2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் என்பது வெறுமனே எண்களின் தொகுப்பல்ல. மாறாக,சர்வதேச நிதியத்தின் கடுமையான நிபந்த னைகள், பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மை, மற்றும் கடந்த காலத் தவறுகளிலிருந்து மீண்டெழ முயலும் நாட்டின் பொரு ளாதாரப் போராட்டத்தின் வெளிப்பாடுமாகும்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர்கள், குறிப்பாக ‘தித்வா’ சூறாவளியால் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான உட்கட்டமைப்புச் சேதங்கள் மற்றும் விவசாய அழிவுகள் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழலில் இந்த வரவு–செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் மொத்த வருமானம், செலவீனம், பற்றாக் குறை நிலை மற்றும் துறைசார் ஒதுக்கீடுகள் ஆகியவற்றை ஆழமாக ஆராயும் போது, இது ஒருபுறம் கடுமையான நிதிக் கட்டுப்பாட்டையும், மறுபுறம் சமூகப் பாதுகாப்பையும் பேண முற்படும் கடினமான சமன்பாடாக அமைகிறது.
2027ஆம் ஆண்டிற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள மொத்த வருமானம் மற்றும் நன்கொடைத்தொகை 6,180 பில்லியன் ரூபாவாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 15.8சதவீதமாகும். அதேசமயம், நாட்டின் மொத்தச் செலவீனம் 7,673 பில்லியன் ரூபாவாக அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 19.7சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக ஏற்படும் அடிப்படை வரவு–செலவுப் பற்றாக்குறை 1,493 பில்லியன் ரூபாவாக அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8சதவீதமாக அமைகிறது. எனினும், சூறாவளி போன்ற எதிர்பாராத பேரழிவுக ளால் ஏற்பட்ட சேதங்களை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் மதிப்பீடான 260 பில்லியன் ரூபாவையும் சேர்த்தால், மொத்த பற்றாக்குறை 4.5சதவீதமாக சுமார் 1,750 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கிறது.
இந்தத் தரவுகள் எதை உணர்த்துகின்றனவெனில், இலங்கை இன்னும் தனது வருமான மூலங்களைப் போதுமான அளவு விஸ்தரிக்கவில்லை என்பதையும், அரச செலவீனங்க ளைக் கட்டுப்படுத்துவதில் தொடர்ந்தும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறது என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது. குறிப்பாக, இந்தச் செலவினங்களில் மிகப் பெரிய சுமையாகக் காணப்படுவது கடன் வட்டி செலுத்துதலாகும். இதற்காக மட்டும் 2,643 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதாவது அரசாங்கம் ஈட்டும் ஒவ்வொரு 100 ரூபா வருமானத்திலும் சுமார் 43 ரூபா வட்டிச் செலுத்துதலுக்கே செலவிடப்படுகிறது. தேசிய வளங்கள் பெரும்பகுதி கடந்த காலக் கடன்களை அடைப்பதற்கே சென்று சேரும் போது, கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலனுக்கான முதலீடுகள் சுருங்கு வது தவிர்க்க முடியாததாகிறது.
இருப்பினும், இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மூலதன முதலீடுகளுக்கு 1,750 பில்லியன் ரூபாவை (துணை மதிப்பீடுகளுடன் சேர்த்து மொத்தம் 2,000 பில்லியன் ரூபாவை) அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை பொருளாதார மீட்சிக்கு வித்திடும் சாதகமான அம்சமாகக் கருதலாம்.
அதிவேக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, புதுப் பிக்கத்தக்க சக்தியூடாக மின்மயமாக்கல், கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற துறைகளில் இந்த முதலீடுகள் அரசாங்கம் எதிர்பார்ப்பது போன்று பலனளிக்க வேண்டும். நாட்டின் நிர்வாகம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள்; கவனிக்கத்தக்கவையாகும்.
