உரிய மாற்றத்தின் மூலம் நல்லிணக்கத்தை வளர்த்தல் என்கின்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே மீறி ஈழத்தமிழர்களின் இறைமையை சட்டவாக்கங்கள் மூலம் ஜே. ஆர். ஜயவர்த்தனா பாணியில் சட்டத்தால் கட்டிப்போடும் அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். இதற்குக் காரணம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது ஆட்சிக்கான பாதுகாப்பைக் கருதி படைத்துறையினர் சட்டமா அதிபர் திணைக்களம் என்பவற்றிடம் முற்றுமுழுதாக சட்டவாக்கப் பொறுப்பை ஒப்படைத்துள்ளமையேயாகும் என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
இந்தப் படைத்துறையினரும் சட்டமா அதிபர் திணைக்களமும்தான் ஈழத்தமிழர்களை பயங்கர வாதிகளாகவும் சட்டவிரோத சமூகமாகவும் கட்டமைப்பதையே தங்கள் மைய நோக்காகக் கொண்டவர்கள் இவர்களது பணியக ஆட்சிதான் இன்று சிறிலங்காவில் நடைமுறையில் உள்ளது என்பதும் இலக்கின் தெளிந்த முடிபாகவுள்ளது.
இலக்கின் இந்தக் கருத்துக்களை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் சிறிலங்காவின் சிங்கள ஆய்வாளர் முனைவர் ஜெகான் பெரேரா தேசிய மக்கள் சக்தியின் இன்றைய ஆட்சி படைத்துறைத் தலைமைகளினதும் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் நடைமுறையில் தங்கியிருப்பதை “ ஆழ்நிலை அரசு” (Deep State) என்று வரையறுக்கலாமெனத் தனது “முறைமை மாற்றத்துக்கான அமிலச் சோதனை” என்னும் வீரகேசரிக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனைப் பின்வருமாறு அவர் மேலும் விளக்கியுள்ளார். “ ஆழ்நிலை அரசு தேர்தல்களுக்கு அப்பால் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்தவும் – தன்னலங்களைப் பாதுகாக்கவும் – தவறுகளை மறைக்கவும் திரைமறைவில் இயங்கும் வேரூன்றியதும் பொறுப்புக் கூறல் கடப்பாடற்றதுமான அதிகார வலைப்பின்னலைக் குறிக்கும்” இந்தப் படைத்துறை சட்டத்துறைப் பணியக ஆட்சியாளர்களால் வரைவு செய்யப்பட்ட நான்கு சட்டங்களை அடுத்தடுத்து தனது பாராளுமன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு சட்டமாக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயன்று வருகிறது. ஏற்கனவே தீர்மானமாக்கப்பட்டு சட்டவரைவு மொழிக்குக் கொண்டுவரப்பட்டுவிட்ட இச்சட்ட மூலங்கள் குறித்து இனி மக்களுடன் பேசப்போவதாக சிறிலங்கா அரசத்தலைவர் அநுரகுமர திசநாயக்கா கூறுவது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயற்பாடாகவே உள்ளது.
01. பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாத்தல் சட்டமூலம் 02. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுத்தல் சட்டமூலம். 03. அரசுசாரா நிறுவனங்கள் (பதிவு செய்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்) சட்டமூலத்திற்கான முன்மொழிவு 04. சிறிலங்கா ஊடக நிபுணர்கள் பட்டய நிறுவன சட்டமூலத்திற்கான முன்மொழிவு, என்பனவே பிரச்சினைக்குரியதாகவுள்ள நான்கு சட்டமூலங்களுமாகும்.
