற்ற யன்ர’ ‘திருக்கோணமலயரற்ற யன்ர’ என விரட்டி அடித்த பொழுதே ஈழத் தமிழர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு எங்கள் தாயகம்ää எங்கள் தாயகத்தில் எங்களின் பாதுகாப்பு என்பது அதன் தனியாட்சியிலேயே நடைமுறைச்சாத்தியமென்று வாழத் தொடங்கினர். இதனையே பிரிவினைவாதம் என்று சிறிலங்கா திரிபுவாதம் செய்தது.

கூடவே எவர் அரசபயங்கரவாதத்தைத் தொடங்கி பயங்கரவாத ஆட்சியையே இன்று வரை தொடருகின்றார்களோ அவர்கள் ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என இன்றுவரை திரிபு வாதம் செய்கின்றனர்.

05.06.1974 மாவீரர் பொன் சிவகுமாரனின் உயிர் ஈகத்தால் ஈழமாணவர் எழுச்சி நாளாகியது

1965ம் ஆண்டில் அன்றைய இலங்கைப்பிரதமரான டட்லிசேனநாயக்காவின் ஐக்கிய தேசியக்கட்சியின் கல்வி அமைச்சராக இருந்த ஐ. எம். ஆர். ஏ ஈரியக்கொல்லை அவர்களால் தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழகப் படிப்பையும் தொழில்நுட்ப உயர்கல்விகளையும் சட்ட முகாமைத்துவ உயர்கல்விகளையும் குறைக்கும் தரப்படுத்தல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இது ஈழத்தமிழ் மாணவர்களின் நேரடியான எதிர்ப்பபைத் தோற்றுவித்த பொழுது யாழ் கில்னர் மண்டபத்தில் பொன் சிவகுமாரன் அவர்கள் தலைமையில் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த திரு கந்தவேள் என்பவர் ஏற்பாடு செய்திருந்த மாணவர்கள் எழுச்சிக் கூட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் மாணவர்கள் தங்கள் பிரச்சினையைத் தாங்களே போராடிப் பெறுவதற்கான மாணவர்பேரவை ஒன்றை உருவாக்கி தரப்படுத்தலுக்கு எதிரான மாணவர் பேரவையின் முதல் ஆர்ப்பார்ட்ட ஊர்வலத்தையும் நடாத்தியது.

இதன் எதிரொலியாகவும் கொழும்பு அரசியலில் ஏற்பட்ட உள் பிரச்சினைகளாலும் நடைமுறைக்கு வராது போன இந்தத் தரப்படுத்தல் திட்டம் சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் தலைமையிலான சுதந்திரக்கட்சி இடதுசாரிக்கட்சிகள் கூட்டணியால் 1970ம் ஆண்டில் மீளவும் அன்றைய கல்வி அமைச்சர் அல்ஹாஜ் பதியுதீன் முகம்மது மூலம் மேலும் தமிழர்களின் கல்வி உரிமையை பறிப்பதற்கான பல புதிய ரத்துக்கள் சேர்க்கப்பட்டு வேகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதேவேளை இடதுசாரிச் சிங்களக் கட்சிகள் கூட தமிழின அழிப்பில் மாற்றமற்ற சிங்கள பௌத்த போரினவாத தமிழின அழிப்புக் கொள்கையையே தமது அரசியற் கொள்கையாகக் கொண்டுள்ளனர் என்பதையும் தெளிவுபடுத்தியது. அதே நேரத்தில் தமிழ்க்கட்சிகள் 1960ம் ஆண்டு சத்தியாக்கிரகம் படைபலம் கொண்டு ஒடுக்கப்பட்டு தமிழ்த்தலைமைகள் சிறைக்குள் தள்ளப்பட்ட காலம் முதலாக இனங்காணக் கூடிய அச்சத்துக்குள் தம்மையும் உட்படுத்தி மென்மையான அரசியல் நகர்வுகளால் தங்கள் பாராளுமன்றப்பதவிகளைத் தக்க வைக்கும் தந்திரோபாயத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தன.

