மட்டக்களப்பின் மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு – அரச அதிகாரிகளின் அலட்சியம்! | பா. அரியநேத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் தரைகளாகக் காலங்காலமாகப் பண்ணையாளர்களால் கால்நடை களை மானாவாரிப் பெரும்போக நெற்செய்கைக் காலத்தில் அந்தத் தரைகளில் மேயவிடும் இடங்களாகச் செங்கலடி, கிரான் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மயிலத்தமடு மற்றும் மாதவனை, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடு, திபுலானை, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சைப் பகுதி, வாகரை பிரதேச செயலகப் பிரிவில் கட்டுமுறிவு ஆகிய இடங்கள் உள்ளன.

இதில் முக்கியமாக, மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை என்பது அதிகூடிய பசு, எருமை மாடுகள் மேயும் இடமாகப் பூர்வீக காலந்தொட்டு பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை மேயும் இடமாகப் பாவிக்கப்பட்டு வந்தபோதும், எந்தவித அச்சுறுத்தல்களோ, வெளிமாவட்டத் தவர்களின் அச்சுறுத்தல்களோ, அத்துமீறல்களோ அங்கு இருக்கவில்லை. ஆனால், 2009 மே 18க்குப் பின்னர், தற்போது இலங்கை ஆட்சியாளர்களால், குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ வின் அரசாங்கம் செயல்பட்ட காலத்தில், விடுதலைப் புலிகள் இல்லாத காலத்தில் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைகளை வெளிமாவட்டச் சிங்களவர்களை வரவழைத்து நெற்செய்கைக்கும் ஏனைய பயிர்ச்செய்கைக்காகவும் அத்துமீறிக் காணிகளை வழங்கித் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான அத்திவாரம் போடப்பட்டது.
இந்த விடயம் கடந்தகால மஹிந்த ஆட்சி, மைத்திரி ஆட்சி, கோட்டா ஆட்சி, ரணில் ஆட்சி என எல்லோருடைய ஆசீர்வாதங்களுடன் தொடர்ந்து, தற்போதைய அநுர ஆட்சியும் அதனைத் தொடர்கிறது. கடந்த 17 வருடங்களாகப் பண்ணையாளர்களுக்கு அச்சுறுத்தல்களும், மாடுகளை வெட்டியும் சுட்டும் கொலை செய்வதும் தொடர்கதைகளா கவே உள்ளன.
இதனைத் தடுக்கும் விதமாக மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் பேச்சுவார்த்தைகள், கவன ஈர்ப்புப் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் என 2011 தொடக்கம் தற்போது 2026 வரை தொடர்ச்சியாக முன்னெடுத்து, ஏறாவூர் நீதிமன்றம், கொழும்பு உயர் நீதிமன்றம் என் பவற்றில் அத்துமீறிய வெளிமாவட்டத்தவர்களை வெளியேற்றுமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளின் அடிப்படையில், அந்த அத்துமீறிய வெளிமாவட்டத்தவர் களை வெளியேற்றுமாறு நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப் பட்டபோதும், அதனை நிறைவேற்றாதவர்களாக மாவட்ட அரச நிர்வாகம், பொலிஸ் திணைக்களம் என்பன தொடர் ந்தும் மௌனம் காத்து, மறைமுகமாக அத்துமீறிய வெளி மாவட்டத்தவர்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட ஆதரவுகளை வழங்குவதையே காணமுடிகிறது.
நீதிமன்றத் தீர்ப்பின்படி, மாவட்ட அரச அதிபரும் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட வெளிமாவட்டத்தவர்களை வெளியேற்றவில்லை. மாறாக, அவர்கள் தொடர்ந்தும் பயிர்ச்செய்கை செய்வதற்கு அனுமதித்துள்ளனர்.
கடந்த 2026 மே 20ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுர அவர்கள், மேய்ச்சல் தரைக்காக 1570 ஏக்கர் நிலங்களை விடுவிப்பதாகக் கூறியிருந்தார். அவர் கூறிய வாக்குறுதி ஐந்து மாதங்கள் கடந்தும் நிறைவேற்றப் படவில்லை. மாறாக, மேய்ச்சல் தரைகளில் புல் மேயும் வழமையான காணிகளில் அத்துமீறி நெற்செய்கை பண்ண வெளிமாவட்டத்தவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளமை திட்டமிட்டு மண்ணாளர்களை ஓரங்கட்டும் செயலாகவே உள்ளது.
கடந்த 02/11/2026 அன்று மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் முன்பாக இடம்பெற்ற கவன ஈர்ப்புப் போராட் டத்தின்போது கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் களான ஞா. ஸ்ரீநேசன், இ. ஸ்ரீநாத் ஆகியோர் மாவட்ட அரச அதிபரைச் சந்திக்கச் சென்றபோது, பொலிஸார் வாயிலில் வைத்து அவர்களைத் திருப்பி அனுப்பிய செயலானது கண்டிக்கத்தக்கதும், அவர்களுடைய சிறப்புரிமையை மீறியதுமாகும்.
