பல்கலைக்கழக பகிடிவதை: குற்றப் புலனாய்வு திணைக்கள விசாரணை ஆரம்பம்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாக பாலியல் அச்சுறுத்தல் மற்றும் பகிடிவதை சம்பவம் தொடர்பில் இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில்,பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டமையை அடுத்து, பொலிஸாரும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கணினி குற்றவியல் விசாரணை பிரிவின் ஊடாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களின் கைத்தொலைபேசிகளை சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பகிடிவதை சம்பவம் தொடர்பில் இதுவரை 8 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வகுப்புத் தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதேநேரம் கிளிநொச்சி வளாகத்தின் சம்பந்தப்பட்ட சிரேஷ்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.