தங்களது அரசாங்கம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிக்கும் என்றும், நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
நேற்று ( 18) பதுளையில் நடைபெற்ற ‘தேசிய மக்கள் சக்தி’ மகளிர் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, நீதித்துறையின் இறுதித் தீர்ப்புகளை அரசாங்கம் ஏற்கும் என்றும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட தரப்பிலிருந்து அந்தத் தீர்ப்புகளை மாற்றியமைக்க யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் எச்சரித்தார்.
சட்டங்களை இயற்றும் பொறுப்பு பாராளுமன்றத்திற்கு உரியது என்றும், காவல்துறை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு போன்ற நிறுவனங்கள் விசாரணைகளையும் சட்ட அமுலாக்கத்தையும் மேற்கொள்கின்றன என்றும் ஜனாதிபதி விளக்கினார்.
இருப்பினும், சட்டத்தை விளக்குவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமான இறுதி அதிகாரம் நீதித்துறையிடமே, குறிப்பாக உயர் நீதிமன்றத்திடமே உள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.
“உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கும்போது, சிலர் அதை நீக்கக் கோரி கூச்சலிடுகிறார்கள். இத்தகைய சூழலில் ஒரு நாடு எவ்வாறு இயங்க முடியும்?” என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
“எங்களிடமிருந்து எந்த முடிவுகளையும் யாரும் எதிர்பார்க்க வேண்டாம்.
நீதிமன்றத் தீர்ப்புகளே சட்டத்தின் அதிகாரபூர்வமான தீர்மானங்கள் என்று கருதும் அரசாங்கம், அந்தத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்” என்று ஜனாதிபதி கூறினார்.
மேலும், சட்டக் கட்டமைப்பைக் குலைக்கும் முயற்சிகளுக்கு எதிராக எச்சரித்த ஜனாதிபதி, நாட்டின் எதிர்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த, அனைவருக்கும் சமமான சட்ட நடைமுறை கொண்ட நாடொன்று அவசியமெனக் குறிப்பிட்டார்.
அத்துடன், சட்டம் தம்மை நெருங்காது எனக் கருதியவர்களும், கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியவர்களுமே தற்போது சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு எதிராகக் கூக்குரல் எழுப்புகின்றனர் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



