‘மதம்’ பிடிக்கும் மதவாதம் பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியுமா அநுர அரசு? : விதுரன்

இலங்கையின் நவீன அரசியல் வரலாற்று நெடுகிலும் ‘பௌத்த மதம்’ மற்றும் ‘சிங்கள தேசியம்’ ஆகிய இரண் டும் சட்டத்தின் ஆட்சியைத் தீர்மானிக்கும் முதன்மைச் சக்திகளாக உருவெடுத்துள்ளன.
கடந்த சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் ஆறு நாட்களாகக் கண்டியிலிருந்து கொழும்பு வரை முன்னெடுக்கப்பட்ட ‘காவி உடைக்கு நீதி’ பாதயாத்திரையும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற பிக்குகளின் போராட்டங்களும், அதன் தொடர்ச்சியாக ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றக் கோரிக்கையும் இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பின் மீதான மற்றுமொரு பாரிய கேள்விக் குறியை ஏற்படுத்தியுள்ளன.
ஆரம்பத்தில் சிறைச்சாலை விதிமுறைகளில் பௌத்த பிக்குகளின் ஆடை உரிமைகள், கண்ணியம் சார்ந்த கோரிக்கையாகத் தொடங்கப்பட்ட போராட்டம், தற்போது சட்டத்தின் முன் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளிக்கு மதத்தின் பெயரால் விலக்குக் கோரும் தீவிர மதவாத அழுத்தமாக உருவெடுத்துள்ளது.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரதேரர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் மத நல்லிணக்கத்திற்குப் பாதகமான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் சட்டரீதியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுத் தண்டனை பெற்றவர்.
2019ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவினால் அவருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு, அரசியல் சாசனத்திற்கு முரணானது மற்றும் தன்னிச்சையானதென நாட்டின் உயர் நீதிமன்றம் செப்டம்பர் 2026இல் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி அதனை இரத்து செய்தது.
உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பைத் தொடர்ந்து, ஞானசார தேரரின் எஞ்சிய தண்டனைக் காலத்தைச் நடை முறைப்படுத்தவும், அவர் மீதான ஏனைய நிலுவை வழக்கு களுக்காகவும் மேல், மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் பிடியாணை பிறப்பித்தன.
இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் சட்டபூர்வமான இத்தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அஸ்கிரிய, மல்வத்து ஆகிய பிரதான பீடங்களின் ஆதரவுடனும், சரத் வீரசேகர, அநுராதா யஹம்லத், சன்ன ஜயசுமன, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்ற தீவிர தேசியவாத அரசியல்வாதிகளின் பின்னணியுடனும் ‘காவி உடைக்கு நீதி’ என்ற பெயரில் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
மகா சங்கத்தினரின் இந்த அழுத்தங்களுக்குப் பணிந்து, அரசாங்கம் உடனடியாகச் செயற்பட்டு சிறைச் சாலை நிலையியல் கட்டளை எண் 356 மற்றும் 550 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொண்டு, சிறை யிலடைக்கப்படும் பிக்குகள் காவி உடை அணிவது மற்றும் அவர்களைக் கையாள்வது தொடர்பான புதிய விதி முறைகளை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை தயாரித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இது தொடர்பான இடைக்கால அறிக்கையை வெளியிட்டுள்ள போதிலும், போராட்ட தேரர்க ளின் இலக்கு தற்போது காவி ஆடையைத் தாண்டி, ‘ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங் கப்பட வேண்டும்’ என்பதாக மாறியுள்ளது.
கடந்த கால வரலாற்றை உற்று நோக்கினால், பேரினவாத பௌத்த ஆதிக்கத்திற்கு ஆட்சியாளர்களும் அரச நிறுவனங்களும் பணிந்து போனபோதெல்லாம் நாடு சந்தித்த பேரழிவுகளும் வீழ்ச்சிகளுமே அதிகம் என்பதை உணர முடியும்.
1956ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ‘சிங்களம் மட்டும்’ சட்டம் பௌத்த தேசியவாத அமைப்புகளின் அழுத்தத்தினாலேயே தீவிரப்படுத்தப்பட்டது. இது நாட்டின் மொழியியல் மற்றும் சமூகக் கட்டமைப்பைப் பிளவுபடுத்தி, தசாப்த கால இன முரண்பாட்டிற்கும், இறுதியில் பேரழிவை ஏற்படுத்திய முப்பதாண்டு கால கொடூர உள்நாட்டுப் போருக்கும் வித்திட்டது.
