சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 61 பேர் கைது!

நாட்டின் கரையோரப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 61 பேர்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவம்பர் 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  இந்த நடவடிக்கைகளின் போது 18 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் கடற்படை கட்டளைகளினால் திருகோணமலையின் பொல்மல்குடா, நீலக்கேணி, கோணேஸ்வரம், கோக்கனட் பொயின்ட், பவுல் பொயின்ட், பிளாக் ஸ்டாப் மற்றும் சல்லிக்கோவில் ஆகிய பகுதிகளிலும், முல்லைத்தீவின் நாயாறு மற்றும் புதுமாத்தளன் பகுதிகளிலும், மன்னாரின் தாழ்வுபாடு, பேசாலை மற்றும் உருமலை பகுதிகளிலும், புத்தளத்தின் நுரைச்சோலை மற்றும் கருக்கப்பனை ஆகிய கரையோரப் பகுதிகளிலும் இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஈச்சிலம்பற்று, கொட்பே, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களிடமும் புல்மோட்டை பொலிஸ் நிலையத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் குறிப்பிட்டுள்ளது.