நிறைவேறிக் கொலையின் எதிரொலி;கொதித்தெழுந்த மக்கள்

போலீஸ் அதிகாரி ஒருவர் கருப்பரினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 8 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவை தட்டி எழுப்பிவிட்டது.

ஜோர்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த ஒரு சம்பவம் மட்டும் காரணமல்ல அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் அங்கு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

மினியாபொலீசில் துவங்கிய ஆர்ப்பாட்டம், நியூயார்க், துல்சா, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய இடங்களிலும் பல போலீஸ் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன.

கரோனா லாக்டவுன் காலக்கட்டத்திலும் கருப்பரின் இறப்பு பெரிய போராட்டங்களை அங்கு கிளப்பியுள்ளது. போலீஸ் ஒருவர் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பரின மனிதனின் கழுத்தை தன் பூட்ஸ் காலினால் நெரித்த காட்சி வைரலானதையடுத்து மினியாபொலிசில் வன்முறை வெடித்து ஆங்காங்கே கடைகள் சூறையாடப்பட்டன. கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் உடைத்து எறியப்பட்டு கண்ணாடிச் சில்லுகள் சாலைகள் முழுதும் சிதறிக்கிடந்தன.

பல ஆண்டுகளாக கருப்பரினத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்ற குரல் ஓங்கத் தொடங்கி அமெரிக்காவின் தேசிய விவகாரமாக இது பூதாகாரம் எடுத்துள்ளது.

மக்கள் எதிர்ப்பெனும் பூகம்பம் வெடித்த வெள்ளிக்கிழமை இரவு பலதரப்பட்ட மக்களும் தெருவில் இறங்கி அமைதிவழியில் எதிர்ப்பைக் காட்டினர். முதல் நாள் போராட்டமும் அமைதியாகத்தான் தொடங்கியது, ஆனால் திடீரென வன்முறைகள் தொடங்கின.

இந்தப் போராட்டம் தீ போல் பரவ 13 அமெரிக்க நகரங்களில் ஊரடங்கு அமலாகியுள்ளது. 16 நகரங்களில் இதுவரை 1400 பேர் கைது செய்யப்படனர். இதில் லாஸ் ஏஞ்சலஸில் மட்டும் 500 பேர் கைது.