பாடசாலைகள் தனிமைப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படமாட்டாது.

தனிமைப்படுத்தல் நிலையங்களாக எந்தவொரு பாடசாலையும் பயன்படுத்தப்பட மாட்டாது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் பணிக்கும் திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ள முப்படை உறுப்பினர்கள் வந்தடைந்த பின்னர் உரிய இடைவெளியை பேணுவதற்கான இடவசதி முகாமில் போதாமல் காணப்பட்டால் அதற்காக முகாமிற்கு அருகில் உள்ள பாடசாலைகளை பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுத்தருமாறு கல்வி அமைச்சிடம் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இராணுவ உறுப்பினர்களை முகாமினுள் தங்கவைப்பதற்கான அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரிவினருக்காக கொழும்பு மாவட்டத்தில் சில பாடசாலைகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரி, தேர்தஸ்டன் கல்லூரி, டி.எஸ்.சோனாநாயக்க கல்லூரி, கொட்டாஞ்சேனை மஹா வித்தியாலயம் உள்ளிட்ட கொழும்பு மாவட்டத்தில் சில பாடசாலைகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் எமது செய்தி சேவை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் வினவிய போது, தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் அல்லது தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ள பாதுகாப்பு உறுப்பினர்கள் எவரும் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.