இலங்கை அரசியல் வரலாற்றில் தடுத்து நிறுத்த முடியாத பேராதிக்கச் சக்தியாகவும், வீழ்த்த முடியாத குடும்ப ஆட்சியாகவும் விளங்கிய ராஜபக்ஷ குடும்பத்தின் பிடி தளர்ந்து, அவர்கள் ஒவ்வொருவராக நீதிமன்றப்படிகளை யும் சிறைக்கதவுகளையும் மிதிக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.
முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக் கப்பட்டுள்ளமையானது, இலங்கையின் அதிகார அரசியலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய திருப்பமாகும்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க வின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது, அது அன்றைய ஆட்சியாளர்களின் அரசியல் பழிவாங்கலென விமர்சிக் கப்பட்டதைப் போல, ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் சிறைவாசத்தை ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன அரசியல் பழிவாங்கலாகச் சித்தரிக்க தீவிரமாக முயற்சிக்கிறது.
ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ளது. ராஜ பக்ஷக்கள் மீது தமக்குத் தனிப்பட்ட கோபதாபங்களோ பகையோ இல்லை என்றும், நாட்டின் பொதுச்சொத்தைச் சூறையாடியவர்கள் எவராயினும் அவர்கள் சட்டத்தின் பிடி யிலிருந்து தப்ப முடியாது என்பதே தமது கொள்கை என்றும் உறுதியாகக் கூறுகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்த இரண்டு ஆண்டுகளில், ஊழல் மற்றும் நிதி முறை கேடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் முன்னெப்பொழுதும் இல்லாத வீச்சை எட்டியுள்ளன. பிரதியமைச்சர் சுனில் வட்டகல மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 16 முன்னாள் அமைச்சர்கள், ஒரு முன்னாள் முதலமைச்சர், 4 முன்னாள் அமைச்சர்களின் மனைவிகள் மற்றும் 7 பிள்ளைகள் ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இதில் முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத் கமகே, பஷில் ராஜபக்ஷ, ராஜித சேனாரத்ன, ரவி கருணா நாயக்க, பிரசன்ன ரணதுங்க, ஏ.எச்.எம். பௌசி, கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கும் விசாரணைகளுக்கும் உள் ளாகியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டது முதல், நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளாக இருந்த பலர் வரை கைது படலத்தில் சிக்கியுள்ளது, முந்தைய ஆட்சிகளில் ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் எந்தளவிற்கு மலிந்து காணப்பட்டிருந்தன என்பதைத் தெளிவாக்குகிறது.
இந்த விசாரணை வளையத்திற்குள் ராஜபக்ஷ குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் தீவிரமாகக் கொண்டுவரப்பட்டுள்ளனர். ‘சிரிலிய’ மற்றும் அரச வங்கியிலிருந்து நிதி பெறப்பட்டுத் துஷ்பிரயோகம் செய்யப் பட்ட குற்றச்சாட்டில் ஷிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கிரிஷ் குழுமம், பிரான் எயார் பஸ் கொள் வனவின்போது இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் கறுப்புப் பணச் சுத்திகரிப்பு தொடர்பில் நாமல் ராஜ பக்ஷ ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவன நிதி முறை கேடுகள் மற்றும் விண்வெளித் திட்டப் போர்வையில் இடம்பெற்ற அரச நிதி துஷ்பிரயோகம், கடற்படையில் இணைந்து பிரித்தானிய ரோயல் கடற்படைக்குப் பயிற்சிக் குச் சென்றமை குறித்த விசாரணைகளில் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் ரோஹித்த ராஜபக்ஷ ஆகியோர் சிக்கியுள் ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரச வளங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அடிக்கடி விசாரணைக்கு அழைக்கப்பட்டு வரு கின்றனர்.
