நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் எண்ணம் இல்லை.

அரசியலமைப்புப் பேரவை நேற்று (23) அதன் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவின் தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடியதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மஹிந்த சமரசிங்க, தலதா அத்துக்கோரல, பிமல் ரத்னாயக்க ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

இவர்களுக்கு மேலதிகமாக சிவில் சமூகப் பிரதிநிதிகளான ஜாவிட் யூசெப் மற்றும் என்.செல்வகுமார், அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் நயாகமும், பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தசநாயக்க மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள், சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்றங்களை ஆராய்ந்தனர். சுயாதீன ஆணைக்குழுக்களினால், அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள முன்னேற்ற அறிக்கைகளும் இங்கு ஆராயப்பட்டது.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால், அரசியலமைப்புப் பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த இரண்டு கடிதங்களும் இங்கு அவதானத்தில் கொள்ளப்பட்டது.

தேர்தல் காலப்பகுதியில் பொலிஸ் திணைக்களத்துக்குள் மேற்கொள்ளப்படும் பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுடன் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் சிலர், இதுவரை இடம்பெற்ற பொலிஸாரின் இடமாற்றங்கள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கமைய, பொலிஸ் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுவர இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அதேநேரம், இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்தில் காணப்படும் வெற்றிடங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன், அடுத்த அரசியலமைப்புப் பேரவைக் கூட்டத்துக்கு முன்னர் இந்த வெற்றிடங்களைப் பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பது என்றும் இங்கு முடிவெடுக்கப்பட்டது.

இதன் பின்னர் கொவிட்-19 தொற்றுநோய் சூழ்நிலை, அதனைக் கட்டுப்படுத்துவது மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரிவாக விளக்கமளித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய் நிலைமையால் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் பற்றி ஆராய்ந்து அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அரசியலமைப்புப் பேரவைக்கு எடுத்துக் கூறினார். அத்துடன் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காகச் சென்றுள்ள மாணவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதேநேரம், கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு தேசிய நெருக்கடி என்றும், அதனைத் தீர்ப்பதற்கு அரசியல் இலாபம் தேடாமல் சகல அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்படுவது அவசியம் என்றும் கரு ஜயசூரிய வலியுறுத்தினார்.

இந்த நிலைமைக்கு முகங்கொடுக்கும்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கடந்த பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது என அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர்கள் பலர் கருத்துத் தெரிவித்தனர்.

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என மக்கள் மத்தியில் இடம்பெறும் கருத்தாடல் தொடர்பில் அரசியலமைப்புப் பேரவையின் கவனம் செலுத்தப்பட்டபோது கருத்துத் தெரிவித்த அரசியலமைப்புப் பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய அவர்கள், பாராளுமன்றத்தைத் தான் கூட்டி அதனால் மீண்டுமொரு பிரச்சினையை ஏற்படுத்த விரும்பவில்லையெனக் கூறினார்.

இதுபோன்ற அரசியல் குழப்பங்களின் போது வியாக்கியானம் அளிக்கும் பொறுப்பு உயர் நீதிமன்றத்துக்கே இருப்பதாகவும், உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கினால் அதற்கமைய செயற்பட தான் கட்டுப்பட்டிருப்பதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

உலகத்தையே பாதிக்கும் அளவில் தொற்றுநோய் நிலவும் நேரத்தில் அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க வேண்டாம் என அனைத்துத் தரப்பினரிடமும் தான் கோரிக்கைவிடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.