ஈழத்தமிழரின் Gen Z (ஜென்சி) தலைமுறையே ஈழத்தமிழர் இறைமைக்கான ஒரே பாதுகாப்பு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 416

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் 2026இல் Gen Z (ஜென்சி) தலைமுறையினர் என்று சுட்டப்படும் 1997இல் அல்லது அதற்குப் பின்னர் பிறந்து 18 வயதை அடைந்தவர்கள் உடைய தாக்கம், இவர்களில் அரைவாசிப்பேர் வாக்களிப்பதற்குப் பெயரைப் பதியாமலோ அல்லது குடிமைப் பொறுப்புக்களில் அக்கறையற்று விலகியிருந்த போதிலும் கூட, தமது பரப்புரை ரீதியான பல்வேறு செயற்பாடுகள் மூலம் ட்ரம்பின் குடியரசுக் கட்சியின் பாரிய பின்னடைவுக்குக் காரணமாயினர் என்பதனைத் தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. பொருளாதாரம், ஈரான் மேலான போர் என்பன அடுத்த காரணிகளாகவே உள்ளன.
ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிறிலங்கா 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு மூலம் அதன் ஆயுத எதிர்ப்புத் தன்மையை ஒடுக்கிய பொழுது, துப்பாக்கிகள் மெளனிக்கப்பட, சனநாயக வழிகளில் போராட்டத்துக்குப் புதிய வடிவம் கொடுக்க வேண்டிய பொறுப்பு குறிப்பாக 2008ஆம் ஆண்டு மாவீரர் உரைப் பிரகடனத்தின் வழி புலம்பதிந்து உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களுடையதாக மாறியது. இந்நிலையில், 2009க்குப் பின்னரான 17ஆவது ஆண்டு மாவீரர் நாளுக்கான மாதம் தொடங்கிவிட்ட நிலையில், ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தினைச் சனநாயக வழிகளில் முன்னெடுக்க வேண்டியவர்களாக ஈழத்தமிழரின் ஜென்சி தலைமுறையினர் உள்ளனர் என்பதனை உலகில் ஜென்சி பரம்பரையின் வழி ஏற்படும் மாற்றங்கள் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் எடுத்துரைக்கின்றன. ஈழத்தமிழரின் ஜென்சி தலைமுறையே ஈழத்தமிழர் இறைமைக்கான ஒரே பாதுகாப்பு என்பதனை இலக்கு இவ்விடத்தில் வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
அமெரிக்காவில் மட்டுமல்ல, பிரான்ஸ், போர்த்துக்கல், இத்தாலி, யேர்மன், ஸ்பெயின், அல்பேனியா, டென்மார்க் எனப் பல ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வரும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராடும் போராட்டங்களின் முக்கிய பங்காளர்களாக மட்டுமல்ல, போராட்டத்தின் வழி ஏற்புடைய தீர்வுகளைக் கொண்டு வருவதிலும் இந்த ஜென்சி தலைமுறையினரே அதிக அளவில் இருந்திருக்கின்றனர் என்பது ஆய்வுகளால் கண்டறியப்பட்டுள்ளது. இதனை ஈழத்தமிழர்கள் மனதில் இருத்த வேண்டுமென்பது இலக்கின் அழைப்பாகவுள்ளது.
மாணவர்களின் கல்வி, அனைத்துலகத் தரத்திற்கு வழங்கப்படாததினால் உயர் கல்வி மற்றும் ஆய்வுகளில் மாணவர்கள் பங்கேற்பதில் பின்னடைவு மட்டுமல்லாமல், உலகமயமாக்கப்பட்ட வேலைச் சந்தையில் போட்டியிட்டு வேலை பெறவும் இயலாதவர்களாக மாணவர்கள் மாறுகின்ற பொழுது, அது சமகால அரசியல் முறைமைகள் மீதான வெறுப்பாகி, கோபமாகி, உடனடி மாற்றத்தைக் கோரி இளைய சமுதாயத்தை வீறுகொண்டெழவைத்து வருகிறது என்பதே இந்த ஜென்சி தலைமுறையினரின் சமகால அரசியல் போராட்டங்கள் குறித்த உலகப் பொதுவான அரசியல் எதார்த்தமாகவுள்ளது. இந்த உலகப் பொதுவான ஜென்சி தலைமுறையினரின் அரசியல் எதார்த்தத்தினுள் ஈழத்தமிழரின் ஜென்சி பரம்பரையினர் செல்லாதவாறு கடந்த 17 ஆண்டுகளாகச் சிறிலங்காவும், அதற்கு ஈழத்தமிழின அழிப்புக்குத் துணை செய்த உலக நாடுகளும் மிகக் கவனமான முறையில் சட்டரீதியாகவும் திட்டரீதியாகவும் தடுத்து வருகின்றனர்.
