ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு’ மற்றும் ‘தீவிரக் குற்றம்’ என்பவற்றுக்கான வரைவிலக்கணங்களை விரிவாக வரையறுக்கும் அதேவேளை, பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளருக்குச் சந்தேக நபர் ஒருவரை ஒரு வருடம் வரை தடுத்து வைப்பதற்கு உத்தரவிடும் அதிகாரத்தை வழங்கும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டமூலம் இந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அல்லது வேறு ஏதேனும் பொருள்சார் நன்மைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெற்றுக்கொள்வதற்காக, தீவிரக் குற்றம் ஒன்றில் ஈடுபடும் நோக்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட கட்டமைக்கப்பட்ட குழுவே ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு’ என இந்த சட்ட மூலம் வரைவிலக்கணம் கூறுகிறது.
இதற்கிடையில், ‘கட்டமைக்கப்பட்ட குழு’ என்பது உடனடித் தீவிரக் குற்றமொன்றை இழைப்பதற்காகத் தற்செயலாக உருவாகாத ஒரு குழுவாகும். இதற்கு உறுப்பினர்களுக்கான முறையான பதவிகள், தொடர்ச்சியான உறுப்புரிமை அல்லது வளர்ச்சியடைந்த கட்டமைப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தேச சட்டத்தின் கீழ், தீவிரக் குற்றம் இழைக்கும் நோக்கத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு ஒன்றின் உறுப்பினராக இருப்பதற்காக மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்படுபவர்களுக்கு, 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஒரு மில்லியன் ரூபாய் வரை தண்டமும் விதிக்கப்படலாம்.
சட்ட மூலத்தின் 3ஆவது பிரிவு ‘தீவிரக் குற்றம்’ என்பதை, நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய எவ்வாறானதொரு குற்றமும் ஆகும் என வரைவிலக்கணம் செய்கிறது. அக்குற்றங்கள் எவை என்பதற்கான நீண்ட அட்டவணை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சட்டங்களின் கீழ் வரும் பெருமளவான குற்றங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
புராதனப் பொருட்கள் கட்டளைச் சட்டம், குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான சட்டம்,இரசாயன ஆயுதக் மாநாட்டச் சட்டம், கணினி குற்றச் சட்டம் , கலால் கட்டளைச் சட்டம், தாவர மற்றும் விலங்கினப் பாதுகாப்புச் சட்டம், சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் அறிவுசார் சொத்துச் சட்டம் என்பனவாகும்
பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் சந்தேக நபர் ஒருவரை ஒரு தடவையில் இரண்டு மாதங்கள் வரை தடுத்து வைப்பதற்கு அதிகாரம் அளிக்கும் தடுப்புக் காவல் உத்தரவுகளைப் பிறப்பிக்க இந்த உத்தேச புதிய சட்டம் வழிவகை செய்கிறது. இந்தக் கால எல்லையானது அதிகபட்சமாக ஒரு வருடம் வரை நீடிக்கப்படலாம்.
ஒரு நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் அறியப்பட்ட உறுப்பினர்களுடன் உடல் ரீதியான அல்லது மெய்நிகர் சந்திப்புகளில் ஈடுபாடு அக்குற்றக் குழுவின் அறியப்பட்ட தற்போதைய அல்லது முன்னாள் உறுப்பினர்களால் அந்நபர் உறுப்பினராக அடையாளம் காணப்படுதல்.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்களால் பயன்படுத்தப்படும் உடைப் பாணி, கை அடையாளங்கள், மொழி அல்லது பச்சைக் குத்துதல் போன்றவற்றை அந்நபர் பின்பற்றுதல்.அக்குற்றக் குழுவின் அறியப்பட்ட உறுப்பினர்களுடன் அந்நபர் தொடர்பைப் பேணுதல் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்திற் கொள்ளும்.
புதிதாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இந்த மசோதா குறித்து வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொள்கை மாற்றத்திற்கான மையம் உத்தேச சட்டத்தைக் கடுமையாகச் சாடியுள்ளது. ‘இது பரந்த, தெளிவற்ற மற்றும் விரிவான மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அர்த்தமுள்ள பாதுகாப்புகள் எவையும் இதில் பெயரளவிற்குக்கூட இல்லை’ எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மசோதாவானது ‘வழக்கமான குற்றவியல் சட்டத்தில் கஷ்டப்பட்டுப் பெற்ற பாதுகாப்புகளைப் பின் தள்ளுகிறது எனவும், சித்திரவதைகளை வேரூன்றச் செய்வதற்கும் அடிப்படை உரிமைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதற்கும் சாத்தியமான இணைக் கைது மற்றும் தடுப்புக் காவல் முறையை உருவாக்குகிறது’ எனவும் அந்த அமைப்பு மேலும் எச்சரித்துள்ளது.