திவிநெகும நிதி முறைகேடு வழக்குகளில் பஷில் ராஜபக்ஷவை அமெரிக்காவிலிருந்து கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. சமல், ஷசீந்திர, நிருபமா மற்றும் ஜாலிய விக்ரமசூரிய, உதயங்க வீரதுங்க போன்ற உறவினர்களும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி நீதிமன்ற அலைச்சல்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச் சாட்டுகளுக்காக நாட்டின் உயர்மட்ட அரசியல் குடும்பங் கள் தண்டிக்கப்படுவது இலங்கைக்குப் புதியதாக இருக்க லாம். ஆனால் உலக வரலாற்றில் இதற்கு எண்ணற்ற முன்னு தாரணங்கள் உள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பெர்டினாண்ட் மார்க்கோஸ் மற்றும் அவரது மனைவி இமெல்டா மார்க்கோஸ் ஆகியோர் பில்லியன் கணக்கான அரச நிதியைச் சூறையாடியதற்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைகளுக்கும் சொத்துப் பறிமுதல்களுக்கும் உள்ளாகினர்.
மலேசியாவில் ‘1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட்’ நிதி மோசடி வழக்கில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போதும் அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டார்.
தென் கொரியாவின் முன்னாள் பெண் ஜனாதிபதி பார்க் கென்-ஹே, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகளுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வா மற்றும் பெரு நாட்டின் பல முன்னாள் அதிபர்கள் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
உலகளவில் இரும்புப்பிடி கொண்டுள்ள சீனாவில் கூட, கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி மரண தண்டனை வரை விதிக் கப்படும் நிலை தொடர்கிறது.
ராஜபக்ஷவினரதும் முந்தைய ஆட்சியாளர்களின தும் ஊழல்களைத் தண்டிக்க முனைவதாகக் கூறும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விமர்சனங் களுக்கு அப்பாற்பட்டது அல்ல.
உலக வரலாற்றில் முற்றாக ஊழலற்ற அரசாங்கம் இருந்ததாகச் சரித்திரம் இல்லை. தற்போதைய அரசாங்கமும் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில், எரிபொருள் கொள்வனவு, கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் மற்றும் நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் எனப் பல புதிய குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த நடுநிலையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை கண்டறியப் படாத வரை, ‘நாங்கள் யோக்கியமானவர்கள்’ என்ற அரசாங்கத்தின் வாதம் முழுமை பெறாது.
மற்றொரு அரசாங்கம் வந்துதான் இவற்றை விசாரிக்க வேண்டும் என்ற நிலை உருவானால், தற்போ தைய ஆட்சியாளர்களின் வெளிப்படைத்தன்மையும் கேள்விக்குறியாகவே அமையும்.
ஒரு முக்கியமான அரசியல் யதார்த்தத்தையும் நாம் கடந்து செல்ல முடியாது. ராஜபக்ஷவினர் புரிந்த பொருளாதா ரக் குற்றங்களுக்கும் நிதி மோசடிகளுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கும் தற்போதைய அரசாங்கம், தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கான பொறுப்புக்கூறல் விடயத்தில் முழுமையான மௌனம் காக்கிறது.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பதிலளிக்கும் கடப்பாட்டிலிருந்து ராஜபக்ஷவினரைப் பாது காப்பதில் தற்போதைய ஆட்சியாளர்களும் உறுதியாகவே நிற்கின்றனர்.
கடந்த காலங்களில் அதிகாரப்போதையில் மூழ்கி, நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, சட்டத்தையும் ஜனநாயகத்தையும் ஏளனம் செய்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு, அவர்கள் புரிந்த தவறுகளின் விளைவே தற்போதைய சிறைவாசமும் நீதிமன்ற அலைச்சல்களும் ஆகும்.இருப்பினும், அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமைக்காகத் தண்டனை வழங்குவது எவ்வளவு முக்கியமோ, அதேயளவிற்குத் தமிழ் மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளுக்கும் நீதியை வழங்குவதே உண்மையான சட்டத்தின் ஆட்சியாக அமையும்.



