தமிழ்பேசும் மக்களை பௌத்த மதத்துக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கும் போக்கு உள்ளது – கஜேந்திரகுமார்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழ்பேசும் மக்களை பெரும்பான்மையின சிங்களவர்கள் தாம் பாதுகாக்கும் பௌத்த மதத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடியவர்கள் என்ற அடிப்படையிலேயே நோக்குவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

புதுடில்லியில் புதன்கிழமை (28) ஆரம்பமான இனச்சுத்திகரிப்புப் பின்னணியில் நிலைமாறுகால நீதி மற்றும் மனித உரிமைகள்: காஷ்மீர் பண்டிதர்கள் மற்றும் இலங்கைத் தமிழ் சமூகத்துக்கு இடையிலான ஒப்பீட்டுத் தொடர்பு’ எனும் மகுடத்திலான 5 ஆவது சர்வதேச மாநாட்டில் ‘இனச்சுத்திகரிப்புச் சூழல்களில் நிலைமாறுகால நீதியும் மனித உரிமைகளும்’ எனும் தலைப்பில் உரையாற்றியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

உலகின் வல்லாதிக்கம் மிக்க நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாகவும், இம்மாநாட்டில் பேசப்படும் விடயங்கள் தமிழ்மக்களின் வாழ்வில் நேரடியாகத் தாக்கம் செலுத்தும் எனவும் சுட்டிக்காட்டிய அவர், தமிழர்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகளுக்கான பின்னணி ஆராயப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இலங்கையில் எண்ணிக்கை அடிப்படையிலான பெரும்பான்மை, சிறுபான்மையின சமூகங்களின் விகிதாசாரம் மற்றும ஒவ்வொரு பிரதேசங்களிலும் பெரும்பான்மையாக வசிக்கும் இனங்களின் பரம்பல் என்பன பற்றி விளக்கமளித்த கஜேந்திரகுமார், இலங்கையில் பௌத்த மதத்தை அதன் முதன்மை வடிவத்திலேயே பேணிப்பாதுகாப்பதற்காக புத்தபெருமானால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் தாம் தான் என்ற எண்ணம் பெரும்பான்மையின சிங்களவர்கள் மத்தியில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழ்பேசும் மக்களை பெரும்பான்மையின சிங்களவர்கள் தாம் பாதுகாக்கும் பௌத்த மதத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடியவர்கள் என்ற அடிப்படையிலேயே நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரமன்றி தமிழகம் உள்ளடங்கலாக தெற்காசியாவின் பல பகுதிகளிலும் பெரும் எண்ணிக்கையான தமிழ்பேசும் மக்கள் இருப்பதனால், அதனை அச்சுறுத்தலாகக் கருதும் இலங்கை அரசு ‘தமிழர்கள்’ என்ற அடையாளத்தையும் அவர்களுக்கான ‘தேசம்’ என்ற அங்கீகாரத்தையும் மறுதலித்து சீர்குலைத்து வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் சர்வதேச சட்டம் என்பது சர்வதேச அரசியலாகவே நோக்கப்படவேண்டிய பின்னணியில், நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன எவ்வாறு அணுகப்படவேண்டும் என்பது பற்றியும் அவர் கருத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.