1980களின் பிற்பகுதியில் உருவான அரசியல் கொந்தளிப்புகளிலும், நல்லாட்சி அரசாங்கத்தின் போது தீவிரமடைந்த பௌத்த தீவிரவாத அமைப்புகளின் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளிலும் மதவாதத்தி ற்கு அரசு இடமளித்ததன் விளைவாகவே நாடு பொருளாதார ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் வீழ்ச்சியடைந்தது.
2019ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான சூழலில், பௌத்த பேரினவாத அலையைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்த சக்திகள் சட்டத்தின் ஆட்சியைப் புறந்தள்ளி மத மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றதன் இறுதி விளைவே, 2022 இல் நாடு சந்தித்த பாரிய பொருளாதார பொறிவும் மக்களின் எழுச்சியுமாகும்.
கடந்த கால வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக உணர்த்துவது என்னவெனில், மதவாதத்திற்கு அரசு அடிபணியும் போதெல்லாம் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து, முதலீடுகள் விலகி, நாடு உலக அரங்கில் தனிமைப்படுத் தப்பட்டு பொருளாதார ரீதியாக அதலபாதாளத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஜனநாயக அடிப்படையிலான ஒரு நாட்டின் சட்டக் கட்டமைப்பில் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கோட்பாடே மிக முக்கிய தூணாக விளங்குகின்றது. அரசியலமைப்பின் பிரிவு 12(1) நாட்டின் ஒவ்வொரு குடி மகனுக்கும் சமமான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.  ஆனால், இலங்கையில் ஒரு நபர் அணியும் ‘காவி உடை’ அல்லது அவர் சார்ந்த ‘’மத அடையாளம்’ அவருக்குச் சட்ட விலக்களிக்கும் ஒரு கேடயமாகப் பயன்படுத்தப்படுவது தொடர்கதையாகிவிட்டது. ஞானசார தேரரின் விவகாரத்தில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் மத நம்பிக்கைகள் சார்ந்தவை அல்ல.
மாறாக நாட்டின் சட்டத்தையும் நீதிமன்ற இறை யாண்மையையும் சவாலுக்கு உட்படுத்திய குற்றங்களாகும். அவ்வாறிருக்க, அவரொரு பௌத்த துறவி என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோருவதும், அதற்காகக் கட்டமைப்பு ரீதியிலான அழுத்தங்களைப் பிரயோகிப்பதும் சட்டத்தின் ஆட்சியை அடியோடு தகர்க்கும் செயலாகும்.
மதத்தலைவர்கள் அல்லது துறவிகள் குற்றம் செய்யும்போது, அவர்களை மத அடையாளத்திற்கு பின்னால் ஒளிந்துகொள்ள அனுமதிப்பது,(பௌத்த தேரர்களுக்கு மட்டும்) நாட்டில் ‘சட்டத்திற்கு அப்பாற்பட்டதொரு வர்க்கத்தை’ உருவாக்குவதற்குச் சமமாகும். இது சாதாரண குடிமகன் ஒருவனுக்கும், மத அதிகாரம் கொண்ட ஒருவருக்கும் இடையிலான சட்டப் பாதுகாப்பில் பாரிய இடைவெளியை ஏற்படுத்துகிறது.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வராகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரும், மல்வத்து பீடத்தின் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரும் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஞானசார தேரரின் விடுதலை குறித்தும், பிக்குகளை அடைத்து வைப்பதற்குத் தனியான சிறை வளாகங்களை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிக்குகளுக்குரிய மதக் காரியங்களைச் செய்வதற்கான சுதந்திரமும் கண்ணியமான நடத்தையும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால், குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு நபரை ‘துறவி’ என்ற காரணத்திற்காகப் பிரத்யேகமாகப் பிரித்து வைப்பதும், அவரை விடுவிக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதும் நீதித்துறை நிர்வாகத்தில் மத நிறுவனங்கள் நேரடியாகத் தலையிடும் அபாயகரமான போக்கைக் காட்டுகிறது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய அஸ்கிரி பீடத்தின் மகா நாயக்க தேரர் வராகொட ஞானரத்ன தேரர் மற்றும் அனுநாயக்க தேரர் நாரம்பனாவே ஆனந்த நாயக்க தேரர் ஆகியோரிடம் தெரிவிக்கையில், ‘ஞானசார தேரர் விவகாரம் நீதிமன்றத்துடன் தொடர்புடையது அரசியலமைப்பின் பிர காரம் ஜனாதிபதி சிறந்த தீர்மானத்தை எடுப்பார்’ எனக் குறிப்பிட்டிருந்தாலும், வரலாற்று ரீதியாக இலங்கையின் அரச தலைவர்கள் மகா சங்கத்தினரின் பேரினவாத அழுத் தங்களுக்குப் பணிந்து நீதித்துறையின் முடிவுகளை மாற்றியமைத்த வரலாறே அதிகமுள்ளது.
