கடந்த வாரத்தில் அமெரிக்க அரசதலைவரின் முயற்சியான அமெரிக்க ரஸ்ய சீன அரச தலைவர்களின் பீக்கிங் நேரடிச் சந்திப்பு முயற்சிக்கு ரஷ்ய அரசுத்தலைவர் புடின் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதனை மேற்குலகக் கிறிஸ்தவ நாகரிக ஆன்மீக மொழியில் கூறுவதானால் அமெரிக்கா தன்னை மூவொரு கடவுளாக மாற்ற முயலும் செயல் எனலாம் என்பது இலக்கின் இவ்வாரக் கருத்து.
அமெரிக்கா இந்த பீக்கிங் பேச்சுவார்த்தை முயற்சி மூலம் தன்னை உலகின் முதன்மை வல்லாண்மைகளிடை ஒருங்கமைவு கூட்டாண்மை பங்காண்மைகளை கட்டமைத்து தன்னை அனைத்துக்கும் மூலமான தந்தைக் கடவுளாகவும், ரஸ்யாவை தந்தைக் கடவுளின் சித்தத்தை உலகில் நிறைவேற்றும் கடவுளின் 2வது நிலையான இயேசு கிறிஸ்துவாகவும், சீனாவை பிதாவான அமெரிக்கா மகனான ரஸ்யா இடையான அன்பு செய்தலின் செயற்பாடாக இரு நாடுகளது இறையாண்மைகளையும் எங்கும் எதிலும் செயற்படுத்தும் தூய ஆவியாகவும், ஆயினும் ஆள்நிலையில் சமவல்லமையுள்ள மூவராகவும் செயல்நிலையில் பிதாவான அமெரிக்காவின் விருப்புக்குள் அடங்கும் ஒருவராகவும் கிறிஸ்தவ ஆன்மீகத்தின் மூவொரு கடவுள் கோட்பாட்டை இன்றைய சமகால அரசியலின் மூவொரு வல்லாண்மை கோட்பாடாக உலக அரசியலைப் பொருளாதாரத்தை நெறிப்படுத்தும் புதிய உலக அரசியல் ஒழுங்குமுறையாக மாற்ற முனைகிறார் என்பதனை இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது.
மேலும் ரஷ்யாவின் அரசத்தலைவர் புடினை அமெரிக்கா அவரே (Man of humanitarian) என்று புகழாரம் சூட்டுகையில் உக்ரேன் போரில் ரஷ்யா செய்த அனைத்து மனித உரிமைகள் சிறுவர் உரிமைகள் மீறல்களையும் ட்ரம்ப் என்னும் பிதாக்கடவுள் மன்னித்து விட்டது என்பதனை உலகு புரிந்து கொள்கிறது.
அமெரிக்கா தனது புதிய உலக அரசியல் பொருளாதார செயற்கை நுண்ணறிவு மேலாண்மைக்காக வீசும் இந்த இராஜதந்திர வலையை வேடன் எறிந்த வலையையே தமது கூட்டுப்பலத்தால் தூக்கிக் கொண்டு பறந்த பறவைகள் கதையாகச் சீனாவும் ரஸ்யாவும் மாற்றிவிடுவார்கள் என்னும் எச்சரிக்கையை மேற்குலக அமெரிக்க ஐரோப்பிய அவுஸ்திரேலிய கண்ட நாடுகள் விடுத்துள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரித்தானியாவின் ஆங்கில நாளிதழ் ‘த கார்டியன்’ உடைய வெளிவிவகாரக் கட்டுரையாளர் சைமன் டிஸ்டால் (Simon Tisdall) “ ட்ரம்ப் உக்ரேனை ரஸ்யாவிடம் விற்றுவிட்டார். ஐரோப்பிய தலைவர்கள் வாஷிங்டனிலிருந்து வரும் எந்தவொரு வார்த்தையையும் கூட இனி நம்பக்கூடாது. ட்ரம்பைத் தண்டிக்க நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என 22.10. 2026 இல் கருத்துரைத்துள்ளார்.
ஐரோப்பிய பாராளுமன்றம் தனது சுதந்திரமான எண்ணம் சுதந்திரமான கருத்துரைப்புக்கான செயற் பாட்டாளர்களுக்கு வழங்கும் அதியுயர் மனித உரிமைப் பரிசான சகரோவ் (Sakharov) பரிசை ட்ரம்பினால் நிதி வழங்கல் மறுக்கப்பட்டும் செயற்பாடுகள் முடக்கப்பட்டும் கிடக்கும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு வழங்கியுள்ளமை ட்ரம்பிசத்திலிருந்து ஐரோப்பா தனியான பாதையில் செல்லத் தொடங்கி விட்டதை மீளுறுதி செய்துள்ளது.
அத்துடன் “இயற்கையான வர்த்தக மனிதர்” என ட்ரம்ப் பிரித்தானியாவின் இன்றைய பிரதமர் அன்டி பேர்ணம் அவர்களையும் ட்ரம்ப் அவருடனான முதலாவது வெள்ளை மாளிகைச் சந்திப்பில் கருத்துரைத்தமையும் உலகத் தலைவர்களை தனது வர்த்தக நோக்கான அணுகுமுறை அரசியல் வலைக்குள் இழுத்துக்கொள்ளும் முயற்சியாகவே அமைந்தது என்றே ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியமையையும் இலக்கு மீள்நினைவூட்ட விரும்புகிறது.
