நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் அநுராதபுரத்தில் தொடரும் பிக்குகளின் போராட்டம்

அநுராதபுரம் புனித நகர திட்டம் மற்றும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பலங்கொட கஸ்ஸப தேரர் தலைமையில் பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (10) நான்காவது நாளாகவும் அநுராதபுரம் ருவன்வெலிசாய மற்றும் ஜயஸ்ரீ மகா போதி பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கடந்த 7 ஆம் திகதி காலையில் ருவன்வெலிசாய அருகில் தானசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் தற்காலிக மேடை ஒன்றை அமைக்க முயன்றதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

இதனையடுத்து அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, ருவன்வெலிசாய மற்றும் ஜயஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித பூமிப் பகுதியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இருப்பினும், நீதிமன்ற உத்தரவையும் பொருட்படுத்தாது பிக்குகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அங்கு தொடர்ந்து தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, நேற்று (09) இரவு வேளையில் போராட்டக் களத்திற்குள் வெளிநபர் ஒருவர் நுழைந்தமையால் அங்கிருந்தவர்களிடையே மீண்டும் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

பிக்குகளின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்ட குறித்த நபர், இது பௌத்த தர்மத்துக்கு எதிரானது என விசனம் வெளியிட்டார்

இதற்கிடையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பலங்கொட கஸ்ஸப தேரர், அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலானது அநுராதபுரத்தின் தொன்மை வாய்ந்த பௌத்த பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அழிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கும் மேலாக பௌத்த மக்களால் வழிபடப்பட்டு வரும் இடத்தை பௌத்த பாரம்பரியப் பகுதியாகக் குறிப்பிடக்கூட அரசாங்கத்திற்கு இயலாமல் போயுள்ளதாகவும், ருவன்வெலிசாய மற்றும் ஸ்ரீ மகா போதி ஆகிய புனித தலங்களில் தங்கி தியானம் மற்றும் ஒழுக்க நெறிகளைப் பேணும் பிக்குகள் மற்றும் பெண் பிக்குமார்களை அங்கிருந்து வெளியேற்றும் வகையிலேயே புதிய வர்த்தமானி அமைந்துள்ளதாகவும் அவர் சாடினார்.

அதேநேரம், பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்திய உளவு அமைப்பான ‘ரோ’வின் (RAW) ஒரு உறுப்பினர் என்றும், கல்விச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் நாட்டின் பிள்ளைகளின் சிந்தனைகளைச் சீரழிக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார் என்றும் பலங்கொட கஸ்ஸப தேரர் இதன் போது விமர்சித்தார்.

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முகவராகச் செயற்பட்டு நாட்டின் வளங்களை இந்தியாவிடம் ஒப்படைத்து வருவதாகவும், நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் பாராளுமன்றத்திற்கோ மக்களுக்கோ தெரிவிக்கப்படாமல் இந்தியாவுடன் 8 இரகசிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.