கிழக்கிலங்கையின் விவசாயமும் எதிர்கால மேம்பாடும்-து.கௌரீஸ்வரன்

கொரொனா அனர்த்தம் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார மறுசீரமைப்பிற்கான ஏது நிலைகளை உருவாக்கி வருகின்றது. குறிப்பாக சேவைத் தொழிற்துறைகளிலிருந்து விலகி உள்நாட்டு விவசாயப் பொருளாதாரத்தை விருத்தி செய்வதன் தேவையினை இத்தகைய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு எடுத்துரைத்து நிற்கின்றது.

இதன்காரணமாக வளர்ந்து வரும் நாடுகளின் அரசாங்கங்கள் கொரொனாவிற்குப் பின்னரான பொருளாதார சீராக்கத்தில் உள்நாட்டு விவசாயத்தை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டங்களைப் பற்றி அக்கறை செலுத்தத் தொடங்கியுள்ளன. இப்பின்னணியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் விவசாயத்துறை குறித்து அக்கறை செலுத்துவதற்கான வாய்ப்புக்கள் வாய்க்கப் பெற்றுள்ளன.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் புவியியல் பரப்பில் அதிகளவான பகுதி விவசாயத்திற்குரிய நிலமாகவே காணப்படுகின்றது. முழு இலங்கைக்கும் சோறு போடக்கூடிய விளைச்சலை வழங்கவல்ல நில வளம் கிழக்கிலே பரந்து விரிந்து காணப்படுகின்றது.

இவ்விதம் இருந்த போதிலும் இந்நிலத்தில் பெரும்பாலான பகுதியில் வானம் பார்த்து விவசாயம் செய்ய வேண்டிய நிலைமைமையே காணப்படுகின்றது. அதாவது நீரைத் தேவைக்கேற்ப பயன்படுத்தும் வாய்ப்புக்களோ வசதிகளோ விருத்தி செய்யப்படாமல் பெரும்பாலான நிலப்பகுதி வரண்ட நிலங்களாக காட்சியளிக்கின்றன.

இதனால் இப்பகுதிகளில் வாழும் விவசாயத்தில் அறிவும் திறனும் உடைய மனித வளத்தில் கணிசமானவர்கள் வேலைவாய்ப்புக்களின்றி வெளி மாவட்டங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சாதாரண கூலித் தொழிலாளர்களாக இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர்.68675511 2292664604316339 6161946969200656384 n கிழக்கிலங்கையின் விவசாயமும் எதிர்கால மேம்பாடும்-து.கௌரீஸ்வரன்

இந்நிலை தொடருமாக இருந்தால் விவசாயப் பண்பாட்டினை மறந்த நுகர்வுப் பண்பாட்டிற்கும், சேவைத் தொழிற் துறைக்கும் பரிச்சயமான புதிய தலைமுறைகள் உருவாகுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும். இத்தகைய புதிய நுகர்வுப்பண்பாடு பேரனர்த்தக் காலங்களில் தாக்குப்பிடிக்க முடியாத மனிதர்களையே உருவாக்கித் தரும்.

எனவே எவரிடமும் கையேந்தாத தன்மானமும், சுயாதீனமும் உள்ள சவால்களை எதிர்கொண்டு வாழும் ஆற்றலும் அறிவும் உள்ள மனித சமூகங்களை கிழக்கிலங்கையிலே உருவாக்குவதற்கும் அத்தகு நிலையினைத் தற்காத்து விருத்தி செய்வதற்கும் கிழக்கின் விவசாயப் பண்பாட்டினைப் பாதுகாத்தல் அடிப்படைத் தேவையாக உணரப்படுகின்றது.

கிழக்கிலுள்ள அதிகளவான விவசாய நிலங்களுக்கு வருடம் முழுவதும் நிரைப் பாய்ச்சக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படுமாக இருந்தால் கிழக்கின் நிலைமை வேறு விதமாகவே அமைந்திருக்கும். பலரும் விவசாயம் செய்வதிலேயே ஆர்வஞ் செலுத்தும் நிலை உருவாகும், வருடத்திற்கு இரண்டு தடவை நெல்லை உற்பத்தி செய்வதற்கான ஏதுநிலைகள் வாய்க்கப்பெறும் இதனால் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும். கிழக்கின் உற்பத்தி வளர்ச்சி முழு நாட்டையும் தன்னிறைவான அபிவிருத்திக்கு இட்டுச்செல்லுவதாகவும் இருக்கும்.

எனவே கிழக்கின் விவசாயத்துறையினை அபிவிருத்தி செய்வது என்பது முழு இலங்கைத் தீவினையும் தன்னிறைவான அபிவிருத்திக்குள் இட்டுச் செல்வதற்கு பெரும்பங்காற்றும் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தின் விவசாயத் துறையின் விருத்திக்கான காத்திரமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது இலங்கைத் தீவின் அபிவிருத்தியை விரும்பும் ஒவ்வொருவரினதும் கடமையாக இருக்கிறது.