ஆயினும் பிரான்சின் அணுவாயுத பலத்தை ஜேர்மனியின் உற்பத்திப் பலத்தைக் குறைத்தது போல் அமெரிக்காவால் இலகுவில் குறைக்க இயலாது என்பதால் பிரான்ஸ் சார்ந்த உலக அரசியல் தலைமைத்துவம் கட்டமைக்கவிடாது தடுப்பதற்கான ஆயுதமாக அதிதீவிர வலதுசாரிகள் எழுச்சியையும் எண்ணெய் விலையுயர்வு பொருளாதாரச் சிக்கல்களையும் காலநிலைச் சீர்கேடு சமூகப் பொருளாதார பிரச்சினைகளையும் தூண்டி விடுகையில் உள்ளூர் அரசியல்வாதிகள் மக்ரோனுக்கு எதிர்வினையாக இவற்றை ஜென்சி அல்பா தலைமுறை இளையவர்களின் பிரச்சினைகளுடன் இணைத்துத் தன் கண்ணைத் தன் கையைக் கொண்டு குத்தும் செயலாக பிரான்ஸ் எங்கும் ஜென்சி அல்பா தலைமுறை தெருவில் இறங்கி ஊரை எரிக்கும் செயற்பாடுகளை பிரான்சிய எதிர்க்கட்சித் தலைமைகளே தோற்றுவித்துள்ளன. இந்த ஜென்சி அல்பா இளையவர் தெருவில் இறங்கும் தொற்று பெல்ஜியம் இத்தாலி போர்த்துக்கல், ஸ்பெயின், அல்பேனியா போன்ற நாடுகளிலும் ஏற்பட்டுள்ளதையும் உலகு காண்கிறது.
அதே வேளை கொலம்பியாவில் ட்ரம்ப் சார்பு அரசத்தலைமையை தேர்தல் உருவாக்கியதைப் போலவே பிரேசிலிலும் அமேசன் நதி வளத்தை ட்ரம்ப் ஆசைதீர அள்ளிப்பருகும் வகையில் அமெரிக்க சார்புத்தலைமை தேர்தலில் வெற்றி பெறலாம் என்கிற நிலை காணப்படுகிறது. இதன்வழி பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா தென்னாபிரிக்க கூட்டாண்மை பங்காண்மைக் கட்டமைப்பான பிரிக்ஸினையும் உடைத்து அதன் பொதுப்பணமான பிரிக்ஸை இந்நாடுகள் அமெரிக்க டொலருக்குச் சமாந்திரமான வெளிநாட்டுப்பணமாற்று ஊடகமாக முன்னெடுத்த முயற்சிகளையும் முறியடிக்கும் பலத்தை அமெரிக்கா பெறலாம் என்பது ஆய்வாளர்களின் எதிர்வுகூறலாக உள்ளது. .
இந்நிலையில் இந்தியாவின் குளோபல் சவுத் சீனாவுடனான தனது கூட்டாண்மை பங்காண்மைகளை பலப்படுத்தும் முயற்சியை இந்தியா தனக்கும் சீனாவுக்கும் இடையில் உள்ள 3500 கிலோ மைல் நீள எல்லைப் பிரச்சினையையும் தள்ளிவைத்துவிட்டு இந்திய சீன நல்லிணக்கத்தை ஆசியப் பாதுகாப்பிலும் மத்திய கிழக்குக்கான துணைப்பாதுகாப்பிலும் முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் பலமாக இறங்கியுள்ளது. பொருளாதார மூலோபாயங்களை உருவாக்க பொருளாதாரத் தந்திரோபாயங்கள் வழியாக ஆசிய, ஆபிரிக்க கண்டங்களையும் தாண்டி ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களின் நாடுகளான பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, நோர்வே, கனடா போன்ற நாடுகளுடன் அவற்றுக்கான ஏற்றுமதிகளிலும் தமக்கான இறக்குமதிகளிலும் வரிச்சலுகைகள் திறன் பகிர்வுகள் வழி வர்த்தக ஒப்பந்தமின்றி பங்காண்மைக் கூட்டமைவுகள் மூலம் இந்தியா தன்னை உலகின் வல்லாண்மைகளில் ஒன்றாக முன்னிலைப்படுத்த முயன்று வருகிறது. இன்றைய உலகின் முக்கிய போர்முனைகளான ஈரான், உக்ரேன், டெல் அவிவ் உடனும் இந்தியா நேரடியான வெளிவிவகாரத் தொடர்புகளை வேகப்படுத்தி ஆழப்படுத்தி வருகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் முனைவர் ஜெயசங்கர் அவர்கள் தனது இறைமையின் தனித்துவத்தைப் பேணிய நிலையில் அனைத்து நாடுகளுடனும் உலக வர்த்தக சமநிலையை பேணிட முயல்கிறது என ஆழமான விளக்கத்தையும் அளித்துள்ளார். இந்த வகையில்தான் இந்திய பிரதமர் மோடியை இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு இஸ்ரேல் சுதந்திர தினத்துக்கு தன்னுடன் இணைந்து கொடியேற்ற அழைத்தமையையும் புரிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில்தான் இவ்வாரத்தில் சவூதி அரேபியாவில் இருந்து ராஜதந்திர நிலையில் இல்லாத தனது தூதரக அலுவலர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா அவசர ஆணை வழங்கியுள்ளது. அக்டோபர் 27ஆம் திகதிய இஸ்ரேல் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரையில் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகுவும் நவம்பர் 3ம் திகதிய அமெரிக்க ஆண்டின் நடுத்தவணையில் நடைபெறும் அமெரிக்க காங்கிரஸ் செனட் தேர்தல்களுக்கான 10 நாள் சூறாவளித் தேர்தல் பரப்புரையில் அமெரிக்க அரசத்தலைவர் ட்ரம்பும் படுவேகமாகச் சுழன்று வருகின்றனர்.
