பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஒழிப்பும் புதிதாக உருவாகும் சட்டப் பொறிகளும் : விதுரன்

இலங்கையில் தசாப்தங்களாக மனித உரிமைகள், மனிதாபிமானங்கள் மற்றும் ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்த 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்கப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியானது, நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்குக் கிடைக்கும் வரலாற்றுத் திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது.

தன்னிச்சையான தடுப்புக் காவல், பொலிஸ் அதிகாரிகளிடம் பெறப்படும் சந்தேகத்திற்கிடமான வாக்கு மூலங்களைச் சாட்சியமாக ஏற்பது, நிறைவேற்று அதிகாரத் தின் கட்டற்ற எல்லைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் போன்ற கொடூரமான கூறுகளுக்காக இச்சட்டம் தொடர்ச்சியாக நீடிக்கிறது. ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது முன்மொழிந்துள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டமூலம்’, ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’ மற்றும் ‘வெளிநாட்டுப் பயங்கரவாதப் போராளிகளை தடுத்தல் சட்டமூலம்’ ஆகிய உத்தேச சட்ட வரைபுகளை ஆழமாகப் பார்க்கின்றபோது அங்கு ஆபத்தான தந்திரோபாய முன்னெடுப்பு இடம் பெறுகின்றமை வெளிச்சத்துக்கு வருகிறது.
கிரேக்க புராணங்களில் வரும் ‘லேர்னாவின் ஹைட்ரா’ (Lernaean Hydra) எனப்படும் ஜலசர்ப்பத்தின் ஒரு தலையை வெட்டும்போது அதற்குப் பதிலாகப் பல தலைகள் முளைப்பது போல, பயங்கரவாதத் தடைச் சட்டத்திலிருந்து நீக்கப்படுவதாகக் கூறப்படும் கொடூரமான அடக்குமுறை அதிகாரங்கள், வடிவம் மாறி ஏனைய உத்தேச சட்டமூலங்களின் வழியே மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் ஓராண்டு நிறைவு சர்வமத நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் பேரழிவில் இருந்து நாட்டை மீட்க வலுவானதொரு சட்டம் அவசியமென்று எடுத்துரைத்தார்.
உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கைச் சுட்டிக்காட்டிய அவர், சந்தேகநபர்களை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் காலப்பகுதியை 48 மணித்தியாலமாகக் குறைக்கவும், மதுவரிச் சட்டம் மற்றும் குற்றக் குழுக்களை இனங்காணும் சர்வதேச முறைகள் தொடர்பான சரத்துக்களைச் சட்ட மூலத்திலிருந்து நீக்கவும் அரசாங்கம் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
மேலும், நிலுவையிலிருந்த 36,000 இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை முப்படைகளின் உதவியு டன் விரைவுபடுத்துதல், கொழும்பில் புதிய உயர் நீதி மன்றங்களை நிறுவுதல் போன்ற நிறுவன ரீதியான சீர்திருத்தங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், ஜனாதிபதியின் இந்த நெகிழ்வுப் போக்கு மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்தும் வாக்கு றுதிகளுக்கு மத்தியிலும், முன்மொழியப்பட்டுள்ள மூன்று சட்டமூலங்களின் ஒருங்கிணைந்த கட்டமைப்பு குடிமக்க ளின் குடிமை உரிமைகள் மீது தோற்றுவிக்கும் ஆபத்துக்கள் எள்ளளவும் குறைந்துவிடவில்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது என்பது, அதிலுள்ள கொடூரமான விதிகளின் இருப்பிடத்தை மட்டும் வேறு சட்டங்களுக்கு மாற்றுவதாக இருக்கக் கூடாது.  ஆனால், செப்டெம்பர் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை’, அதனுடன் இணைந்த ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’ மற்றும் ‘வெளிநாட்டுப் பயங்கரவாதப் போராளிகளை தடுத்தல் சட்டமூலம்’ ஆகிய சட்டமூலங்களுடன் வைத்து ஒப்பிடும்போது, அதிகாரங்கள் மறுவடிவம் பெறும் அவலம் அம்பலமாகிறது.