அதே நேரத்தில் காரணமின்றி தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்களைக் கைது செய்வதும் விசாரணையின்றி தடுத்து வைப்பதும் விளக்கம் ஏதுமின்றி கொன்று போடுவதுமான அரசபயங்கரவாதம் வேகம் பெற்று தமிழர்களின் நாளாந்த வாழ்வும் உடமைகளும் உயிரும் இனங்காணக்கூடிய அச்சத்துள் தள்ளப்பட்ட நேரத்திலேயே தங்கள் இன்னுயிர்களையும் பொருட்படுத்தாது தமிழ் மாணவர்கள் நீதிக்காக சமத்துவத்திற்காக சுதந்திரத்திற்காகப் போராடத் தொடங்கினர்.

இந்த ஈழமாணவ எழுச்சியின் தலைவனாக வெளிந்த பொன் சிவகுமாரன் அவர்களின் போராட்ட உணர்வின் வேகத்தை 1974இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4வது உலகத்தமிழராய்ச்சி மாநாட்டிற்கான அனுமதியை மறுத்து மக்கள் தங்கள் சொந்த விருப்பில் சொந்தச் செலவில் முழு முயற்சியுடன் செய்த இந்த மாநாட்டின் இறுதிநாளான 10.01.1974இல் 9 இன்னுயிர்களைக் கலாச்சார இனஅழிப்புக்கு உள்ளாக்கியும் தமிழ்ப்பெண்களை பகிரங்கமாக தனது படையினர் மூலம் மானபங்கம் செய்தும் தமிழின வரலாற்றில் தாங்கொணா வேதனையை ஏற்படுத்திய சிறிலங்காவின் செயற்பாடானது ஆயுத எதிர்ப்பு மூலம் ஈழத்தமிழர்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க வேண்டுமென்னும் உறுதியைப் பெறவைத்தது.

இந்த உறுதியின் வெளிப்பாடுகளாகவே சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மேயரான அல்பிரெட் தங்கராஜா துரையப்பா தமிழர்களின் கலாச்சார நிகழ்ச்சிக்கு உரிய அனுமதிகளும் பாதுகாப்புகளும் வழங்காததினால் அவரையும் இந்தக் கலாச்சார இனஅழிப்புக்கான காரணிகளில் ஒன்றாக வெளிப்படுத்தி,யாழ் பிரதான வீதியில் அவரின் வாகனத்தை வெடிகுண்டால் தாக்கிச் சேதப்படுத்தினார்.images ஈழத்தமிழர் உரிமைகள் மீட்டெடுப்புக்கு ஆனி 5 தரும் வராலாற்று உந்துதல்கள்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

தொடர்ந்து இந்த தமிழின கலாச்சார இனஅழிப்புக்கு காரணமாக நேரடியாகப் படையினரை வழிநடத்திய,பொலிஸ் பிரதியட்சகர் சந்திரசேகராவின் வாகனத்திற்கு குண்டுவீசி அவரின் தமிழின கலாச்சார இனஅழிப்பின் பங்கினை வெளிப்படுத்தினார்.

இதன்வழி பொன் சிவகுமாரன் அவர்கள் ஈழமாணவர் போராட்ட சக்தியை உயிர்பெற்று எழச்செய்தார். இதனால் சிறிலங்காவால் கைதுசெய்யப்பட்டு தாங்கொணா வேதனைகளைச் சிறைச்சாலையில் அனுபவித்த நிலையிலும் தன்னினத்தின் இனஅழிப்பு வேதனைகளைத் துடைக்கும் பொன் சிவகுமாரன் அவர்களின் உறுதி மேலும் மேலும் பலம்பெற்றுச் சென்ற வேளையிலேயே, கோப்பாய் வங்கியில் நிகழ்ந்த சம்பவமொன்றின் விளைவாக பொன்சிவகுமாரன் அவர்கள் தன்இன்னுயிரையே ஈழத்தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உயிர் ஈகம் செய்த வரலாற்றுச் சம்பவம் 05.06.1974இல் இடம்பெற்றது. பொன் சிவகுமாரன் அவர்களின் இந்த உயிர்த்தியாகம் ஈழமாணவர்களின் எழுச்சிக்கான பேராற்றலாக வெளிப்பட்டதால் ஆனி 5 ஈழமாணவர் எழுச்சித் தினமாக இன்று வரை ஈழத்தமிழர்களிடை தொடர்ந்து வருகிறது.

