சீனா,ரஸ்யாவின் செய்மதிகளை செயலிழக்கச் செய்யப் போகும் புதிய ஆயுதம்-தமிழில்: ஆர்த்தி

211
240 Views

சீனா மற்றும் ரஸ்யாவின் செய்மதிகளை விண்ணில் வைத்து செயலிழக்கச் செய்வதற்கு அமெரிக்கப் படையினரின் விண்வெளி படைப்பிரிவு தரையை தளமாகக் கொண்ட ஆயுதங்களை 48 இடங்களில் அமைத்து வருகின்றது. எழு வருடங்களில் நிறைவடையும் இந்த திட்டத்தின் மூலம் மோதல் ஒன்று ஏற்படும் போது அமெரிக்கா இதனை பயன்படுத்தி சீனா மற்றும் ரஸ்யாவின் செய்மதிகளை செயலிழக்க செய்து விடும்.

எல்-3 ஹரிஸ் ரெக்னோலொஜி என்ற நிறுவனம் முதலாவது ஆயுதத்தை தயாரித்துள்ளது. ஒரு வருட முயற்சியின் பின்னர் அது கடந்த மாதம் இயங்க ஆரம்பித்துள்ளது. மேலும் 16 ஆயுதங்கள் விரைவில் அமெரிக்கப் படையினரிடம் கையளிக்கப்படவுள்ளன. இந்த மெடோவ்லான்ட் (Meadowland) எனப்படும் புதிய ஆயுதம் இலகுவானது, புதிய மென்பொருட்களை மேலும் இணைக்கக்கூடிதும் மேலும் பல அலைவரிசைகளைக் கொண்ட செய்மதிகளின் செயற்பாடுகளை நிறுத்தக்கூடியதுமாகும்.

இந்த ஆயுதத்தின் வரவைத் தொடர்ந்து அமெரிக்க படையினரின் ஆறாவது பிரிவு விண்ணில் உள்ள அமெரிக்க செய்மதிகளை பாதுகாக்கும் தற்காப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அமெரிக்க வான் படையுடனான அதன் இணைந்த நடவடிக்கை தொடர்பிலும் கவனமெடுத்துள்ளது.

விண்ணில் மோதல்களுக்கு சாத்தியமில்லை. ஆனால் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என அமெரிக்காவின் விண்வெளி வான்படை பிரிவு மற்றும் ஏவுகணை மையத்திற்கான தலைவர் லெப். கேணல் ஸ்ரீபன் போகன் தெரிவித்துள்ளார்.

மெல்போன் மற்றும் புளோரிடாவைத் தளமாகக் கொண்ட எல்-3 ஹரீஸ் மேலும் 4 தொகுதிகளை தயாரித்துள்ளது. அது 2022 ஆம் ஆண்டு பாவனைக்கு வரவுள்ளது. இந்த வருடம் டிசம்பர் மாதம் மேலும் 28 தொகுதிகளை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான நிதி 2021 ஆண்டு ஒதுக்கப்படும், ஆயுதங்கள் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் 2027 ஆம் ஆண்டிற்கு இடையில் பாவனைக்கு வரும்.

இதன் மூலம் எதிரி நாட்டின் தொடர்பாடல்களை குழப்ப முடியும், ஆனால் தகவல்களையும், படங்களையும் கைப்பற்ற முடியாது என போகன் தெரிவித்துள்ளார்.

விண்வெளிப் போர் ஆயுதங்கள் தொடர்பில் அமெரிக்கா பேசி வருகின்றது. அங்கு இடம்பெறும் போரில் சிதறும் பாகங்கள் விண்வெளியை மாசுபடுத்தும். சீனாவும், ரஸ்யாவும் அவ்வாறான ஆயுதங்களைக் கொண்டுள்ளதாகவும், அதனால் அமெரிக்காவின் விண்வெளிப் போர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை செய்மதிகளை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை ரஸ்யா பரிசோதித்திருந்தது. அதாவது ரஸ்யா தொடர்ந்து தன்னை தயார் செய்து வருகின்றது. எனவே தான் அமெரிக்கா இந்த புதிய ஆயுதத்தை தயாரித்து வருகின்றது. இதனை மோதல்களின் ஆரம்பத்தில் பயன்படுத்துவதன் மூலம் விண்வெளியில் அமெரிக்கப் படையினருக்கு ஏற்படும் அனர்த்தங்களை தவிர்க்கலாம். இது கட்டளை மையத்தில் ஏற்படும் தடங்கல்களைத் தடுக்கும், என போகன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஆயுதம் செய்மதிகளை அழிக்காது என்ற போதும், அதுவும் விண்வெளிப் போருக்கான ஆயுதமாகவே பார்க்கப்படுகின்றது. எனவே அமெரிக்காவின் எதிரி நாடுகள் அதனை முறியடிக்கும் நடவடிக்கைகளுக்கு தயாராகும் என உலக பாதுகாப்பு நிறுவனத்தின் வெசிங்டன் தலைவர் விக்ரோறியா சாம்சன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நடவடிக்கை தற்காலிக தடங்கல்களை ஏற்படுத்தும் என்றாலும், எதிரிகளுக்கு அது தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது தெரியாது. மேலும் விண்வெளியில் உள்ளவற்றை தாக்குவது சட்டபூர்வமானதா என்ற கேள்வியும் உண்டு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் சீனா மற்றும் ரஸ்யாவை விட அமெரிக்காவே அதிக செய்மதிகளை கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ரஸ்யா அங்கு 40 தொலைத் தொடர்பு செய்மதிகளை கொண்டுள்ளது. எதிர்வரும் வருடங்களில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றை நவீனமயப்படுத்தவும் ரஸ்யா திட்டமிட்டுள்ளது. ரஸ்யா தனது இலத்திரனியல் புலனாய்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொகுதி என்பவற்றையும் மறுசீரமைத்து வருகின்றது.

சீனாவும் அதனை ஒத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏறத்தாள 30 படைத்துறை மற்றும் வர்த்தக தொலைத் தொடர்பு செய்மதிகளை அது கொண்டுள்ளது. சிறிய அளவிலான படைத்துறை புலனாய்வு செய்மதிகளையும் சீனா விண்ணில் நிறுவியுள்ளது.

அமெரிக்காவின் தற்போதைய புதிய ஆயுதம் இரண்டு தொகுதிகளை கொண்டுள்ளது. முன்னைய ஆயுதம் 14 தொகுதிகளை கொண்டிருந்தது. எனவே தற்போதைய ஆயுதத்தை சிறிய இடங்களில் வைத்து இயக்க முடியும். இதன்மூலம் ஏறத்தாள 10,000 சதுர அடிகள் உள்ள இடத்தை மீதப்படுத்த முடியும். அது மட்டுமல்லாது புதிய ஆயுதத்தில் உள்ள கணணி மென்பொருட்கள் ஒரே தடவையில் பல செய்மதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் தகமை கொண்டது என போகன் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி: அந்தோனி கபசியோ, புளும்பேர்க் அரசியல் ஆய்வு

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here