குற்றப்புலனாய்வு பிரிவின் தலையீட்டை அடுத்தே செம்மணி விசாரணை திசை திருப்பப்படுவதாக குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கிற்குள் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் உள்நுழைந்ததன் பிறகு ராஜ்சோமதேவவின் இடைக்கால அறிக்கை திசை திருப்பப்பட்டதாக வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில்  நேற்று (17) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “செம்மணி மனிதப் புதைகுழி குறித்த ராஜ்சோமதேவவின் அறிக்கை அண்மையிலே மிக மோசமாக வெளிவந்திருக்கின்றது. நோய் வாய்ப்பட்டதனாலும் மற்றும் சித்தர்களுடைய சமாதி என்ற அடிப்படையிலும் அந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

அங்கு மீட்கப்பட்ட எச்சங்கள் 1990ஆம் ஆண்டுக்கு உரியவையாக இருக்கின்ற சூழ்நிலையில் 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு யாழ் குடாநாட்டில் எந்தவொரு நோய் நிலைமையும் ஏற்படாத நிலையில் இதுவொரு திசைதிருப்பலாக இருக்கின்றது” என்று அவர் வலியுறுத்தினார்.

“சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இந்த வழக்கிற்குள் உள்நுழைந்ததன் பிற்பாடு இந்த அறிக்கை இவ்வாறு திசைதிருப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

பெருமளவு எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுகின்ற காரணத்தினாலும் சர்வதேச முக்கியத்துவம் என்ற காரணத்தினாலும் இந்த செம்மணி மனிதப் புதைகுழியை மூடுவதற்காகவே சிறிலங்கா அரசு இதைச் செய்கின்றது. அதை நாங்கள் கண்டித்து சர்வதேச நீதி வேண்டி இந்தப் போராட்டத்தினை முன்னெடுக்கின்றோம்”.

“சிறிலங்காவின் உள்ளகக் கட்டமைப்பில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணையே எங்களுக்கான தீர்வைத் தரும். சர்வதேச சமூகம் இதிலே தலையிட்டு நீதியைப் பெற்றுத்தர வேண்டும்” என்று வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.