அதேவேளை, 13ஆம் நூற்றாண்டு முதல் ஈழத்தமிழர்கள் தாங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் தங்கள் வரலாற்றுத் தாயகமாக இலங்கைத் தீவின் யாழ்ப்பாண வன்னி அரசின் எல்லைகளால் வெளிப்படுத்தப்பட்ட நிலப்பரப்பை வெளிப்படுத்தி வந்த நிலையை, 22.05.1972 முதல் சிறிலங்கா ஆட்சியாளர்கள் மாற்றினர். 04.02.1948இல், 1833இல் தாம் யாழ்ப்பாண வன்னிய அரசின் தமிழர்களின் ஆட்சிப்பரப்புக்களையும், கண்டி கோட்டே சிங்கள அரசின் ஆட்சிநிலப்பரப்புக்களையும் ஒரு அரசாகச் செயற்கையாக இணைத்து, தங்களின் சந்தை, வரி மற்றும் இராணுவ நலன்களுக்காக உருவாக்கிய சிலோன் அரசாங்கத்துக்கு சுதந்திரம் வழங்கிய பிரித்தானியாவின் சோல்பரி அரசியலமைப்பில் ஈழத்தமிழர்களின் இறைமைக்குப் பாதுகாப்பாக இருந்த 29(2) அரசியலமைப்பு விதியைத் தன்னிச்சையாக மாற்றி, வன்முறைப்படுத்திய சிறிலங்கா சிங்கள பௌத்த குடியரசு அரசியலமைப்புப் பிரகடனத்துக்குள் ஈழத்தமிழரைப் படைபல இனங்காணக்கூடிய அச்சத்தால் அடக்கி, அவர்களை அரசற்ற தேச இனமாக்கினர்.
இதனால் கடந்த 54 ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் தங்கள் வரலாற்றுத் தாயகத்தில் தங்களின் இறைமையை மீளுறுதி செய்து, தங்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை மீள்உறுதி செய்தலுக்கான ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்திலேயே உயிர்களையும் வாழ்வையும் அர்ப்பணித்து ஈடுபட்டு, தங்களுக்கான de facto ஆட்சியை, நடைமுறை அரசை, 1978 முதல் 2009 வரை கட்டமைத்து, அதனை 2009இல் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் மூலம் சிறிலங்கா தேசமாகவே இனப்படுகொலைகளாலும் உட்கட்டுமானச் சிதைப்புக்களாலும் செயற்பாட்டுப் பின்னடைவுக்குக் கொண்டு வந்த நிலையில், 17.05.2009 முதல் துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சனநாயக வழிகளில் ஈழத்தமிழர்கள் தங்கள் இறைமையின் மீளுறுதிக்காகப் போராடி வருகின்றனர்.
இந்த வரலாற்று உண்மைகள் ஈழத்தமிழரின் ஜென்சி தலைமுறையினர் பலருக்கு அறியப்படாத ஒன்றாகச் சிறிலங்காவாலும், அதன் ஈழத்தமிழின அழிப்புகளுக்கு ஆதரவு வழங்கிய நாடுகளாலும் தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஈழத்தமிழரின் ஜென்சி தலைமுறையினர் அவர்களின் பிரிக்கப்பட முடியாத அடிப்படை மனித உரிமையான தன்னாட்சி உரிமையின் அடிப்படையில், அவர்கள் தங்கள் இறைமையை மீளுறுதி செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை மேற்கொண்டு, பாதுகாப்புடன் கூடிய அமைதி வாழ்வையும் வளர்ச்சிகளையும் பெறச் சட்டரீதியான உரிமையுள்ளவர்கள் என்கிற அனைத்துலகச் சட்டத்தினை அறியாதவர்களாக உள்ளனர்.
சொந்தத் தாயகத்தில் அடிமையாக்கப்பட்டுள்ள இந்த நிலையை மாற்றி, அவர்களது வரலாற்றுத் தாயகத்தில் அவர்களது வாழ்வுரிமையை நிலைநாட்டுவது பிரிவினைவாதமோ அல்லது பயங்கரவாதச் செயலோ அல்ல என்கிற மனநிலையை ஈழத்தமிழரின் ஜென்சி தலைமுறையினருக்கு உருவாக்க வேண்டிய பொறுப்பு 2008 மாவீரர் உரை மூலம் உலகெங்கும் உலக இனமாக வாழும் ஈழத்தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதை இலக்கு உலகத் தமிழினமாக உள்ள ஈழத்தமிழர்களுக்கு மீள்நினைவுபடுத்த விரும்புகிறது.