உதாரணமாக, நடைமுறையில் உள்ள பயங்கர வாதத் தடைச் சட்டம் பொலிஸ் அதிகாரிகளிடம் பெறப் படும் வாக்குமூலங்களைச் சாட்சியமாக ஏற்க வழிவகுத்தி ருந்தது. ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில் அச்சரத்து நீக்கப்பட்டு, நீதிவான் முன் னிலையில் அளிக்கப்படும் வாக்குமூலங்களுக்கு முக்கியத் துவம் அளிக்கப்பட்டபோதிலும், ஒழுங்கமைக்கப் பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் 46 முதல் 52 வரையிலான சரத்துக்கள், குறிப்பாகச் சரத்து 47 ஆனது, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் அளிக்கப்படும் குறிப் பிட்ட சில கையொப்பமிடப்பட்ட வாக்குமூலங்களை மீண் டும் நீதிமன்றத்தில் சான்றாக ஏற்றுக்கொள்ளும் கதவைத் திறக்கின்றது.
இதேபோல், ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில் தடுப்புக் காவல் உத்தரவுகளுக்கு உயர் நீதிமன்ற மேற்பார்வை கோரப்பட்டிருந்தா லும், ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத் தின்’ 20 மற்றும் 21ஆம் சரத்துக்கள் நீதிவான் முன் ஆஜர் படுத்துவதற்கு முன் 72 மணித்தியால அவகாசத்தையும், பொலிஸுக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளருக்கு ஓராண்டு வரை தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கும் பரந்த அதிகாரத்தையும் வழங்குகின்றன. இதன் மூலம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடுமையாக விமர்சிக்கப்பட்ட தன்னிச்சையான தடுப்புக் காவல் முறைமை, ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம்’ என்ற புதிய அடை யாளத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மறுபுறம், ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாது காக்கும் சட்டமூலத்தை’, வரைவில் சேர்க்கப்பட்டிருந்த தகவல் தொடர்பு இடைமறிப்பு, குறியாக்க நீக்கம் மற்றும் வங்கித் தகவல்களைப் பெறும் அதிகாரங்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து வர்த்தமானி வெளியீட்டிலிருந்து நீக்கப்பட்டன.
ஆனால், அதில் அதீத கண்காணிப்பு அதிகாரங்கள் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத் தின்’ 44 மற்றும் 45ஆம் சரத்துக்கள் மூலம் மீண்டும் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நீதிமன்ற உத்தரவு இன்றியே தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் இருப்பிடத் தரவுகளைப் பெற வழிவகுக்கும் இச்சரத்துக்கள் தனிமனித தனியுரிமையின் மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதலாகும்.
அத்துடன், ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’ ஆகிய இரண்டு சட்டமூலங்களுமே சந்தேகநபர்களைக் கைது செய்யவும் சோதனையிடவும் ஆயுதப் படைகளுக்கும் கடலோரக் காவல் படையினருக்கும் பரந்த அதிகாரங்களை வழங்குகின்றன.
சாதாரண சட்டம் ஒழுங்கு நடைமுறைப்பணிகளில் இராணுவப் பங்களிப்பை விரிவுபடுத்துவது, நாட்டின் ஜனநாயக மற்றும் குடியியல் தன்மையை முற்றிலுமாகப் பலவீனப்படுத்திவிடும்.
இச்சட்டங்களின் மிக ஆபத்தான பரிணாமம் என்பது சிவில் உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீது இவை ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கமாகும். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை வரையறுப்பதில் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’ பயன்படுத்தும் அளவுகோல்கள் எல்லை மீறியவை.
அதன் சரத்து 4(2)இன் படி ஒருவரின் ஆடை, உடல் பச்சை அடையாளங்கள், கைச்சைகைகள், மொழி மற்றும் மனித தொடர்புகள் என்பன குற்றக் குழுவின் உறுப்பினராக அவரைக் கருதுவதற்குச் சான்றாகப் பயன்படுத்தப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இணையவழி சமூகங்கள், முறைசாரா அமைப்புகள் மற்றும் அமைதியான முறையில் போராடும் சிவில் செயற்பாட்டாளர்களை எந்த நேரத்திலும் சந்தேகத் தின் கீழ் கைது செய்ய வழிவகுக்கும்.
