25 கோடி ரூபாய் பெறுமதியான மாநகர சபைக் காணி அபகரிப்பு :சி.வீ.கே. சிவஞானம் கண்டனம்

யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான 25 கோடி ரூபாய் பெறுமதியான காணி ஒன்று மோசடியாக அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மாநகர சபை நிர்வாகம் காட்டியுள்ள அலட்சியப் போக்கு கண்டிக்கத்தக்கது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் யாழ். மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்த ராஜாவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். யாழ்ப்பாணம் முன் வீதி அல்லது இராசேந்திர பிரசாத் வீதியின் மேற்குப்புறமாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டட காணிக்குக் கிழக்காக உள்ள 04 குளி 09 விஸ்தீரணம் கொண்ட மாநகர சபைக்குச் சொந்தமான நிலப்பரப்பு மோசடியாக அபகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் மூலம் புதிய சபை பதவியேற்ற 2025 ஜூன் மாதம் முதல் தான் இது குறித்து தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வந்தபோதிலும், இதுவரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

மாநகர சபைக் காணிகள் தொடர்பாக பொதுச்சபைக் கூட்டத்தில் புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருவதாகவும், இவ்வளவு பெறுமதியான சொத்து அபகரிப்பு விவகாரத்தை மிக முக்கியப் பிரச்சினையாகக் கருதி இக்குழு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இக்கடிதம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து அடுத்த நான்கு வாரங்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து தனக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே மக்கள் அறிதலுக்காக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்த சி.வீ.கே.சிவஞானம், குறித்த கடிதத்தையும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.