அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் தேரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த ராஜாங்கனை சத்தாரதன தேரர் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதை பலாங்கொடை கஸ்ஸப தேரர் தரப்பிலுள்ள அனைவரும் மறுத்துள்ளதாக அநுராதபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ருவன்வெலிசாயவிற்கு அருகிலுள்ள இடத்திற்கு வந்த ராஜாங்கனை சத்தாரதன தேரர் உட்பட சிவில் நபர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள் மற்றும் பொது மக்களுடன் மோதலை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுக்காக எந்தவொரு சந்தேகநபரும் அநுராதபுரம் தலைமையக காவல்துறையினரால் இதுவரை கைது செய்யப்படவில்லை.
குறித்த குழுவினரை ஏன் கைது செய்யவில்லை என ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அநுராதபுரம் பிரதேச உயர்மட்டப் காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ராஜாங்கனை சத்தாரதன என்பவர் அல்லது அவருடன் வந்ததாகக் கூறப்படும் நபர்கள் குறித்து வாக்குமூலம் வழங்குவதை பலாங்கொடை கஸ்ஸப தேரர் தரப்பிலுள்ள அனைவரும் மறுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த மோதலின் போது தலையில் காயம் ஏற்பட்டு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜாங்கனை சத்தாரதன தேரர், தற்போது அநுராதபுரம் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பலங்கொடை கஸ்ஸப தேரர் மேற்கொண்ட சத்தியாக்கிரகம் ஒரு ஒழுங்கற்ற சதி என்றும், இத்தகைய போராட்டங்கள் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் உரையாற்றுகையில், தங்களது அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை விமர்சிப்பதற்கோ அல்லது எதிர்ப்பு தெரிவிப்பதற்கோ எந்தத் தடையும் இல்லை என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அவற்றை முறையான சட்டரீதியான கட்டமைப்பிற்குள் செய்ய வழிகள் இருந்தாலும், இத்தகைய விசித்திரமான நடத்தைகளில் ஈடுபடுபவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பது குறித்து ஒரு பயங்கரமான சித்திரத்தை உருவாக்குகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஒழுக்கமற்ற, ஒழுங்கமைக்கப்படாத, இலக்கற்ற, நோக்கமற்ற, குருட்டுத்தனமான போராட்டங்கள் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்.
அதிலிருந்து ஒரு அராஜகம் உருவாகிறது.
“இப்போது இந்த நாட்களில் ஆங்காங்கே எழும் போராட்டங்களைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது? நாளை என்ன பைத்தியக்காரத்தனம் நடக்கும் என்று தெரியவில்லை”.
“ஒரு சமயம் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறேன். இன்னொரு சமயம் ஒரு தடியை எடுத்து சுழற்றுகிறேன். யோசித்துப் பாருங்கள். இதிலிருந்து என்ன நடக்கிறது? இந்த அராஜகத்தால் நாளை என்ன பைத்தியக்காரத்தனம் நடக்கும் என்று தெரியவில்லை” என்று ஜனாதிபதி கூறினார்.
தொலைநோக்கு கொண்ட, ஒழுங்கமைக்கப்பட்ட, ஒழுக்கமான அரசாங்க விமர்சனத்திற்கு அனைவரும் ஆதரவளிப்போம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.