ஆயினும் அமெரிக்காவில் 2024 இல் அமெரிக்க மக்களின் நாளாந்த வாழ்க்கைச் செலவைக் குறைப்பேன், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவேன், அமெரிக்காவின் வெளிநாட்டுப் போர்களை நிறுத்துவேன் எனக் கூறி மக்களின் வாக்குகளைப் பெற்ற நிலையில் 21.10. 2026 இல் பணவீக்கம் 3.7 வீதமாக அதிகரித்த நிலையிலும் எரிவாயு கலனுக்கு 4.25 டொலர்களைத் தாண்டிய நிலையிலும் கச்சா எண்ணெய் பரலுக்கு 110 டொலரை அதியுச்ச விலையை அடைந்த நிலையிலும் ஈரான் மேலான அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்போரில் பலத்த நிதிவளத்தை தொழில்நுட்ப வளத்தை இழந்த நிலையிலும் கூடவே மனிதவலுவும் குறிப்பிடத்தக்கதாக மாறிவரும் நிலையிலும் அமெரிக்கா உள்ளது என்பதே யதார்த்த அரசியலாகவுள்ளது. நியூயோர்க் டைம்ஸ் சியன்னா (Siena) கல்லூரி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்புகளின் படி 21. 10. 2026 இல் ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகளை 36 வீதமானவர்களே ஏற்றுக்கொள்கின்றனர். 3494 வாக் காளர்களிடையே நடாத்தப்பெற்ற கணக்கெடுப்பில் 59 வீதமானவர்கள் ட்ரம்பின் பதவிப் பொறுப்புகளைக் கையாளும் முறையை எதிர்த்துள்ளனர். 52 வீதமானவர்கள் டெமொகிரட்சுக்கே தாங்கள் வாக்களிக்கப் போவதாகக் கூறியுள்ளனர். எரிவாயு விலைகளை 73 வீதமானவர்களும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை 69 வீதமானவர்களும் பொருளாதாரக் கொள்கைகளை 64 வீதமானவர்களும் ஈரான் போரை 65 வீதமானவர்களும் எதிர்த்துள்ளனர்.
இதனால் மிட்டேர்ம் தேர்தல்கள் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு தோல்வியை ஏற்படுத்தி காங்கிரசிலும் செனட்டிலும் அவரது கட்சியின் கட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பல மில்லியன்கள் தேர்தலில் செலவிடப்படும் நிலையில் தன்னால் வெற்றிபெற முடியமென ட்ரம்ப் நம்புகின்றார். ஆயினும் தேர்தல் தோல்வியைத் தவிர்க்கப் பல்வேறு விதமான வழிகளில் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வீதத்தைக் குறைக்கும் முயற்சிகள் ட்ரம்பால் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய கிழக்கில் ஏதாவது சூரத்தனம் காட்டி தேர்தலில் வாக்காளர் கவனத்தைத் திருப்பவோ அல்லது தேர்தல் முடிந்த கையுடனேயே ஈரான் மேல் குண்டுகளின் தாய் எனப்படும் 26,000 பவுண்டுகள் எடையுள்ள அணுக்குண்டல்லாத பேரழிவுக் குண்டை வீசி போரை முடிவுக்குக் கொண்டு வரவோ ட்ரம்ப் முயற்சிக்கலாம் என்ற அச்சம் உலகில் உள்ளது. இத்தகைய சூழலில் வல்லாண்மைகளின் மூவொரு ஒருங்கிணைப்பு சிறுதேசிய இனங்களின் இறைமைக்கு பேராபத்தாக மாறி வருகிறது. இவற்றை ஆராய்ந்து ஏற்புடைய முறைமைகளைக் கண்டறிந்து செயற்பட வல்ல நிபுணத்துவக் கட்டமைப்புகள் ஈழத்தமிழர்களுக்கும் காலத்தின் உடனடித் தேவையாக உள்ளதென்பதை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
ஆசிரியர்




