இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் அமைந்துள்ள ‘புத்தவனம்’ திட்டத்தின் விசேட அதிகாரி பேராசிரியர் மாலப்பள்ளி லக்ஷ்மையா தலைமையிலான உலக பௌத்த அறிஞர்கள் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் குழுவினரும், பிரபல இந்திய நடிகரும் பௌத்த செயற்பாட்டாளருமான கலாநிதி ககன் மாலிக் உள்ளிட்டோரும் நேற்று செவ்வாய்க்கிழமை (27) மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்தனர்.
இதன்போது, பௌத்த சமய நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல், பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் இந்தியா – இலங்கை இடையிலான கலாசார, ஆன்மீக உறவுகளை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட குறித்த அமைப்பின் ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பரஸ்பர புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் இந்தியா – இலங்கை இடையிலான வரலாற்று, கலாசார மற்றும் ஆன்மீக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.