1978ஆம் ஆண்டு இலங்கைச் சனநாயகச் சோசலி சக் குடியரசின் அரசியலமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் களுடைய சிறப்புரிமை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்தச் சிறப்புரிமையை மட்டக்களப்பு அரச அதிபரும் பொலிஸாரும் மீறியுள்ளனர் என்பதை இந்தச் செயல் தெளிவாகக் காட்டியுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்றிருந்த பண்ணையாளர் கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஐவரை மட்டும் மாவட்டச் செயலாளர் தமது அலுவலகத்தில் வரவழைத்து, மேய்ச்சல் தரையில் அத்துமீறி விவசாயம் செய்பவர்களுக்கு எந்த இடையூறும் கொடுக்காவண்ணம் பண்ணையாளர்கள் தமது மாடுகளை மேய்க்கலாம் என்ற சாரப்படவே அவரு டைய கருத்து அமைந்திருந்தது.
பெரும் திரளான மக்கள் ஏன் போராட்டத்தை நடத்தி னர், அவர்களுடைய நியாயத்தன்மைகளைக் கேட்டறியக்கூட மாவட்ட அரச அதிபர் உதாசீனம் செய்த செயலையே அன்று காணமுடிந்தது. எந்த ஒரு போராட்டம் இடம்பெற்றாலும், அவர்களுடைய கோரிக்கைகளை மக்கள் முன்வந்து பதில் கூறுவதையே கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர்களால் கடைப்பிடிக்கப்பட்ட வரலாறுகள். ஆனால், முதல் தடவையாக அநுர அரசின் ஆட்சியில்தான் ஒரு மாவட்ட அரச அதிபர் பண்ணையாளர்களையும் பாரா ளுமன்ற உறுப்பினர்களையும் உதாசீனம் செய்துள்ளார் என்பதைக் காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு, மாத வனையில் வெளிமாவட்டச் சிங்களவர்களைப் பயிர்ச்செய் கைக்காக அனுமதித்த அரச நிர்வாகம், சட்டரீதியாகக் காணி இல்லாதவர்கள், விவசாயம் செய்யும் காணி உரிமைகள் இல்லாதவர்கள், விவசாயப் பயிர்ச்செய்கைக்கான PLR பதிவு கமநல சேவை நிலையம் ஊடாக இல்லாதவர்களை எப்படி, எந்தச் சட்டத்தின் ஊடாகப் பயிர்ச்செய்கை செய்ய அனுமதித்தனர் என்பதற்கான பதிலை மாவட்ட அரச அதிபர் கூற மறுத்துள்ளார்.
அதேவேளை, தற்போதைய அநுர அரசு கூறும் தாரக மந்திரம்: “சட்டம் அனைவருக்கும் சமம்”. அப்படி யானால், மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச் சல் தரைகளில் அத்துமீறி விவசாயம் செய்யும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் வழங்கிய சட்டத் தீர்ப்பை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? சட்டம் எல்லோருக்கும் சமம் இல்லை என்றல்லவா அநுர அரசின் ஆட்சி தொடர்கிறது? அதுபோலவே, இலங்கையின் அதிஉயர் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தேரர்களைக் கைது செய்யவில்லை. சட்டம் இருட்டறை என்பது இப்படியான வெளிச்சத்திற்கு வரும் விடயங்களை மூடி மறைப்பதாலோ, அப்படி சட்டம் இருட்டறையானது என நினைக்கத் தோன்றுகிறது.
மட்டக்களப்பு மேய்ச்சல் தரையில் வெளிமாவட்டத் தவரைக் குடியமர்த்தும் நிகழ்ச்சித் திட்டமான திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் ஒரு வேலைத்திட்டத்தை கடந்தகால மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஒரு சிங்கள அமைப்பு ஆரம்பித்து, அதன் வேலைத்திட்டங்கள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டன. இதனைத் துரிதமாகச் செயற்படுத்த மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக 2019 நவம்பர் 18இல் பதவியேற்ற பின்னர், கிழக்கு மாகாண ஆளுநராக 2019 மே 15இல் அனுராதா யஹம்பத்தை ஜனாதிபதி கோட்டாபய நியமித்தார். அவர் அன்று தொடக்கம் 2023 டிசம்பர் 04 வரை கிழக்கு மாகாண ஆளுநராக ஏறக்குறைய நான்கு வருடங்கள் கடமையாற்றினார். அந்த நான்கு வருடங்கள்தான் அவருடைய நேரடி வழிகாட்டலில் மயிலத் தமடு, மாதவனையில் திட்டமிட்ட அத்துமீறிய பயிர்ச்செய்கை என்ற போர்வையில் குடியேற்றங்கள் இடம்பெற்றன. அந்தப் பெண்மணி அந்த மட்டக்களப்பு மேய்ச்சல் தரை அபகரிப்பை மேற்கொள்ளும் சிங்கள அமைப்பில் உள்ளார் என்பதும், அதற்காகவே கிழக்கு மாகாண ஆளுநராக கோட்டாபய அவரை நியமித்தார் என்ற கருத்தும் பரவலாகப் பேசப்பட்டது.
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அப கரிப்புக்கு எதிராகவும், தங்கள் மேய்ச்சல் தரையை மீட்டுத் தரக் கோரியும் மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணை யாளர்களும் பொதுமக்களும் இணைந்து தொடர்ச்சியாகக் கடந்த 17 வருடங்களாகப் போராடிய நிலையில், கடந்த 2026 நவம்பர் 02ஆம் திகதி நடந்த மிகப் பெரிய அளவிலான கவனயீர்ப்புப் போராட்டமானது மாவட்டத்துக்குள் முடங்கிய பிரச்சினை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. எனினும், மாவட்ட அதிகாரிகளின் மெத்தனப் போக்கு தொடருமானால், தொடர்ந்து போராடு வதைத் தவிர வேறு வழியில்லை என்பதே உண்மை.