இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 22ஆவது மாதிரிக் கிராமம், இலங்கையின் காலி மாவட்டத்தில் 22ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எச். எம். சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து, காலி மாவட்டத்திலுள்ள ‘திதுல’ (Didula) மாதிரிக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகளைத் திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தனர்.
இந்த மாதிரிக் கிராம வீடமைப்புத் திட்டம், இலங்கையின் 25 மாவட்டங்களிலும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சுடன் இணைந்து இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் 2017 ஒக்டோபரில் கைச்சாத்திடப்பட்டது.
இத்திட்டத்தின் ஊடாக இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட 600 குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகளை வழங்குவது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும் மாதிரிக் கிராமத்திலும் 24 வீடுகள் உள்ளடங்குவதுடன், அந்தந்த மாவட்ட வீடமைப்புக் குழுக்களால் தெரிவுசெய்யப்படும் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படுகின்றன.
காலி மாவட்டத்தில் மாதிரிக் கிராமம் கையளிக்கப்படுவதற்கு முன்னர், மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, அனுராதபுரம், பதுளை, மாத்தளை, புத்தளம், கொழும்பு, திருகோணமலை, மொனராகலை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, இரத்தினபுரி, அம்பாறை, குருநாகல், கேகாலை, களுத்துறை மற்றும் பொலன்னறுவை ஆகிய 21 மாவட்டங்களில் இத்திட்டத்தின் கீழான மாதிரிக் கிராமங்கள் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
காலி மாவட்டத்தில் 22ஆவது மாதிரிக் கிராமம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றம் சுமார் 98.6 சதவீதத்தை எட்டியுள்ளது. எஞ்சியுள்ள மூன்று மாதிரிக் கிராமங்களும் விரைவில் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், காலி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வீடமைப்பு வசதிகளை மேம்படுத்துவதையும், இந்தியா – இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கிய முயற்சியாக விளங்குகிறது.



