மின்னிணைப்பு இன்றி அவதியுறும் ஏம்பைக்குளம் கிராமமக்கள்!

வவுனியா வடக்கு பிரதேசசெயலகப் பிரிவில், பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட ஏம்பைக்குளம் கிராமமக்கள் மின்னிணைப்பு இன்றி பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று குறித்த பகுதிக்கு நேரில் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மின்னிணைப்பு இன்றி அப்பகுதி மக்கள் எதிர் நோக்கும் இடர்பாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

குறிப்பாக ஏம்பைக்குளம் கிராமத்தில் 30வரையான குடும்பங்கள் வசித்துவருகின்றபோதும், இதுவரை அப்பகுதிக்கு மின்னிணைப்பு வழங்கப்படவில்லைஎன அப்பகுதிமக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.

மின்னிணைப்பு இன்மையால் மாணவர்களின் கற்றல்செயற்பாடுகள், தமது விவசாய நடவடிக்கைகள் என்பவற்றை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் அப்பகுதி மக்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டினர்.

எனவே தமது கிராமத்திற்கு மின்னிணைப்பைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன், அப்பகுதி மக்களின் கோரிக்கையினையும் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், ஏம்பைக்குளம் கிராமத்திற்கு மின்னிணைப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.