கிழக்கிலங்கையின் விவசாயிகள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை நீர்வளத்தின் பற்றாக்குறையே ஆகும். அதாவது கிழக்கிலுள்ள சிறு சிறு குளங்களில் நீர் சேகரிப்பு முறையும் அந்த நீரை உரிய முறையில் அதன் அருகிலுள்ள நிலங்களுக்கு விநியோகிக்கக் கூடிய நிறைவான வசதிகள் விரிவாக்கம் பெறாமலும் வலுவிழந்து செல்லுதல் இதில் முக்கியமான சவாலாக இருக்கின்றது.3940200 orig கிழக்கிலங்கையின் விவசாயமும் எதிர்கால மேம்பாடும்-து.கௌரீஸ்வரன்

இதன் காரணமாக சின்னஞ் சிறிய குளங்களை மையமாகக் கொண்டு விவசாயஞ் செய்யப்பட்டு வந்த நகரங்களை அண்டிய, நெடுஞ்சாலைகளை அண்டிய சில நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாயத் தேவையிலிருந்து வேறு தேவைகளுக்காக நிரந்தரமாகவே மாற்றப்படும் அபாய நிலை மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது.

மேற்கூறிய சிறு குளங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயத்திற்கான நீர் சேகரிப்பும் நீர் விநியோகமும் செயலிழந்தமையால் உரிய விளைச்சலைப் பெறமுடியாத நிலையில் இந்நிலங்களை அதிக விலைக்கு விற்றுவிடக்கூடிய நிலைமைகள் வலுப்பெற்று வருகின்றன.

இவ்வாறு சிறு அளவில் வரையறுக்கப்பட்ட விவசாய நிலங்கள் பலவும் விவசாயம் செய்ய முடியாத வகையில் மாற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு முதலான பாரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உருவாவதுடன், சவால்களுக்கு மத்தியிலும் விவசாயம் செய்ய முயற்சிக்கும் மனிதர்களையும் வேறுவழியின்றி அந்நிலையிலிருந்து வெளியேறவே நிர்ப்பந்திக்கின்றது. நாட்டின் உணவு உற்பத்தியில் இது தாக்கஞ்செலுத்துவதாகவும் உள்ளது. மிகமுக்கியமாக இத்தகைய சிறிய குளங்களை அண்டி சுயாதீனமாக வாழ்ந்த மனிதர்களிடையே வேலையின்மை அதிகரித்து வருகின்றது.

ஆகவே இனிவரும் காலத்தில் கிழக்கின் அபிவிருத்தியில் மேற்கொள்ள வேண்டிய முதல் நடவடிக்கை கிழக்கிலுள்ள ஒவ்வொரு சிறிய குளங்களையும் இனங்கண்டு அவற்றில் வருடாந்தம் நீரைச் சேகரித்து தேவைக்கேற்ப அந்த நீரை அதன் எல்லைக்குள் அடங்கும் விவசாயிகள் பயன்படுத்தக் கூடிய வினைத்திறனான நடவடிக்கைகளை முன்னெடுத்தலாகும்.news 20110112 1967633355 கிழக்கிலங்கையின் விவசாயமும் எதிர்கால மேம்பாடும்-து.கௌரீஸ்வரன்

அடுத்தது இலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்திலிருந்து மேலதிகமாக கிழக்கின் கொட்டியாரமூடாக கடலில் சேருகின்ற நன்நீரை கிழக்கிலங்கையில் நீர் விநியோகமின்றி வரண்டு போயுள்ள வயல் நிலங்களுக்கு திசை திருப்பி அனுப்பக்கூடிய நடைமுறைச் சாத்தியமான திட்டங்களை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவதாகும்.

இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான வயல் நிலங்களில் வருடத்திற்கு இரண்டு தடவை விவசாயத்தை மேற்கொள்வது சாத்தியமாக்கப்படும். நீண்ட சாலைகளை,அதிவேகப் பாதைகளை அமைக்கும் செயற்றிட்டங்களைப் போல் கிழக்கின் நிலங்களை வளமுள்ள பூமியாக்கும் நீர் விநியோகப் பாதைகளை உருவாக்குவதனூடாக இலங்கையினை தன்னிறைவான விவசாய நாடாக ஒரு சில வருடங்களிலேயே மாற்றிக் காட்ட முடியுமாக இருக்கும்.

மேலும் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சந்தணமடு ஆற்றை அண்டியுள்ள கிரான்புல் அணைக்கட்டை நிரந்தரமாக அமைப்பதனூடாக வருடத்தில் தவறாமல் இரு போகங்களுக்கான விவசாயத்தை சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்து அதன் விளைச்சலை பெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறப்படுகின்றது. இந்த அணைக்கட்டினை அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டன இச்செயற்பாடு விரைவாக நிறைவேறும் பட்சத்தில் கிழக்கின் விவசாய விருத்தியின் ஒரு பகுதியை நிச்சயமாக அடையக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறு கிழக்கிலங்கையின் அபிவிருத்திக்கு அடிப்படைத் தேவையாகவுள்ள நீர்வளப் பங்கீட்டை இனங்கண்டு அதற்குரிய பொருத்தமான முன் திட்டங்களைத் தயாரித்து அவற்றை நடைமுறைப்படுத்தும் போதுதான்  எந்த சூழ்நிலைக்கும் தாக்குப்பிடித்து வளம்பெறமுடியும்.

தாயகத்தில் உண்மையான பற்றுக்கொண்டு செயற்பட முற்படும் தரப்புக்கள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றை சாத்தியமாக்குவதற்கு முழு மூச்சுடன் இயங்க வேண்டியது இன்றியமையாததாகும்