மேலும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாது காக்கும் சட்டமூலத்தின் 9–11 சரத்துக்கள் பயங்கரவாதத் திற்குப் பயன்படக்கூடிய பிரசுரங்களை வைத்திருப்பதைக் குற்றமாக்குவதும், ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின்’ 14, 56 மற்றும் 65 சரத்துக்கள் முறையான அனுமதியின்றி நீதிமன்ற நடவடிக்கைகளைச் செய்தி வெளியிடுவதைக் கட்டுப்படுத்துவதும் ஊடகவிய லாளர்களின் குரல்வளையை நெரிப்பதாகவே அமைகின்றன.
இதேநேரம், ‘வெளிநாட்டுப் பயங்கரவாதப் போராளி களை தடுத்தல் சட்டமூலத்தின்’ 5ஆம் சரத்து விசாரணைகள் மற்றும் பிணை தொடர்பில் இன்னும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பழைய நடைமுறைகளையே மேற்கோள் காட்டுவதுடன் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின் சரத்து 73, நிலுவையிலுள்ள மற்றும் பழைய வழக்குகளுக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு தொடர்ந்து பொருந்தும் என்று பாதுகாப்பது, அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச்சட்ட ஒழிப்பு நாடகத்தின் போலித் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது.
இத்தாலிய மார்க்சிய சிந்தனையாளர் அன் டோனியோ கிராம்சியின் ‘ஆதிக்கம்’ பற்றிய கோட் பாட்டின்படி, ஒரு நாட்டின் அரச அதிகாரமானது வெறும் நேரடியான வன்முறை மற்றும் ஒடுக்குமுறை மூலம் மட்டும் பாதுகாக்கப்படுவதில்லை; மாறாக, மக்கள் ஒப்பு தலைப் பெறுவதன் மூலமும், தாங்கள் கொண்டுவரும் அடக்குமுறை ஏற்பாடுகளை அவசியமானவை அல்லது தார்மீகமானவை என நியாயப்படுத்துவதன் மூலமுமே அது நிலைநிறுத்தப்படுகிறது.
‘தேசிய பாதுகாப்பு’, ‘பொதுமக்களின் பாதுகாப்பு’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழித்தல்’ போன்ற அழகான சொற்பதங்கள் அரசினால் மக்கள் ஒப்புத லைப் பெற்றுக்கொள்வதற்கான கருத்தியல் முகமூடி களாகப் பயன்படுத்தப்படுகின்றன. சட்டத்தின் பெயரை ‘பயங்கரவாதம்’ என்பதிலிருந்து ‘ஒழுங்கமைக்கப் பட்ட குற்றம்’ என்று மாற்றுவது, பொதுமக்கள் அச்சட்டத்தைப் பார்க்கும் வெளிப்படையான பார்வையை மாற்றக்கூடுமே தவிர, தனிமனித சுதந்திரத்தின் மீது அது ஏற்படுத்தும் வன்மமான தாக்கத்தைக் குறைத்துவிடாது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகப் பிரகடனப்படுத்திக்கொண்டு, அதன் மிகவும் கொடூரமான அடக்குமுறை அதிகாரங்களை ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் சட்டமூலம்’, ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’ மற்றும் ‘வெளிநாட்டுப் பயங்கரவாதப் போராளிகளை தடுத்தல் சட்டமூலம்’ ஆகிய மூன்று சட்டமூலங்களுக்குள் அரசு பிரித்து வைக்குமாயின், அடக்குமுறையை ஒழித்ததாக அர்த்தமாகாது. மாறாக, ஜலசர்ப்பத்தின் ஒரு தலையை வெட்டும்போது அதற்குப் பதிலாகப் பல தலைகள் முளைப்பது போலவே அமையும்.  எனவே, ஒரு அடக்குமுறைச் சட்டத்தை ஒழிப்பது என்பது அதன் ஒரு தலையை மட்டும் வெட்டுவது அல்ல, மாறாக அதன் வேராய் இருக்கும் ஒட்டுமொத்த அதிகாரக்கட்டமைப்பையும் முற்றிலுமாகக் களைந்தெறி வதே நியாயமானதாகும்.