உயிர் ஈகத்தின் எழுச்சியாக 1975இல் தன்னாட்சிப் பிரகடனம்

மாவீரர் பொன் சிவகுமாரன் அவர்களின் உயிர் ஈகத்தின் எழுச்சியாக 1975 தைமாதத்தில் சிறிலங்கா பௌத்த சிங்களக் குடியரசு ஈழத்தமிழர்களை ஆள்வதற்கான அரசியலமைப்புச் சட்ட உரிமையை இழந்துவிட்டது என்பதற்கான அடையாளக் குடியொப்பமாக இடம்பெற்ற காங்கேசன்துறைப் பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தந்தை செல்வநாயகம் அவர்கள் அறுதிப்பெரும்பான்மை வெற்றியைப் பெற்று சிறிலங்காப் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களின் தன்னாட்சிப் பிரகடனத்தைச் செய்தார்.Sivakumaran 2 ஈழத்தமிழர் உரிமைகள் மீட்டெடுப்புக்கு ஆனி 5 தரும் வராலாற்று உந்துதல்கள்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

“ காலனித்துவ ஆட்சிக்குள் இத்தீவு வரும்வரை இங்கு சிங்களவர்களும் தமிழர்களும் தனித்தனியான இறைமையுடன் வாழ்ந்து வந்தோம். காலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்களில் தமிழர்கள் சுதந்திரத்ததின் மூலம் தங்களின் சுதந்திரத்தை மீட்போம் என்ற உறுதியுடனேயே போராடினர். சிங்களவர்களுடன் ஒன்றிணைக்கப்பட்ட பாராளுமன்ற ஆட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக நாம் சமத்துவத்துடன் எங்கள் அரசியல் உரிமைகளை மீட்போம் என எடுத்த ஒவ்வொரு முயற்சிகளையும் தொடர்ந்து வந்த சிங்கள அரசாங்கங்கள் சுதந்திரத்தால் தமக்குக் கிடைத்த அதிகாரப் பலத்தைக் கொண்டு மறுத்து எங்களை அடிமைப் படுத்துகின்றனர்.

இது தமிழர்களதும் சிங்களவர்களதும் இறைமைகளை காலனித்துவம் பொதுமையாக்கியதன் விளைவாக இருப்பதால் இந்தத் தேர்தலில் எனக்குக் கிடைத்த இந்த வெற்றியை எங்கள் மக்களின் குடியொப்ப ஆணையாக இலங்கைத் தமிழர்களிடம் ஏற்கனவே இருந்து வரும் அவர்களின் இறைமை அவர்களிடமே திரும்பி விட்ட அடிப்படையில் நாங்கள் சுதந்திரமானவர்களாக மாறியுள்ளோம் என்பதை உலகுக்கும் எல்லா மக்களுக்கும் பிரகடனப்படுத்துகிறேன். நாங்கள் இந்த மக்கள் ஆணையை முழுமனதுடன் முழு அளவில் முன்னெடுப்போம்” என்பதே அவரது தன்னாட்சிப் பிரகடனம். இதுவே இன்று வரையான ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரப் போராட்டமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முடிவுரை:-

64 ஆண்டுகளாக தொடர்ச்சியாக உலகின் தொல்குடிகளான ஈழத்தமிழர்கள் இனஅழிப்புக்கும் கலாச்சார இனஅழிப்புக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கும் நடைமுறை உண்மையினையும் அவர்களின் இறைமை அவர்களிடமே மீண்டுவிட்ட நிலையில் அவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அவர்களின் குடியொப்பம் சுதந்திரமான முறையில் நடத்தப்படுவதொன்றே ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீட்படைவதற்கான ஒரே வழி என்பதையும், உலகெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் தங்கள் நாடுகளின் மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் அனைத்துலக அமைப்புக்களுக்கும் எடுத்துரைத்து ஈழத்தமிழர்களின் உரிமைகளை அவர்கள் மீட்டெடுக்க உதவுவதைத் தங்கள் நாளாந்த வாழ்வின் ஒரு அம்சமாகக் கருதிச் செயற்படுதல் ஒன்றே மாவீரர் பொன் சிவகுமாரன் முதலாக ஈழமண்ணில் 46 ஆண்டுகளாகப் பல்லாயிரக்கணக்கில் தங்கள் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கான வீர வணக்கமாகவும் ஈழமண்ணில் போராட்டங்களால் உயிரிழந்த மக்களுக்கான உண்மையான மதிப்பளிப்பாகவும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கான பாதுகாப்பான அமைதியான வாழ்வுக்கு வழியுமாகவும் அமையும்.