இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தமிழ் அகதிகள் உதவிகளை கோரி போராட்டம்!

06. நாட்டின் இறுதிப் போரின்போது நாட்டை விட்டு வெளியேறி, கடந்த 15 ஆண்டுகளாக இந்தோனேசியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள், தங்களையும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தோனேசியாவில் தற்போது 75 குடும்பங்களும், தனிநபர்களாக 38 பேரும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 123 பேரும், பெண்கள் 99 பேரும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 123 பேரும் அடங்குகின்றனர்.

மொத்தமாக 345 இலங்கை அகதிகள் அங்கு வசித்து வருகின்றனர்.

மேலும், இந்தோனேசியாவில் அகதிகளாக வாழ்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்முடன் இந்தோனேசியாவுக்கு வந்த பலரும், ஏனைய நாடுகளைச் சேர்ந்த அகதிகளும் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் ஊடாக வேறு நாடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில், தங்களை மட்டும் கைவிட்டுள்ளதாகவும், தமது நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அங்குள்ள ஈழ அகதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தங்களுக்கு உரிய தீர்வை வழங்குமாறு கோரி அவர்கள் அங்கு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான காணொளி காட்சிகளும் தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.