உயிர் காக்கும் தடுப்பூசிகள் இல்லாமல் போகும் அபாயத்தில் பல லட்சம் குழந்தைகள்

149
213 Views

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு “உயிர் காக்கும் தடுப்பூசிகள்” கிடைக்காமல் போகும் அபாயம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்று பரவலால் உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மருந்துகளை விநியோகிக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அத்தியாவசிய தடுப்பூசிகளின் இருப்பு முற்றிலும் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

எனவே, உலக நாடுகளின் அரசு விமான நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் அதிகளவிலான சரக்கு விமானங்களை இயக்க வேண்டுமென்று அது கேட்டுக்கொண்டுள்ளது.

நோய் எதிர்ப்புத்திறன் வளர்ப்பது யுனிசெஃப் செய்யும் பணிகளில் முக்கியமானதொன்றாகும். ஓர் ஆண்டில் 3 மில்லியன் அதாவது 30 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ போன்ற நோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசி போட வேண்டும் என்று யுனிசெஃப் இலக்கு நிர்ணயித்திருந்தது.

மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி கண்டறியும் பணியில் இருப்பதனால் மற்ற நோய்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை தடைபடுவதாக யுனிசெஃப் கூறுகிறது.

“கோவிட்-19 காரணமாக எதிர்பாராமல் ஏற்பட்ட போக்குவரத்து தடையால் தடுப்பு மருந்துகளின் ஏற்றுமதியில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவில் இருந்து தப்பிக்க தற்போது யுனிசெஃப் அனைத்து நாடுகளிடமிருந்தும் உதவி கேட்கிறது,” என யுனிசெஃப் செய்தி தொடர்பாளர் மார்க்ஸி மெர்காடோ கூறியுள்ளார்.

“இந்த சூழ்நிலையில் விமான சேவையின் வீழ்ச்சியினாலும் அதை மேலும் மோசமாக்க ஏற்பட்டிருக்கும் கடுமையான விலை உயர்வினாலும், சில வளம் குறைந்த நாடுகள் தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்ய முடியாத காரணத்தினால், தடுப்பு மருந்து இருக்கும் நோய்களுக்கு அந்நாட்டில் இருக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்,” என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here