ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளன – அமைச்சர் ஆனந்த விஜேபால

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டில் 18 ஆகக் குறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 2020 முதல் 2026 வரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய 134 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

இதில் 2020 இல் 02, 2021 இல் 04, 2022 இல் 23, 2023 இல் 16, 2024 இல் 42, 2025 இல் 29 மற்றும் 2026 இல் இதுவரை 18 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னல்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் மூலம் சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகள் உட்பட 236 இலங்கையர்களுக்கு சர்வதேச பொலிஸாரின்  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 94 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாகவும் போதைப்பொருள் கடத்தல்காரர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 17 சிறப்புப் பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதுடன், வெளிநாடுகளில் இருந்து செயற்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாட்டிற்கு வரவழைத்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.