ஈழத்தமிழரின் சமகால வரலாற்றை ஈழத்தமிழரின் ஜென்சி தலைமுறையினருக்கு உள்ளது உள்ளபடி எடுத்துரைப்பது என்பது கட்சி – அமைப்பு – இயக்க அரசியலுக்கு அப்பாற்பட்ட அடிப்படைத் தேவையாக உள்ளது. இதனால் இதற்கான பலமான சிந்தனை மையம் ஒவ்வொரு துறைசார் நிபுணர்களையும் இணைத்து, இந்த முள்ளிவாய்க்கால் சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பின் பின்னரான 17ஆவது ஆண்டு மாவீரர் மாதத்திலாவது முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.
ஈழத்தமிழரின் அரசியல் சித்தாந்தங்கள், பொருளாதாரச் சித்தாந்தங்கள் இரண்டும் இந்தச் சிந்தனை மையத்தின் பின்னணியில் எழுதப்பட்டு உலகமயப்படுத்தப்பட்டாலே ஈழத்தமிழர் தாயகத்தினதும் ஈழத்தமிழரினதும் இயற்கை வளங்கள், மூலவளங்கள், மனித வளங்கள் குறித்த உண்மைகள் உலகுக்குத் தெளிவாகும். இதன் வழியாகவே ஈழத்தமிழினத்தின் பலத்தை, வளத்தை உலகு தனது தேவைகளுடன் இணைக்க முயற்சிக்க வைத்தாலே, அது ஈழத்தமிழரை இன்றைய அனைத்துலக அரசியல் ஒழுங்குமுறை சிதறுண்டுள்ள நிலையில் அவர்களுக்கான உலகப் பாதுகாப்பைப் பெற உதவும் என்பதே இலக்கின் பலமான எண்ணமாகவுள்ளது.
கடந்த வாரத்தில் இனந்தெரியாதவர்களால் ஐரோப்பிய நாடுகளில் உணவுப் பாதுகாப்பு முறைகளைச் சேதமாக்கும் நோக்கில், குளிர்சாதன அறைகள், பெட்டிகள் என்பனவற்றின் வெப்பநிலையைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதியுயர் நிலைக்குக் கொண்டு சென்று பொருட்களைப் பயன்படுத்தாதவாறு செய்வது சிக்கலான பிரச்சினையாகவுள்ளது. பிரான்சில் இரத்த வங்கிகளின் வெப்பநிலையை உயர்த்த முயன்று, உரிய நேரத்தில் உணரப்பட்டதால் அது தவிர்க்கப்பட்டுள்ளது.
பறந்து கொண்டிருக்கும் பயணிகள் விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்து அனைத்துலக விமானப் போக்குவரத்தைக் குழப்புதல் முதல், நிதி குறித்த பல்வேறு கொள்ளையடிப்புகளும் குழப்பங்களும் செய்தல், மருத்துவக் குறிப்புகள் உட்படத் தனிப்பட்ட தரவுகளைக் களவாடுதல் எனப் பல்வேறு யாருமே எதிர்பார்க்காத குற்றச் செயல்கள் எல்லாம் அதிகரித்துக் கொண்டே செல்வது உலகம் முழுவதும் நிச்சயமற்ற தன்மைகளையும் நம்பிக்கையீனங்களையும் உருவாக்குகிறது. இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில், அடிபட்ட சிங்கமாக மாறியுள்ள ட்ரம்ப், ஈரான் மேலான பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தி தான் இழந்த அரசியல் பலத்தை மீளப்பெறச் சிந்திக்கலாம் என்கிற எண்ணம் உலகில் பலமாகவுள்ள நேரத்தில், உலகப் போர் எந்நேரமும் வரலாம் என்கிற அச்சம் தொடரத்தான் செய்கிறது.
காலநிலைச் சீர்கேடு உலக நிலையைப் பட்டினி நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது. இன்று உலகம் வாழ்வா சாவா என்கிற போராட்டத்தை நடைமுறை வாழ்வாக்கிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில், அரசற்ற தேச இனமாகவுள்ள ஈழத்தமிழர்களுக்கு ஜென்சி தலைமுறையின் தேவைகளை ஓரளவுக்காவது நிறைவு செய்ய, ஈழத்தமிழர்கள் தமக்குள் உள்ள வேற்றுமைகளையும் வெறுப்புக்களையும் கடந்து, ஒரே தேச இன மக்களாக எழுச்சிகொள்ள வேண்டும் என்பதே மாவீரர்களின் ஒரே விருப்பமாக இருக்கும் என்பதை இந்த மாவீரர் மாதத்தில் ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் நினைவுபடுத்துவதை இலக்கு தனது இம்மாவீரர் மாதக் கடமையாகக் கருதுகிறது.
  ஆசிரியர்

Tamil News