ஊழல் விடயங்களுக்காக எடுக்கும் கரிசனை,வலிந்து காணாமலாக்கப்பட்ட விடயத்தில் இல்லை!

ஊழல், இலஞ்சங்கள் விடயங்களுக்காக எடுக்கிற கரிசனையை இந்த அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, அவர்களுக்கு என்ன நடந்தது என்றொரு பொறுப்புக்கூறல் மற்றும் எந்தவொரு நகர்வும் இதுவரை நகர்த்தப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (9) மட்டக்களப்பு நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அ.அமலநாயகி இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.