தமிழர் தாயகத்தில் காவல்துறையின் எதிர்ப்புக்கு மத்தியில் மாவீரர் நினைவேந்தல்கள்

மாவீரர் வாரத்தையொட்டி வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பல இடங்களில் காவல்துறையினரின் பிரசன்னமும் செயற்பாடுகளும் நினைவேந்தலில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதேவேளை, சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து, காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, சாவகச்சேரி நகரப் பகுதியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வரும் சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் கிஷோரும் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.

இதன்போது, மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு காவல்துறையினர் எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தடைசெய்யப்பட்ட சின்னங்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும், நினைவேந்தல் நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியதாக கிஷோர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வந்தமை தொடர்பில் காவல் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்குக் கொண்டுவந்ததாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், திருகோணமலை – தம்பலகாமம் பொற்கேணி பிள்ளையார் கோயில் முன்றலில் மாவீரர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) கொட்டும் கனமழைக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் ஏற்பாட்டு குழு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், அகவணக்கம் செலுத்தி கண்ணீர் மல்க மலர்தூவி மலர்மாலை அணிவித்து உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வின் ஒரு பகுதியாக உயிர்நீத்தவர்களின் நினைவாக மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.

இதன்போது கலந்துகொண்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாவீரர்களின் தியாகங்களையும் நினைவுகளையும் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்து நினைவு பேருரைகளும் இடம்பெற்றுள்ளன.