ஈரான் இராணுவத் தளபதிக்கு பல்லாயிரக் கணக்கானோர் அஞ்சலி

அமெரிக்க விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமானிக்கு ஆயிரக் கணக்கானோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.ஈராக் தலைநகர் பாக்தாதுக்கு ஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமானி (வயது 62) நேற்று முன்தினம் வந்திருந்தார். அப்போது சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்கா திடீரென நடத்திய விமானத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை இராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட ஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமானி, ஈரானின் உயர்ந்த அதிகாரம் படைத்த மத தலைவர் அயதுல்லா அலி கொமெய்னிக்கு அடுத்த நிலையில் வைத்து பார்க்கப்பட்டவர் என சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

அவர் கொல்லப்பட்டிருப்பது ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்களது படைத்தலைவரின் உயிர்ப்பலிக்காக அமெரிக்கா மீது பழிதீர்க்கப்படும் என்றும் ஈரான் கூறியுள்ளதாகவும் அச்செய்திகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானி மற்றும் அவருடன் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் இறுதி ஊர்வலம் பாக்தாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்கள் கருப்பு நிற உடை அணிந்து, ஈராக் கொடி ஏந்திச்சென்றனர்.

ஈராக் நாட்டின் இடைக்கால பிரதமர் அதெல் அப்தெல் மஹதி, முன்னாள் பிரதமர் நூரி அல் மாலிகி உள்ளிட்ட ஷியா இயக்க தலைவர்கள், ஷியா மத குரு அம்மர் அல் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் இந்த இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த இறுதி ஊர்வலம் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள ஹரியா சதுக்கத்தில் முடிந்துள்ளது. அங்கு காசிம் சுலைமானி உள்ளிட்டவர்கள் உடல்கள் வைக்கப்பட்டு மக்கள் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

சுலைமானி தவிர்த்து மற்றவர்களின் உடல்கள் ஷியா பிரிவு நகரமான நஜாபிக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

சுலைமானி உடல் ஈரான் தலைநகர் டெஹ்ரான் கொண்டு செல்லப்பட்டு அங்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது