வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனஜீவராசிகள் திணைக்களம் புதிதாக காணிகளை ஆக்கிரமிக்கவில்லை என சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
மேலும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமான காணிகளை துல்லியமாக அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் வெகுவிரைவில் விடுவிக்கப்படும். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள திவுலான போன்ற வனப் பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மாத்திரம் கால்நடை மேய்ச்சல் நிலங்களுக்கான அனுமதி சட்ட ரீதியில் வழங்கப்படவில்லை.
கிழக்கு மாகாணத்தில் வனப்பாதுகாப்பு பகுதிக்குள் கால்நடைகளை கொண்டு செல்லும் போது கப்பம் கோரப்படுவதாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (26) வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