இலங்கை அரசு மற்றும் நீதித்துறை நிர்வாகம் இத்தகைய மதவாத அழுத்தங்களுக்குத் தொடர்ந்தும் துணைபோகுமாயின், அது நீதித்துறையின் சுயாதீனம் முற்றிலும் சீர்குலைவதற்கே வழிகோலும். உயர் நீதிமன்றம் ஒரு ஜனாதிபதி பொதுமன்னிப்பை ‘சட்டவிரோதமானது’ என்று இரத்து செய்த பின்னரும், மீண்டும் அதே நபருக்கு அரசியல்-மத அழுத்தங்கள் காரணமாகப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால், அது நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் நம்பகத்தன்மையையும் முழுமையாக அழித்துவிடும்.
சட்டத்தின் ஆட்சி பலவீனமடைம்போது, மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் வெறுப்புப் பேச்சுகள், இனவாதத் தூண்டல்கள் மற்றும் வன்முறைகள் ‘புனிதமானவையாக’ சித்திரிக்கப்பட்டு, குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளும் கலாசாரம் உருவெடுக்கும்.
பௌத்த பேரினவாதம் சட்டத்தையும் மீறிச் செயற்பட அரசு அனுமதிக்கும் பட்சத்தில், நாட்டின் தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகங்கள் அரச கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை முற்றாக இழப்பார்கள். இது மீண்டுமொரு சமூக ஸ்திரமின்மைக்கும் சர்வதேச அளவில் இலங்கைக்குப் பாரிய அவப்பெயருக்கும் வழிவகுக்கும்.
நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளிலிருந்து மீண்டெழ வேண்டுமா யின், கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மதவாதச் சுவர்களையன்றி சட்டத்தின் ஆட்சியையே முதன் மையாக நிறுத்த வேண்டும்.
பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்த போதிலும், அது சட்டத்தை மீறுவதற்கோ அல்லது குற்றமிழைத்தவர்களைப் பாதுகாப் பதற்கோ வழங்கப்பட்ட உரிமம் அல்ல.
அரசாங்கமும் தற்போதைய ஜனாதிபதியும் மகா சங்கத்தினரின் நியாயமான மத ஆசாரக் கோரிக்கைகளை மதிப்பதே அதேவேளை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதில் எவ்வித விட்டுக்கொடுப்பிற்கும் இடமளிக் கக்கூடாது.
ஞானசார தேரர் விவகாரத்தில் மதவாத அழுத்தங் களுக்கு அரசு பணிந்துபோனால், அது பௌத்தத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் குற்றங்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்குவதாகவே அமையும்.
பௌத்த தர்மத்தின் உண்மையான சாராம்சம் ‘அகிம் சையும் நீதியுமே’ அன்றி, குற்றவாளிகளைப் பாதுகாப் பதல்ல என்பதை உணர்ந்து, இலங்கை அரசு கடந்த கால வீழ்ச்சிகளை நினைவில் கொண்டு மதவாதத்தை முறி யடித்து சட்டத்தின் ஆட்சியை உறுதியுடன் நிலைநிறுத்த வேண்டும். இந்த விடயத்தில் அநுர அரசு நெகிழ்ச்சி தன்மையை காண்பிக்குமாக இருந்தால் அதுவே அதன் அதிகார வீழ்ச்சிக்கான முதலடியாக இருக்கும்.