தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தற்போதைய அரசாங்கமாவது தீர்வு வழங்க வேண்டும் என்கிறார் ஸ்ரீநேசன்!

“மாவீரர் வாரத்தில் எமது இனத்துக்காக குரல் கொடுத்து உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கமாவது தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் போராடி தமது உயிரை இனத்துக்காக அர்ப்பணித்த எம் உறவுகளுக்கு உயரிய சபை ஊடாக அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

அதேநேரம் சுற்றுலாத்துறை தொடர்பாகவும் அவர் கருத்துரைத்திருந்தார்.

“சுற்றுலாத்துறை என்பது மிகவும் முக்கியமான துறையாகும். இதனை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் வேகமாக முன்னெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் சுற்றுலாத்துறை ஓரளவுக்கு முன்னேறுகின்றது.

அத்துடன் அந்நியசெலாவணியை தருக்கின்ற மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு தேவையான விடயங்களையும் ஏற்படுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

” மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலையில் உள்ள கடற்கரை சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

தென்னிலங்கை பகுதியில் காணப்படும் சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்வதை போன்று கிழக்கில் உள்ள சுற்றுலாத்தளங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யும் போது சுற்றுலாத்துறை மூலம் நாட்டின் வருவாயை அதிகரிக்க முடியும்” என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.