கொரோனா வைரசின் தாக்கம் – பொருளாதார வீழ்ச்சியை நோக்கி உலகம்?

சீனாவில் உருவாகிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் சீனாவை விட ஏனைய நாடுகளில் தற்போது வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் இதுவரையில் 3012 பேர் உயிரிழந்ததுடன், 80409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது அங்கு தொற்றுதலுக்கு உள்ளாகி வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் ஏனைய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால் பல நாடுகள் அவசரகாலநிலை பிரகடனம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளதுடன், 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் ஐரோப்பாவில் இந்தாலியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அங்கு 107 பேர் மரணமடைந்துள்ளதுடன், 3089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் 100 இற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், 6000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் 92 பேர் பலியாகியதுடன், 2922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயின் தாக்கத்தால் பலியாகுவோரின் விகிதம் 3.4 என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளபோதும், அது 1 விகிதத்திற்கும் குறைவு என பொக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த வைரசின் தாக்கம் பல நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துவருவதால் உலகம் மற்றுமொரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.