இவை நான்குமே தனித்தனிச் சட்டமூலங்களாக இருப்பினும் ஈழத்தமிழர்களின் இறைமையின் மீளுறுதிப்படுத்தலைத் தடுத்து ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்குதல் என்பதில் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. பெயரளவில் முழு சிறிலங்கா மக்களுக்கும் என்று பேசப்பட்டாலும் இவற்றால் பாதிப்புகளைச் சந்திக்கப் போகின்றவர்கள் அரசியல் விழிப்புணர்ச்சியுள்ள ஈழத்தமிழர்களே என்பதற்கு இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றுச் சான்றாதாரங்கள் நிறைய உள்ளன என்பதனை இலக்கு மீள்நினைவூட்ட விரும்புகிறது.
1979 இல் ஜே. ஆர். ஜயவர்த்தனா தற்காலிகச் சட்டமாகக் கொண்டு வந்து இன்று வரை 47 ஆண்டுகள் ஈழத்தமிழர்களிடையில் அவர்களுக்கு இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை உள்ள தொன்மையும் தொடர்ச்சியான இறைமையின் அடிப்படையில் அவர்கள் தங்கள் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை மீளுறுதி செய்ய எடுக்கும் எத்தகைய செயற்பாடுகளையும் ஒழிக்க அவர்களை அழிக்கும் இனஅழிப்பை இனத்துடைப்பைப் பண்பாட்டு இனஅழிப்பை சட்டபூர்வமாக நிலைப்படுத்தி வருகிறது. இதனை நிரந்தரச் சட்டமாகவே மாற்றச் சிறிலங்காவின் படைத்துறையினரும் சட்டமா அதிபர் திணைக்களமும் இயற்றியுள்ள புதிய சட்டம்தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கவென்று கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம். ஜே. ஆர். ஜெயவர்த்தனா பயங்கரவாதத்தடைச் சட்டத்தை அடுத்து 1983இல் 6வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தால் எவ்வாறு ஈழத்தமிழர்கள் தங்களின் வரலாற்றுத் தாயகத்தை தமது என்று பேசுவது கூடப் பிரிவினை என வரையறுத்ததோ அவ்வாறே இந்தச் சட்டமும் ஈழத்தமிழர்கள் தங்கள் வரலாற்றுத் தாயகம் தேசியம் தன்னாட்சி என்று சிந்தித்தாலே அதனையும் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரான பயங்கரவாதக் குற்றச் செயலாகப் பிரகடனப்படுத்தும் பேராபத்தைக் கொண்டுள்ளது. இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பில் இலங்கைத் தீவின் தேச இனமாகவும் நவீன அரசியலில் யாழ்ப்பாண வன்னி அரசின் குடிகளாகவும் உலகு கண்டுகொண்ட ஈழத்தமிழர்களை சமூகம் (community) என புதிய வரைவினை உருவாக்கி பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் உருவாக்கிய ‘சிறுபான்மை இனம்’ என்கிற தவறான வரைவிலக்கணம் அளிக்கும் பாதுகாப்புகளைக் கூட நீக்கி சிறிலங்கா அரசிலுள்ள அரசியல் உரிமையற்ற சமூகமாக மாற்ற முயல்வதன் வழி தோன்றக் கூடிய ஈழத்தமிழரின் ஜென்சி அல்பா தலைமுறையினரின் சனநாயக எதிர்ப்புக்களை ஒடுக்குவதற்கான இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற்படுத்துவதற்கான போரியல் உத்தியாகவே அமைகிறது என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
இந்நிலையில் அனைத்துலக இனமாக இன்று புலம்பெயர்ந்து வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகளாவிய நிலையில் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியலமைப்பு தங்களின் பூர்வீகத் தாயகத்தையும் மக்களையும் அடிமைப்படுத்துவதற்கு தோற்றுவிக்கக் கூடிய அனைத்துலக மட்டத்திலான சனநாயக எதிர்வினைகளை சிறிலங்கா என்னும் அரசுக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களாகப் பிரகடனப்படுத்தி அதனைத் தடுப்பதற்கான அனைத்துலக கைது ஆணைகளை பிறப்பிப்பதற்கான உத்தியாகவே இரண்டாவது சட்டமூலமான “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுத்தல் சட்டமூலம்.” உள்ளது.
