கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டபோது, ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தன்னைத் தவறாக வழிநடத்தியதாகவும், அதன் விளைவாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே அவர் மீண்டும் சிறை செல்லக் காரணமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதற்காக பௌத்த பிக்குகளிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பின் நகலை ஆய்வு செய்ததில், ஜனாதிபதி செயலகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்த தொழில்நுட்பக் குறைபாடே நீதிமன்றத்தின் இந்த முடிவுக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்டதாக அவர் இன்று (19) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஞானசார தேரருக்கு எதிராக இரு வழக்குகள் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் சட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான மேலதிக சிரேஷ்ட செயலாளர், இந்த பொதுமன்னிப்பு தொடர்பாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று தன்னிடம் தெரிவித்ததாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
எனினும், தேவையான ஆவணங்கள் அமைச்சிற்கு அனுப்பப்படவில்லை என்றும், உரிய அனுமதியைப் பெறாமலேயே தனது கையொப்பம் பெறப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“இது என்னை தவறாக வழிநடத்திய செயலாகும்” என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
தனது ஆட்சிக்காலத்தில் அதிகாரிகள் செய்த இந்தத் தவறுதான், சந்தியா எக்னலிகொடவின் முறைப்பாட்டின் பேரில் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் விளைவாக, ஞானசார தேரர் மீண்டும் சிறை செல்லக் காரணமானது என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும், அந்தத் தீர்ப்பு சரியானது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
தனது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளால் இந்தத் தவறு இழைக்கப்பட்டிருந்தாலும், இதற்காக பௌத்த பிக்குகளிடம் அவர் மன்னிப்பு கோரினார்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து பௌத்த பிக்குகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் விளக்கம் கோரியதைத் தொடர்ந்தே தான் இந்த அறிக்கையை வெளியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.



