காஷ்மீர் முதலமைச்சர்களை சிறையில் அடைத்துள்ளது இந்தியா

சுயாட்சியை இரத்துச் செய்து இந்தியாவுடன் இணைக்கப்பட்ட முஸ்லீம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட காஷ்மீர் மாநிலத்தின் முன்னள் முதலமைச்சர்கள் இருவர் 6 மாத காலமாக விசாரணைகள் இன்றி தடுத்துவைக்க்பபட்ட பின்னர் தற்போது குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒமார் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரே பி.எஸ்.ஏ எனப்படும் கடுமையான பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற சட்டத்தின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டத்தின் மூலம் விசாரணைகள் இன்றி ஒருவரை இரண்டு வருடங்கள் வரையில் சிறையில் தடுத்து வைக்க முடியும். காஷ்மீரின் சுயாட்சியை இந்தியா இல்லாது செய்தது தொடர்பில் போராட்டங்களை மேற்கொள்பவர்களை அடக்குவதற்கே இந்தியா இந்த சட்டத்தை பயன்படுத்தி வருகின்றது.

இந்த சட்டம் மிகவும் மோசமானது என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சட்டத்தின் மூலம் மேலும் பல அரசியல் தலைவர்களை சிறையில் அடைப்பதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.

கிமாலயா பிரதேசத்திற்கு வழங்கப்பட்ட சுயாட்சி அதிகாரத்திற்கான 370 ஆவது சரத்தை இந்தியாவில் ஆட்சியில் உள்ள தேசிய இந்துத்துவக் கட்சி அரசு நீக்கியிருந்தது. அதற்கு முன்னரே கடுமையான சட்டங்களை அங்கு அது நடைமுறைப்படுத்தியிருந்தது.

அதன் மூலம் ஆயிரக் கணக்கான அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரை இந்தியப் படையினர் கைது செய்திருந்தனர். மனித உரிமை அமைப்புக்கள் அதனை கண்டித்திருந்தன. கடந்த 70 ஆண்டுகள் அங்கு ஆட்சி புரிந்த பாரூக் குடும்பத்தை சேர்ந்த பாரூக் அப்துல்லாவையும் இந்தியா கைது செய்திருந்தது. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான அவர் மூன்று தடவைகள் முதலமைச்சராக பதவி வகித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அப்துல்லா ஆறு மாதங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

இந்தியாவின் இந்த ஜனநாய விரோத நடவடிக்கையினால் சுற்றுலாத்துறை முற்றாக முடக்கமடைந்துள்ளதுடன், அரசியல் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இது அங்கு வாழும் மக்களை அதிகம் பாதித்து வருவதாக அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் இரு தடவைகள் போரில் ஈடுபட்ட போதும் இரு நாடுகளும் பகுதியாகவே அதனை தக்கவைத்து வருகின்றன.