அத்துடன் சிறிலங்காவின் இனஅழிப்பால் பாதிக்கப்பட்டு தங்கள் உயிரையும் உடைமைகளையும் நாளாந்த வாழ்வையும் பாதுகாக்க இயலாமல் தவிக்கும் தாயக ஈழத்தமிழர்களுக்கு அனைத்துலக இனமாக உள்ள ஈழத்தமிழர்கள் நிதியும் மதியும் அளித்து அவர்களைப் புனர்வாழ்வு பெறச் செய்வதை எல்லைப்படுத்தும் அல்லது தடுக்கும் சட்டமாகவே அரசுசாரா நிறுவனங்கள் (பதிவு செய்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்) சட்டமூலத்திற்கான முன்மொழிவு உள்ளது.
இந்நிலையில் தாயகத்திலும் அனைத்துலகிலும் ஈழத்தமிழர்கள் வானலைகள் இணையவெளிகள் மெய்நிகர் வெளிகள் வழி இனத்துவ மொழித்துவ பண்பாட்டு நிலை உறவுகளை வளர்த்துக்கொள்வதைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக மனித உரிமைகள் குரலாக செயற்படுவதைத் தடுக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆழ்நிலை அரசின் செயற்பாடுதான் நான்காவது சட்ட முன் மொழிவான சிறிலங்கா ஊடக நிபுணர்கள் பட்டய நிறுவன சட்டமூலத்திற்கான முன்மொழிவு,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இந்த ஆழ்நிலை அரசின் செயற்பாடுகள் போட்டுள்ள போட முற்படும் இந்த ஈழத்தமிழர் இறைமையான நான்கு சட்ட முடிச்சுக்களின் நுணுக்கமான சட்ட இனஅழிப்பு முயற்சிகளிலிருந்து ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கும் வலிமை அனைத்துலக இனமாகவுள்ள ஈழத்தமிழர்களின் ஒருமைப்பாட்டில் (integrity) தான் உள்ளது என்பது இலக்கின் தெளிந்த முடிபு. ஒருமைப்பாடு என்பது உள்ளத் தளவில் உண்மைகளின் அடிப்படையில் இணைந்து அதனை நிலைப்படுத்தச் செயற்படுத்த எடுக்கும் உள்ள உறுதி. இந்த ஒருமைப்பாட்டு உணர்வுதான் மாறுபாடுகளை மதித்து (Value the diversity) சமூக விலக்குகளை (Social exclusion) சமூக உள்வாங்கல்களாக (Social inclusion) மாற்றிச் செயலுக்கான ஒற்றுமையை (Unity) நடைமுறைப்படுத்தும். மேற்குலக அரசியலில் இதனை பொதுநன்மை (Common Good) எனக் கூறி அந்தப் பொதுநன்மை கருதிய செயலில் விருப்பக் கூட்டணியாக ( Coalition of the Willingness) அவரவர்களுடைய மற்றைய வேறுபாடுகள் மாறுபாடுகள் நடுவிலும், இணைந்து செயற்படுவதற்கான செயலணிகளை உருவாக்க உதவும். இதுவே இன்று உக்ரேனுக்கு உதவும் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பிரித்தானியா அதனுடன் இணைந்து செயற்படுவதற்கான பொறிமுறையாக உள்ளது. இத்தகைய ஒரு விருப்பக் கூட்டணியாக (Coalition of the Willingness) ஆவது அனைத்துலக இனமாக உள்ள ஈழத்தமிழினம் இணைந்து செயற்படாவிட்டால் அநுர அரசின் ஆழ்நிலை அரசு ஈழத்தமிழர்களின் இறைமைக்கு போடும் நாலு முடிச்சை அவிழ்க்க இயலாத நிலையே நடைமுறையாகும் என்ற எச்சரிப்பை இலக்கு அழுத்திக் கூற விரும்புகிறது.
ஆசிரியர்