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடுகளின்படி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு அதிகூடிய நிதி கோரப்பட்டுள்ளதோடு, மாகாண சபைகள் மற்றும் பொதுமக்கள் நிர்வாகத் துறைகளுக்கும் பெருமளவி லான தொகைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப் புத் துறைகளைப் பொறுத்தவரை, தேசியப் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுகின்ற கட்டமைப்புகளுக்குத் தேவையான பிரதான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பாதுகாப்பு அமைச்சுக்கு சுமார் 458 பில்லியன் ரூபாவும், சட்டம்–ஒழுங்கு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு தொடர்பான பிரிவுகளுக்கும் உரிய நிதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச வர்த்தகப் பாதுகாப்பிற்கு இது அவசியமெனினும், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுடன் ஒப்பிடும் போது பாது காப்புத்துறைக்கான ஒதுக்கீடுகள் இன்னும் நியாயமான விகிதாசாரப் பகிர்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மறுபுறம், சமூக நலன் மற்றும் மனித வள மேம் பாட்டின் தூண்களாக விளங்கும் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு அரசாங்கம் வழமைபோல முக்கியத்துவம் அளித்துள்ளதாகக் காட்டிக்கொண்டாலும், பணவீக்க உயர்வு மற்றும் நாணய மதிப்பிறக்கம் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இந்த ஒதுக்கீடுகள் போதுமானதாக உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை சார்ந்த அமைச்சின் கீழ் ஒருங்கிணைந்த ஒதுக்கீடுகள் வழங்கப் பட்டுள்ளதோடு, சுகாதாரத்துறையின் கீழ் புதிய மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்ய 5 பில்லியன் ரூபாவும், அவசர ஊர்தி சேவைகளுக்காக 3 பில்லியன் ரூபாவும், சுகாதார ஊழியர்களின் படிகளுக்காக 16.2 பில்லியன் ரூபாவும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
எனினும், பொது மருத்துவமனைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் அடிப்படை வசதிக் குறைபாடு களை நிவர்த்தி செய்ய இந்த நிதி எந்தளவுக்குப் போது மானதாக இருக்கும் என்பது நடைமுறைச் செயலாக்கத்தில் தான் புலப்படும்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித் துறை களுக்குக் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு, பள்ளிக் கல்வி உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுக்காக 35 பில்லியன் ரூபாவும், பல்கலைக்கழகக் கல்வி மேம்பாடு மற்றும் மாணவர் நலனுக்காக மேலதிகப் பணமும் வரவு–செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆனாலும், உலகளாவிய தரத்திலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி மிகக் குறைவாகவே உள்ளது. இந்த வரவு–செலவுத் திட்டமானது நுண்பாகப் பொருளாதார ஸ்திரத் தன்மையைப் பேணுவதையும், சர்வதேச நிதியத்தின் இலக்குகளைத் துல்லியமாக அடை வதையும் தனது முதன்மைக் குறியீடாகக் கொண்டுள்ளது. ஆனால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைச் சுமை மற்றும் பணவீக்கம் (அக்ரோபர் 2026 நிலவரப்படி கொழும்பு பணவீக்கம் 8.3 சதவீதம்) போன்ற கடுமையான யதார்த்தங்களை இது எந்தளவுக்கு சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வருமான வரி விலக்கு எல்லை உயர்த்தப்பட்டமை, மற்றும் அஸ்வெசும உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங் களுக்கு 230 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டமை போன்ற நிவாரணங்கள் ஓரளவு ஆறுதல் அளித்தாலும், மறைமுக வரிகளின் தாக்கம் நடுத்தர மற்றும் விளிம்புநிலை மக்களைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கியே வருகிறது.
இலங்கையின் பொருளாதாரம் முழுமையான மீட்சியைப் பெற வேண்டுமானால், இறக்குமதிச் சார்புக் பொருளாதாரத்திலிருந்து ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்திற்கு மாற வேண்டியது அவசியமாகும்.
ஆனால், அநுரகுமாரவின் மூன்றாவது வரவு–செலவுத் திட்டத்தில் உள்நாட்டு விவசாயிகளுக்கு நேரடி மானியங்கள், ஏற்றுமதியாளர் களுக்குத் தேவையான மூலப்பொருட்களுக்கான வரிச் சலுகைகள் மற்றும் சிறு, நடுத்தரத் தொழில்துறைகளை மீளுருவாக்கம் செய்வதற்கான நீண்டகால மூலதன ஊக்கத் தொகைகள் என்பன போதுமான அளவு பலப்படுத்தப் படவில்லை.
இந்நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு–செலவுத் திட்டம் என்பது நெருக்கடிகளைச் சமாளிக் கும் இலக்கங்கள் நிறைந்தவொரு ‘ஆவணமாக’ மாத்திரமே பார்க்க முடிகிறதே தவிர, நாட்டை ஒரு நீண்டகாலப் பொருளாதாரச் செழிப்புக்கு இட்டுச் செல்லும் ‘வளர்ச்சி வழிபட ஆவணமாக’ முழுமையாக உருவெடுக்கத் தவறியுள் ளது என்றே கூற வேண்டும்.
கடுமையான நிதி ஒழுக்கம் மற்றும் வரி முகாமை அவசியம்தான் என்றாலும், பொதுமக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தாத எந்தவொரு திட்டமும் நீடித்த பலனைத் தராது. எதிர்காலத்தில் அரசாங்கம் தனது வருமானத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஊழலை ஒழித்தல், அரச நிறுவனங்களின் செயற்றிறனை மேம்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தல் மூலமாக மட்டுமே இத்தகைய வரவு–செலவுத் திட்டங்களின் உண்மையான பலன்களை மக்களிடம் சேர்க்க முடியும்.
அதுவரையில் இந்த வரவு–செலவுத் திட்டம் என்பது வெறுமனே இலக்கங்களும், தரவுகளும், யோசனைகளும் நிறைந்த ஆவணமாகவே இருக்குமே தவிரவும் நாட்டின் பொருளாதாரத்தை முன் னோக்கி கொண்டு செல்வதற்கான பங்களிப்பை ஒரு போதும் வழங்கப்போவதில்லை.



